போபாலில் இரண்டு இளைஞர்கள்…

போபாலில் இரண்டு இளைஞர்கள்…

நம்மவரு நம்மாழ்வார்… பகுதி 22

இரண்டு இளைஞர்களின் தன்னார்வமிக்க பொதுநலத் தொண்டினால், போபாலில் உண்டான அற்புத மாற்றத்தை நம்மாழ்வார் பகிர்ந்து கொண்ட பதிவு இந்தவாரம்!

நம்மாழ்வார்:

மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் சில வருடங்களுக்கு முன் இருந்தேன். அங்கிருந்து 100 கி.மீ தொலைவுக்கு அப்பால் உள்ள கிராமத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அங்குதான் ஓர் அற்புதத்தைக் காணமுடிந்தது.

நிலப்பரப்பில் ஓடி மறைந்த மழை நீர் நிலத்திற்குள் புகுந்து தூய ஊற்றுநீராக எழுந்து குளம் குட்டையாகச் சேமிக்கப்பட்டு விட்டது.
ஆண்டிற்கு 400 மிலி மழைப்பொழிவு உள்ள பகுதி அது. மேடுபள்ளங்கள் மிகுந்த நிலப்பரப்பு. நிலச்சரிவின் குறுக்காக பள்ளம் தோண்டி மேட்டு வரப்பு அமைத்திருந்தார்கள். தஞ்சாவூர் கோவிலைச் சுற்றி அகழியும், மதில் சுவரும் அமைத்திருந்தார்களே, அதுபோன்று மண்ணாலேயே அதுவும் அகழி தோண்டிய மண்ணைக் கொண்டே மதில் மேட்டு வரப்பு அமைத்திருந்தார்கள். சம உயரம் பார்த்துத் துண்டு துண்டான வரப்புகள் அமைத்தார்கள். வாய்க்காலும் நெட்டை வாய்க்கால் இல்லாமல் துண்டு துண்டாகத் தடுத்திருந்தார்கள். இதன் விளைவாக நிலப்பரப்பில் ஓடி மறைந்த மழை நீர் நிலத்திற்குள் புகுந்து தூய ஊற்றுநீராக எழுந்து குளம் குட்டையாகச் சேமிக்கப்பட்டு விட்டது.

தண்ணீர் சேமிக்கப்பட்டதும், எங்கெங்கும் புல் முளைத்து வளரத் தொடங்கியது. புல் வளர்ந்ததும் பசு வந்துவிட்டது. உழவர்கள் வீட்டில் தீவனம் இல்லாமையால் மெலிந்துபோய் எலும்பும் தோலுமாய் காணப்பட்ட பசுக்களுக்கு ஒரு கோசாலை அமைத்தார்கள். பசுக்களுக்கு மேய்ச்சல் கிடைத்தது. பசுக்களின் கழிவு நிலத்திற்கு எருவாக மாறியது. பசுக்கள் மத்தியில் வளரும் காளை மாடுகள் கலப்பை இழுக்கும் சக்திகளாக மாறின. தரிசாக இருந்த நிலத்தில் தற்சமயம் சோளமும் பிற செடிகளும் பயிராகியுள்ளன.

இத்தகைய பணிகளுக்கு மூலகாரணமானவர்கள் இரண்டு பேர். ஒருவர் தீபக் சுச்டே. இவர், இயற்கை வேளாண்மையில் கரைகண்ட கணிதப் பேராசான் சிரிபோத தபோல்கரின் சீடர். மற்றவர் காவல் துறை கண்காணிப்பாளராக இருந்து விருப்ப ஓய்வில் வெளியே வந்தவர். இவர் பெயர் ராஜேஷ். ராஜேஷ் காவல்துறையில் பணி புரிந்தபோதே சிறிய அளவில் அங்கும் இங்கும் மழைநீர் அறுவடை செய்து வெற்றிகண்டவர்.

ராஜேஷ் பணியில் சேமித்த பணத்தைக் கொண்டு 280 ஏக்கர் பொட்டல் தரையை வாங்கினார். மண் அரிப்பினால் பாழ்பட்டுக் கிடந்த நிலத்தைப் புதுப்பித்தார். அக்கம்பக்கம் உள்ள ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் இதைச் செய்து முடித்தார். ஊர் மக்களையே தொழில்நுட்பம் அறிந்த நிபுணர்களாகச் செயல்பட வைத்தது ராஜேஷின் தனிச் சிறப்பு.

மழை நீர் நிலத்திற்குக் கீழே இறங்கியதும் வெட்டுப்பட்டு கட்டையாக இருந்த மரங்கள் துளிர்த்து வளர்ந்தன. இவ்வளவு செழிப்பையும் ஒன்றரை ஆண்டுகளில் சாதிக்க முடிந்துள்ளது. அடுத்தகட்டமாக இப்பணிகளை கிராமத்து மக்கள் மத்தியில் கொண்டு போயுள்ளார்கள். கிராமத்து மக்கள் கால்நடைக் கழிவுகளையும், மனிதக் கழிவுகளையும் சாண எரிகாற்றுக் கலனிற்குள் செலுத்துகிறார்கள். சாணம் எரியும்போது அடுப்பு எரிக்க எரியும் காற்று (மீத்தேன்) கிடைக்கிறது. விளக்கு எரிக்க மின் சக்தியும் கிடைக்கிறது.

மக்களுக்கு வேலைவாய்ப்பு உயர்கிறது. நீர்த் தேக்கங்களில் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிற்கிறது. இதுகொண்டு ஆண்டு தோறும் மூன்று பருவங்கள் பயிர் செய்ய முடியும் என்கிறார் ராஜேஷ். அனைத்துத் தேவைகளுக்கும் அரசாங்கத்தின் உதவியை நாடி இருந்த மக்களை எதற்கும் எவரையும் எதிர்பார்க்காத மக்களாக்கி இருக்கிறார்கள் ராஜேஷும் தீபக்கும்.

தொடர்ந்து விதைப்போம்…

nature, nammalvar, agriculture

இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவு என தன் வாழ்நாள் முழுவதையும் இயற்கை நலனிற்காவும் சமூக நலனிற்காகவும் அர்ப்பணித்தவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள். அவருக்கு ஒரு அர்ப்பணிப்பாக இங்கே அவரது எழுத்துக்களைப் பதிகிறோம்!

nanda_uforians @ flickrஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert1 Comment

Leave a Reply