ஈஷா வலைத்தளத்தில் வெளியாகும் இந்த புதிய தொடர், இயற்கை விவசாயம் குறித்த உங்கள் பார்வையை மாற்றியமைப்பதாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை! இங்கு வெளியாகவுள்ள பயன்மிக்க தகவல்கள் விவசாயிகளுக்கானது மட்டுமல்ல, நம் ஒவ்வொருவருக்குமானதாகும். பூமித் தாயின் மண்மடியில் அறியாமையால் விதைத்திட்ட இரசாயன நஞ்சினை நிறுத்திவிட்டு, இனியேனும் இயற்கை வழிக்கு மாறினாலன்றி பூமித்தாய் புன்னகை பூக்கமாட்டாள் என்பதை இத்தொடர் பிரதிபலிக்கும்!

இத்தொடரில் வரும் ‘கள்ளிப்பட்டி கலைவாணி’ கதாப்பாத்திரம் வாசகர்களை அலுக்கச்செய்யாமல் சுவாரஸ்யமாய் கொண்டுசெல்வார். மனதில் தோன்றியதை பட்டென பேசி, வெகுளியான சிரிப்புடன் ஜென்குரு சொல்வதுபோன்ற தத்துவங்களையும் உதிர்த்து, தொடருக்கு சுவை கூட்டவிருக்கிறார் இந்த கள்ளிப்பட்டி கலைவாணி! கூடவே, மண்மனம் மாறாத கிராமத்து உடல்மொழியுடன் அவர் சொல்லும் விவசாயப் பழமொழிகள் உங்களை இரசிக்கவைக்கும்.

இத்தொடரில் நீங்கள் அறியப்போவது...

சத்குருவின் வழிகாட்டுதலில் ஈஷா விவசாய இயக்க தன்னார்வத் தொண்டர்கள், இயற்கை வேளாண் வித்தகர் திரு. சுபாஷ் பாலேக்கர் அவர்களை அழைத்து, கடந்த டிசம்பரில் 8 நாட்கள் வகுப்பினை ஏற்பாடு செய்திருந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவசாயிகள் அந்தந்த பகுதிகளுக்கேற்ப 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டனர். இந்த குழுவினர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்த வழிகாட்டுதல்களை வழங்கும் விதமாக சந்திப்புக் கூட்டங்கள் அவ்வப்போது தொடர்ந்து நிகழ்த்தப்படுகின்றன.

கள ஆய்வுப்பணிகள்

மேலும், இயற்கை விவசாயத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு வரும் விவசாயிகளை சந்தித்து, அவர்களின் விவசாய நிலங்களுக்கு நேரில் சென்று, அவர்கள் கடைபிடிக்கும் வழிமுறைகள், புதிய உத்திகள், அனுபவங்கள் என அனைத்தையும் கேட்டறிந்து மற்ற விவசாயிகளுக்கும் அதனைக் கொண்டு சேர்க்கும் வகையில் ஆவணப்படுத்தப்படுகிறது.

கூடவே, சிறப்பு பயிற்சி வகுப்புகளும், குறிப்பிட்ட பயிர்கள் மற்றும் மரங்கள் குறித்த ஒருநாள் பயிற்சி வகுப்புகளும் தொடர்ந்து ஒருங்கிணைக்கப்படுகின்றன.

இந்த கள ஆய்வுகள், சந்திப்பு கூட்டங்கள், சிறப்பு வகுப்புகள் என பல்வேறு நிகழ்வுகளில் பெறப்பட்ட விவசாயம் சார்ந்த தகவல்களையும் விவசாயிகளின் அனுபவப் பகிர்வுகளையும் இங்கே உங்கள் பார்வைக்கு கொண்டுவரவிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்கிறோம்! இதன்மூலம் அந்த விவசாயிகளைப் பெருமைப்படுத்த உள்ளோம் என்பதே நிதர்சனம்!

நீங்கள் அறிந்திராத பல்வேறு விவசாய தகவல்களை அறிந்துகொள்ள எதிர்வரும் பதிவுகளுக்கு காத்திருங்கள்!

வறட்சியில் பலபயிர் சாகுபடி

பூமித் தாயின் புன்னகை!-இயற்கை வழி விவசாயம்- பகுதி 1

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தை பிற விவசாயிகளுக்கும் எடுத்துச் செல்லும் நோக்கத்தில், ஈஷா விவசாயக் குழுவினர் ஜீரோ பட்ஜெட் விவசாயிகளின் தோட்டங்களை பார்வையிட்டு வருகின்றனர். இவங்க கூட இணைந்து பயணம் செய்து பார்வையிடும் ‘கள்ளிப்பட்டி கலைவாணி’ கதாப்பாத்திரம் உங்க கூட இடையிடையே தன் கருத்தை கொங்கு தமிழில் பகிர்ந்துக்க போறாங்க!

ஜீரோ பட்ஜெட்டில் சாதிக்கும் காங்கேயம் முத்துராஜ்!

காங்கேயத்திற்கு அருகே வீரசோழபுரத்தில் சுமார் 28 ஏக்கரில் அமைந்துள்ள தனது பண்ணையில் 6 ஏக்கரில் தென்னையும், 2 ஏக்கரில் முருங்கையும், வாழை மற்றும் எலுமிச்சை 1 ஏக்கரிலும் பயிர் செய்துள்ளார் திரு.முத்துராஜ். இங்கே தெளிப்பு நீர் பாசன முறை மூலம் காய்கறிகள் பயிர் செய்யப்படுகின்றன. ஈஷா ஜீரோ பட்ஜெட் 8 நாள் இயற்கை விவசாயப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டதில் இருந்து முழுமையான இயற்கை விவசாயத்திற்கு மாறியிருக்கிறார்.

காங்கேயம் நாட்டு மாடுகள் மூன்றும், இரண்டு கன்றுகளும் உள்ளது. செம்மறி ஆடுகள் 25 இவரிடம் உள்ளது.

ஏனுங்க பாத்தீங்களா... காங்கேயம்னு சொன்னாலே எல்லாருக்கும் காளைமாடு நினைவுக்கு வந்திருமில்லிங்க?! அதெப்படி நம்ம வீரசோழபுரத்தில இருந்துகிட்டு மாடு இல்லேன்னா அப்புறம் என்ன அர்த்தமுங்க! நம்ம முத்துராஜ் அண்ணா பண்ணையில நாட்டு மாடுகள பாத்தப்போ எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்ததுங்க. அட... இந்த சல்லிக்கட்ட வேற இப்ப நிறுத்திட்டாங்க, நடக்குமா நடக்காதான்னு தெரியலயே...! நாட்டு மாடுங்கல்லாம் இருந்தாதானுங்க விவசாயத்துக்கு நல்லது!

இயற்கை விவசாயமுறைகளை செவ்வனே பின்பற்றும் முத்துராஜ் அவர்கள், தென்னையில் பாலேக்கர் ஐயா கூறிய வழி முறைகளை கடைபிடிக்கத் துவங்கியுள்ளார். அரை ஏக்கரில் தென்னை வரிசைகளுக்கு நடுவே அகழிகள் (Trench) செய்து மூடாக்கு இட்டுள்ளதால், மற்ற மரங்களுடன் ஒப்பிடும்போது, இந்த அரை ஏக்கரிலுள்ள மரங்கள் நன்றாக உள்ளன.

வெற்றிகரமான ஜீரோ பட்ஜெட் நுணுக்கங்கள்!!

பத்து அடி சுற்றளவில் கிளைகள் வளர்ந்து நல்ல காய்ப்பில் உள்ள முருங்கைக்கு அருகில் துலுக்க சாமந்தி நட்டுள்ளதால் பூச்சிகளினால் மகரந்தச்சேர்க்கை நன்றாக நடக்கிறது; முந்தய அறுவடையைவிட அதிகமாக காய்கள் பிடிக்கிறது.

பூமித் தாயின் புன்னகை! - இயற்கை வழி விவசாயம், Bhumithayin punnagai - iyarkai vazhi vivasayam

அட... நீங்களே சொல்லுங்க, பூச்சி இருந்தாதானுங்க மகரந்த சேர்க்க நடக்கும்! இந்த இரசாயன மருந்தடிச்சு ஒட்டுக்க எல்லா பூச்சியையும் கொன்னுபோட்டா அப்புறம் வௌச்சல் எங்க இருந்துங்க வரும்? அப்புறம் பூச்சியெல்லா இலைய சேதப்படுத்துனா என்ன செய்றதுனு கேக்குறீங்களா? இதோ நம்ம முத்துராஜ் அண்ணா அதுக்கு என்ன செய்யுறாருனு கேளுங்க...

முருங்கையில் சிறிய பச்சைப்புழு தாக்குதல் ஏற்படும்போது அதை அழிக்க முயற்சிப்பதில்லை எனவும், புழுக்கள் இலைகளை தின்றபின் தானாகவே இறந்து விடுகிறது என்றும், அதன்பின் இலைகள் புதிதாக துளிர்த்து வரும்போது, காய்க்கும் பருவம் இல்லாத காலத்திலும் நன்றாக காய்கள் காய்ப்பதாகவும், அதனால் நல்லவிலை கிடைப்பதாகவும் முத்துராஜ் கூறுகிறார்.

இந்தப்பகுதியில் கொரங்காடு என அழைக்கப்படும் அவருடைய மேய்ச்சல் நிலங்களில் நிறைய புளிய மரங்களும், வெள்வேலன் மரங்களும் உள்ளன. புளிய மரத்தின் மூலம் கணிசமான வருமானம் வருவதாகவும், மேலும் வெள்வேலன் தற்போது டன் ரு 2500 வரை விலை போவதாகவும், எதிர்காலத்தில் நல்ல வருமானத்தை தரும் என்றும் அவர் கூறுகிறார்.

வாழை மரங்களில் தாரை மட்டும் வெட்டிவிட்டு, கட்டையை அப்படியே விட்டுவிடுவதால் பக்க கன்றிலிருந்து கூடுதல் எண்ணிக்கையில் காய்கள் கிடைக்கின்றன. இதுபோல் இன்னொரு உத்தி என்னவெனில், ஒரு குத்தில் மூன்று மரங்கள் 8 அடிக்கு 8 அடி இடைவெளியில் இருக்கின்றன. இதனால், மண் அணைக்காதபோதிலும் மரங்கள் காற்றினால் சாய்வதில்லை! தண்ணீரை வாழைக்கு அருகில் விடாமல் இரண்டு வாழை வரிசைகளுக்கு நடுவில் விடுவதால் வேர்கள் பரவலாக வளர்ந்து தண்டு ஊக்கமாக உள்ளது.

இவரது தோட்டத்திலுள்ள மொந்தன் வாழை மரங்களில் இருந்து விதைக் கட்டைகளை எடுத்தே மீண்டும் நடவுசெய்துள்ளார், வெளியில் இருந்து வாழைக்கட்டைகள் வாங்குவதில்லை.

எலுமிச்சை மரங்களுக்கு ஜீவாமிர்தம் மற்றும் கடலைப்புண்ணாக்கு கரைசல் கொடுப்பதினால் பழங்கள் இதற்கு முன்னர் வந்த பழங்களைவிட பெரிதாகவும், திரண்டும் உள்ளது. ஊடுபயிர்கள் பயிர்செய்துள்ளதால் உயிர் மூடாக்காக உள்ளதோடு களைகளும் கட்டுப்பாட்டில் உள்ளது.

பூமித் தாயின் புன்னகை! - இயற்கை வழி விவசாயம், Bhumithayin punnagai - iyarkai vazhi vivasayam

பூமித் தாயின் புன்னகை! - இயற்கை வழி விவசாயம், Bhumithayin punnagai - iyarkai vazhi vivasayam

பாத்தீங்களா... இந்த கள்ளிப்பட்டி கலைவாணி மாதிரியே முத்துராஜ் அண்ணனும் ஜீவாமிர்தமும் கடல புண்ணாக்கும் பக்குவமா யூஸ் பண்றாங்க! என்னோட பண்ணையில நடக்குற வெள்ளாமை பத்தி உங்களுக்கு அப்புறமா சொல்றேன்! இப்போ நம்ம முத்துராஜ் அண்ணா ஒரு பஞ்ச் டயலாக் சொல்றாங்க கேளுங்க!

இறுதியாக, “எந்த பயிருக்கு எந்த பருவமோ, அந்த பருவத்தில் தான் பயிர் செய்ய வேண்டும், பருவம் தவறி பயிர் செய்வதால்தான் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு பயிர்கள் உட்பட்டு விவசாயிகள் திக்குமுக்காடுகிறார்கள்” என தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டு நமக்கு விடை கொடுத்தார் திரு. முத்துராஜ் (செல்:99421 67929)