பாரதம்

இயற்கையோடும் வாழ்வோடும்
எதிர்ப்புகள் எதுவுமின்றி
இயைந்து செல்லும் வாழ்க்கையாய்
சாதிக்க கற்றுக் கொண்ட
மனிதர் பலர் வாகை சூடி வாழ்ந்த
தொன்மையான பூமி இது

செழித்தது மானுடம் இங்கே
தன் தொழில் செய்வதற்கல்ல,
தன் கடன் இறைப் பணி செய்து கிடப்பதற்கே என!

கற்றலில், அறிதலில்
அறிவில், உணர்வில் உச்சம் தொட
வளர்ந்தான் வளர்ந்தான் மானுடன் விண்ணுயர!
சிற்றின்ப பொன்சிறையும் தெய்வீகத்தின் அருட்சுவையும்
உணர்ந்தான் - அதைக் கோவிலாய் செய்தான்!

படைப்பின் அடியாழத்தைக் குடைந்து
ஆதிஅந்தத்தின் மெய்ப்பொருளை,
ஓசையின் இன்னிசையை,
இசையின் கணக்கீட்டை,
நாதத்தின் ஓசைகளை,
உணர்ந்தான் அதை ஆளுமை செய்தான்

விடுதலையின் வாயிலைக் கண்டறிந்தவனுக்கு
முக்தியின் கதவும் முழுமையாய் திறக்கவே - வாழ்வில்
அழகும் இனிமையும் இயல்பாய் போனது
சுமையாய் அல்ல கொடையாய் விரிந்தது

கண் கூசும் பிரகாசம்
முகமெல்லாம் பொன் சாந்தம்
என எங்கெங்கும் நிறைந்தன ஆருயிர்கள்!

பெண்மையும் ஆண்மையும் முழுநிறைவு பெற்றது
மற்றொரு கோணம் தொட்டது!
கடல்கடந்து வந்த வெறிகொண்ட சக்திக்கு
ஒரு உன்னத இரை இதுபோல் வேறுண்டோ?

இந்த வாரம், நான் எமோரி பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் உரையாற்ற சென்றிருந்தேன். பொதுமக்களும் அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த தேவாலயத்தில் நிகழ்ச்சி நடந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆயிரத்தி இருநூற்றிற்க்கும் மேற்பட்ட மக்கள் கொண்ட கூட்டத்தால் அது நிரம்பி வழிந்தது. இந்த விரிவுரை கிழக்கத்திய ஆய்வுகள் அதாவது இந்திய ஆய்வுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்திய பேராசிரியர்கள் குடும்பத்தின் அறக்கட்டளை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தியாவை பற்றி ஆய்வு செய்வதென்பது முடியாத காரியம்! இந்தியாவை பற்றி ஆய்வு செய்வதென்பது முடியாத காரியம்!

குறைந்தது, அதில் ஊறித் திளைக்கலாம்... கரைந்து விடுவது அதனினும் சிறப்பாக இருக்கும்! இது மட்டும்தான் ஒரே வழி...

இந்தியாவை பற்றிய மேற்கத்திய ஆய்வு, மிகவும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவே இருந்து வந்திருக்கிறது. வெறும் அறிகுறிகளைக் கொண்டு செய்யும் இந்த ஆய்வுகள் (symptomatic analysis), இந்த தேசத்தை பற்றி மிக தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும்.

ஏனெனில் இந்த நாடு, மிகுந்த உணர்ச்சி வெள்ளமும் உயிரோட்டமும் மிக்க ஒரு பெருங்குழப்பத்தில் கொண்டாட்டமாய் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த பூமியிலிருக்கும் நாடுகளில் இது மிகப் பழமையானது. தனது குடிமக்களின் கொள்கைகள், நம்பிக்கைகள், குறிக்கோள்களின் தொகுப்பினால் வரன்முறைக்கு உட்படுத்தப்பட்டு உருவான நாடு அல்ல இது.

தேடல்மிக்கவர்கள் நிறைந்த நாடு. இவர்கள் தேடுவது செல்வத்தையோ நல்வாழ்வையோ இல்லை,விடுதலையை! இந்த விடுதலை, பொருளாதார, அரசியல் வகையைச் சேர்ந்ததல்ல. இவர்களின் தேடுதல் உச்சபட்ச விடுதலைக்கானது!

கடவுளே இல்லாத ஒரு பக்திமிக்க தேசமிது... நான் கடவுளே இல்லாத நாடு என்று சொல்லும் போது, மனிதர்கள் கடவுள்களை தேர்வு செய்ய மட்டுமல்ல, நீங்கள் தொடர்பு கொள்ளக்கூடிய எந்த வகையான கடவுளையும் உருவாக்குவதற்கு சுதந்திரம் கொடுத்த ஒரே கலாச்சாரம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

"ஞானம் பெற எத்தனை வழிகள் இருக்கின்றன?" என்று ஆதியோகியிடம் கேட்கப்பட்டபோது, அவர், "உங்கள் உடல் அமைப்பிற்கு நீங்கள் உட்பட்டு இருந்தால் 112 உள்ளது. ஆனால் நீங்கள் உங்கள் உடல் கடந்த பரிமாணத்திலிருந்தால், பிரபஞ்சத்தில் ஒவ்வொரு அணுவும் ஞானத்தின் வாசல்படியே," என்றார்.

பல நூற்றாண்டுகளாக "பாரதம்" என்ற பெயரால் அறியப்பட்ட இந்நாடு, பல வகையான ஆன்மீக சாத்தியங்களின் ஒரு சிக்கலான கலவையாக உள்ளது. நீங்கள் மகா கும்பமேளாவிற்கு சென்றிருந்தால், இதனைக் கண்டுகளித்திருக்க முடியும். இவை அத்தனைக்கும் சேர்த்து, பாராட்டு கிடைத்தது இந்தியாவிற்கு; வேறுயாரிடமிருந்துமல்ல, மார்க் ட்வைனிடமிருந்துதான்!

தனது இந்திய பயணத்திற்கு பின்னர், அவர் இவ்வாறு எழுதுகிறார்...

"நான் இதுவரை செய்த கணிப்பின்படி, சூரியன் தனது சுற்றுப்பாதையில் வருகைதரும்போது கண்டு ரசிக்கும் மிகவும் தனித்துவமிக்க நாடு இந்தியாவாகத்தான் இருக்க முடியும். ஏனெனில், இங்கு மனிதனாலும் இயற்கையாலும் இனிமேல் எதுவுமே செய்வதற்கு மிச்சமாக விட்டு வைக்கப்படவில்லை! இங்கு எதுவும் மறக்கப்படவுமில்லை, எதுவும் புறக்கணிக்கப்படவுமில்லை... "

பல்வேறு இன, மத, மொழி மற்றும் கலாச்சாரங்களின் ரசம் நிரம்பிய கோப்பை, இந்தியா. இருப்பினும், இந்தியா ஒரு ஆய்வாக இல்லை, மாறாக சாத்தியங்கள் பலவற்றின் ஒரு தோற்றப்பாடாக இருக்கிறது. இவை அனைத்தும் தேடுதல் என்னும் ஒரு ஒற்றை நூலால் பிணைக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய ஏக்கம் மண்ணின் மாந்தர்களிடம் பேணப்பட்டு வருகிறது... அது உட்சபட்ச விடுதலைக்கானது; பிறப்பிலும் இறப்பிலுமிருந்து கிடைக்கும் விடுதலைக்கானது.

தேடுதலின் அடிப்படையே ஒருவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்று உணர்ந்ததுதான் என்பதை மறக்கக் கூடாது. தனது இருப்பின் தன்மையைப் பற்றி ஒருவருக்கு தெரியாது. ஒரு கலாச்சார ரீதியான நம்பிக்கையோடு நின்றுவிடாமல், இங்குள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையும் தங்களைப் பற்றிய உண்மையை அறிவதற்கான தைரியமும் அர்ப்பணிப்பையும் அஸ்திவாரமாய் கொண்டுள்ள அற்புத தேசம் இந்த பாரதம்.

"பா" என்பதன் பொருள் "உணர்வு". உணர்வே அனைத்து அனுபவங்களுக்கு அதன் வெளிப்பாடுகளுக்கு அடிப்படையாக இருக்கிறது; "ரா" என்பதன் பொருள் ராகம், வாழ்வின் இசைவையும் கட்டமைப்பையும் குறிக்கிறது; "தா" என்றால் தாளம், வாழ்க்கையின் தாளங்களை விளக்குவது. இது மனித அமைப்பு மற்றும் இயற்கை என்ற இரு தாளங்களை உள்ளடக்கியது.

இந்த தேசம் லட்சியங்கள் நிறைந்த மனதில் தோன்றவில்லை, மாறாக மிக ஆழ்ந்த அறிவுபெற்ற முனிவர்களால் உருவானது. பாரதத்தை இன்னொரு அரசியல் ஸ்தாபனமாக பார்க்கக் கூடாது. மனித உயிரின் மிகவும் உள்ளார்ந்த ஏக்கங்களை பூர்த்தி செய்யும் ஒரு நுழைவாயில் இது!

பாரதத்தின் அடிப்படை பண்புநலன்களான ஞானமரபையும், வாழ்க்கையின் தங்குதடையற்ற ஆய்வு பயணத்தையும் பாதுகாத்து, பேணி வளர்ப்பது இந்த ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் கிடைத்த உன்னத பரிசு! இது நம் தலைமுறை நிறைவேற்ற வேண்டிய ஒரு முக்கிய பொறுப்பு...

ஞானிகள் ஆராய்ந்த எல்லையற்ற சாத்தியங்கள் பலவற்றையும், அவர்கள் அளித்த பொக்கிஷமான சூட்சுமங்களையும், விடாப்பிடியான மதப்பற்றிலும் முட்டாள்தனமான தத்துவக் கோட்பாடுகளிலும் இழக்க வேண்டாமே!

Love & Grace