பாரதம் - ஒரு தேசத்தின் இதயத்துடிப்பு

"2020ல் இந்தியாவிற்கான உங்கள் கனவென்ன? பாரதத்தை வெற்றிகரமான தேசமாக்க என்ன செய்ய வேண்டும்? நம் தேசத்திற்கு இந்தியா என்று பெயர் வைத்ததில் தவறு செய்துவிட்டோமா? பாராளுமன்றத்திற்கு உங்களைப் பேச அழைத்தால் அவர்களுக்கு வழி காட்டுவீர்களா?" என்று டாக்டர். கிரண்பேடி அவர்கள் புது தில்லியில் சத்குருவிடம் தொடுத்த கேள்விக் கணைகளுக்கான பதில்களை, இந்த வார சத்குரு ஸ்பாட்டில் உங்கள் தேசத் துடிப்பிற்கு விருந்தாய் படைக்கிறோம்...


Question: ஒரு வெற்றிகரமான தேசத்தை உருவாக்க என்ன தேவை?

சத்குரு:

மக்களின் குறிக்கோள்கள் அணையாமல் உயிருடன் இருக்கும்படி பார்த்துக் கொள்ளும்போதுதான் ஒரு தேசம் வெற்றிகரமான நாடாக இருக்கும். மக்கள் தங்கள் வாழ்க்கையை சாத்தியங்கள் நிறைந்ததாக பார்க்கவேண்டும். அவர்கள் தங்கள் ஆர்வங்களை இழந்துவிட்டால் அந்த தேசம் தோல்வியைத்தான் தழுவும். ஒருவரின் குறிக்கோளை போஷித்து அவர் வாழ்நாளுக்குள் அதற்கான வாய்ப்பை உருவாக்குவது மிக முக்கியம். மேலும் மக்களின் குறிக்கோள்களை தேசத்தின் குறிக்கோளாக, தேசத்தின் குறிக்கோளை மக்களின் குறிக்கோள்களாக உருவாக்க வேண்டும்.

உதாரணமாக, நாம் உலகின் மற்ற பகுதிகளுடன் கிட்டத்தட்ட 10,000 வருடங்களாக வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறோம். சிரியாவிலும், அரேபியாவின் சில பகுதிகளிலும் இந்திய வர்த்தகர்கள் பற்றி தகவல்கள் உள்ளன. மிக அழகிய நகரங்களில் ஒன்றாக இருந்த அலெப்போ ஒரு சமயத்தில் இந்திய வர்த்தகர்கள் கட்டிய வரிப்பணத்தின் மூலமே நிர்மாணிக்கப்பட்டது. லெபனானில், பால்பெகில் 4000 வருட பழமையான ஆலயம் உள்ளது. இந்தியாவிலிருந்து சென்றிருந்த வேலையாட்கள், சிற்பிகள், யானைகள் மற்றும் யோகிகள் இதை உருவாக்கியதாக லெபனிய குழந்தைகள் பள்ளியில் படிக்கிறார்கள். மிக பிரம்மாண்டமான ஆலயம் இது. இந்த ஆலயத்தின் அஸ்திவாரக் கற்கள் சில 300 டன் எடை உடையவை. தாமரை மலர் சிற்பங்கள் ஆலயத்தின் கூரையில் செதுக்கப்பட்டுள்ளன. லெபனானில் நிச்சயம் தாமரை மலர்கள் கிடையாது. இது இந்தியர்கள் செதுக்கியது. ஒவ்வொரு லெபனிய குழந்தைக்கும் இது தெரியும். ஆனால், ஒரு இந்திய குழந்தைக்காவது இது பற்றித் தெரியுமா?

1000 வருடங்களுக்கு முன் தமிழ் மன்னர்கள் கம்போடியாவில் அங்கோர் வாட் மற்றும் அங்கோர் தோம் ஆலயங்களை நிர்மாணித்தார்கள். அந்த ஆலயங்களின் நிர்மாணத்தைப் பார்த்தால் மனிதனாக இருப்பதற்கு நிச்சயம் பெருமைப்படுவீர்கள். இந்தப் பூமியில் அங்கோர் வாட் தான் மிகப் பெரிய சமயம் சார்ந்த ஒரு கட்டிடம். தமிழகத்தில் எந்தவொரு குழந்தையாவது இது பற்றி பனிரெண்டாம் வகுப்பு பயிலும் வரை தங்கள் பாடப் புத்தகத்தில் ஒரு வரியாவது படிக்கிறார்களா?

உங்களுக்குள் பெருமிதம் இல்லாதபோது, வெற்றிகரமான தேசத்தை நீங்கள் எப்படி உருவாக்குவீர்கள்? உங்கள் பின்னணி குறித்து உங்களுக்கு பெருமிதம் இல்லாவிட்டால் எதற்காக இங்கே இருக்கப் போகிறீர்கள்? மேற்கத்திய நாடுகள் தங்கள் விசா கொள்கைகளை தளர்த்திவிட்டால், 80 சதவிகித இந்தியர்கள் நீச்சல் அடித்தாவது சமுத்திரத்தைக் கடந்து சென்று விடுவார்கள். அப்படி என்றால் நீங்கள் அவர்களை வலுக்கட்டாயமாக இங்கே பிடித்து வைத்திருக்கிறீர்கள். அப்படியென்றால் இது அவர்களுக்கு சிறைதானே? இங்கே இருக்க வேண்டும் என்ற விருப்பம் மக்களுக்கு இருக்க வேண்டும். ஆனால் எல்லோருக்கும் இங்கிருந்து போய்விடவே விருப்பம். நாம் தான் அவர்களை பிடித்து வைத்திருக்கிறோம். ஒரு தேசத்தை இப்படி நிர்வகிக்கக்கூடாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: பாரதம் என்பதை இந்தியா என்று பெயர் மாற்றம் செய்ததில் நாம் தவறு செய்துவிட்டோமா?

சத்குரு:

ஆம், தவறு செய்துவிட்டோம். ஒரு தேசத்தை ஒருவர் ஆக்கிரமிக்கும் பொழுது செய்யும் முதல் வேலை அதன் பெயரை மாற்றுவதுதான். ஆக்கிரமிப்பை நிலைநிறுத்த இது ஒரு யுக்தி, அடிமைப்படுத்த இது ஒரு தொழில்நுட்பம். ஆப்பிரிக்க - அமெரிக்க வரலாற்றை நீங்கள் பார்த்தால், ஆப்பிரிக்கர்களை அமெரிக்கா அழைத்து வந்த பொழுது அவர்களின் ஆப்பிரிக்க பெயர்களை மாற்றி வேறு ஏதோ ஒரு பெயர் கொடுத்தனர். இதேதான் நமக்கும் நடந்தது. திருவனந்தபுரம் "ட்ருவான்டிரம்" ஆனது, சென்னை "மெட்ராஸ்" ஆனது இப்படிதான். இது போலத்தான் 'இந்தியா'வும் - இதற்கு என்ன அர்த்தம்? ஒரு அர்த்தமும் இல்லை. உங்களுக்கு நான் அர்த்தமற்ற பெயரை வைத்தால், என் முன்னால் நீங்கள் ஒரு அர்த்தமற்ற, முட்டாள் மனிதராகி விடுவீர்கள். ஏனென்றால் எனக்கு அர்த்தமுள்ள பெயர் இருக்கிறது. எனக்கு ஒரு பாரம்பரியம், ஒரு கலாசாரம் உள்ளது. உங்களுக்கு அப்படி எதுவும் இல்லை. இந்த ரீதியில்தான் நாம் 'இந்தியா' என்றானோம்.

தேசம் என்பது அனைவர் மனதிலும் நன்கு பதிய வேண்டும். ஏனெனில், தேசம் என்பது ஒரு கருத்து மட்டுமே. இந்த கருத்து, உங்கள் மனதை எரித்து, இதயத்தில் நுழைந்து, உங்கள் உணர்ச்சியை தீவிரப்படுத்தினால்தான், அந்தக் கருத்து ஒரு உண்மையான தேசமாக உருவாகும். இல்லையென்றால் தேசம் என்பது வெறும் காகிதத்தில்தான் இருக்கும். துரதிருஷ்டவசமாக இதுதான் இன்றைய யதார்த்தம். ஆங்கிலேயர், 1947 இல் நம்மை விட்டு சென்ற பொழுது நாம் முதலில் செய்திருக்க வேண்டியது, அனைவர் மனதிலும் எதிரொலிக்கும் படியாக பெயரை மாற்றி வைத்திருக்க வேண்டும். இந்திய தேசத்திற்கு ஒரு ஆங்கில பெயரை கூறிக் கொண்டிருக்கிறோம். இந்த தேசத்தில் தற்போது குறைந்த சதவிகிதம் மக்களுக்கே முறையாக ஆங்கிலம் பேசத் தெரியும். மற்றவர்கள் ஏற்கனவே நாட்டை விட்டு போய்விட்டார்கள். தற்போதைய பிரதமருக்கு நான் வைக்கும் வேண்டுகோள், அனைவர் மனதிலும் எதிரொலிக்கும் படியாக வேறு ஒரு பெயரை நம் தேசத்துக்கு சூட்ட வேண்டும் என்பதுதான்.

நம்மிடையே இருக்கும் புத்திசாலிகள் 'பெயரில் என்ன இருக்கிறது?' என்று கேட்கலாம். ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.பெயரை உச்சரிக்கும் பொழுது அதில் சப்தம் இருக்கிறது. பெயருக்கான அர்த்தம் வெறும் உளவியல் மற்றும் சமூகரீதியானது மட்டுமே. ஆனால் சப்தம் என்பது இந்தப் பிரபஞ்சம் சார்ந்தது. அதற்கென்று ஒரு சக்தி உண்டு. 'பாரத்' என்னும் சப்தத்திற்கு ஒரு சக்தி இருக்கிறது. இந்த சக்தியானது இந்த தேசத்தில் அனைவர் இதயத்திலும் எதிரொலிக்க வேண்டும். இந்தியனாக இருப்பதன் பெருமை அனைவரையும் சென்றடைய வேண்டும். அனைவரின் குறிக்கோளும், தேசத்தின் குறிக்கோளுக்கு மாறாக இருந்தால் தேசம் என்ற ஒன்று இல்லை.

Question: 2020 இல் இந்தியாவிற்கான உங்கள் கனவு, திட்டம் என்ன?

சத்குரு:

மிக முக்கியமான ஒன்று உணவுப் பாதுகாப்பு. உலகின் சில சக்திகளிடம் இதை நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். மக்களுக்கு உணவும், குடிநீரும் கிடைக்குமாறு பார்க்க வேண்டும். 2020ல் இதை 100% எட்டியிருக்க வேண்டும். இல்லையென்றால், மற்ற நாடுகள் நம்மை வெடிகுண்டுகள் கொண்டு அச்சுறுத்தத் தேவையில்லை, உங்கள் உணவை, குடிநீரை அவர்கள் கட்டுப்படுத்த ஆரம்பித்தால் நாம் அவர்களிடம் சரணடைந்து விடுவோம். தற்சமயம் விதைகள் வெளியிலிருந்து வந்து கொண்டிருக்கிறது. ஒரு வருடம் அவர்கள் விதை அனுப்பவில்லையென்றால் என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இலட்சக்கணக்கான மக்கள் மடிந்து போவார்கள்.

எனவே, உணவு, குடிநீர் இவற்றில் 100% தன்னிறைவு அடைய வேண்டும். அதன் பின்னர் தொழில் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவை எப்படியும் நிகழும். ஆனால் இந்தப் பாரத தேசத்தில் உண்ணும் உணவு அனைத்தும் இங்கே விளைந்ததாக இருக்க வேண்டும். 12 மாதமும் விளையும் நிலங்கள் கொண்ட தேசம் இது. உலகின் சொற்ப தேசங்களில் மட்டுமே இது சாத்தியம். இது நிகழுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் யாரவது மிக எளிதாக ஏறி மிதித்து விடுவார்கள்.

இந்த தேசத்தின் இரண்டு முக்கிய பிரச்சனைகள் பற்றி பேசியிருக்கிறேன் ஒன்று வறுமை மற்றொன்று ஊழல். ஊழல் என்பது அவமானமானது. வறுமை சோர்வுறச் செய்வது. முதலில் வறுமையைக் கவனிக்க வேண்டும். மக்கள் நன்றாக உண்ணட்டும், பிறகு அவர்களிடம் நாம் கொள்கை, கோட்பாடு பற்றி பேசலாம்.

Question: இந்திய பாராளுமன்றம் உங்களை பேச விரைவில் அழைக்க வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன். சம்பூர்ண பாரதம் உருவாக நீங்கள் அவர்களுக்கு காட்டும் வழி என்னவாக இருக்கும்?

சத்குரு:

தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது. "ஒரு அரசனை தேர்வு செய்யும் பொழுது, உங்களுக்கு நல்லவன் வேண்டுமா, வல்லவன் வேண்டுமா?" என்று. நீங்கள் திருமணம் செய்ய விரும்பினால் ஒரு நல்ல மனிதரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். தேசத்தை ஆளும் அரசனை தேர்வு செய்யும் பொழுது ஒரு திறமையான மனிதரை தேர்வு செய்ய வேண்டும். திறமையின் ஒரு அம்சம் யுக்தி. ஒரு சிறிய நிறுவனமோ அல்லது ஒரு தேசமோ அதைத் திறம்பட, வெற்றிகரமாக ஒரு திசை நோக்கி நிர்வகிக்க, தேவை - யுக்தி. ஒரு குறிப்பிட்ட அளவிலான இரகசியத்துடன் செயலாற்றும் போதுதான் யுக்தியை நன்கு அமலாக்கம் செய்யமுடியும். எதுவரை எல்லோருக்கும் தெரியலாம், எது தெரியக் கூடாது என்ற வரைமுறை முக்கியம். இரண்டே குழந்தைகள் உள்ள குடும்பத்தில் கூட எல்லா விஷயங்களையும் நீங்கள் பகிர்ந்து கொள்ள முடியாது. குழந்தையிடம் இன்று என்ன சொல்லலாம், நாளை என்ன சொல்லலாம், நாளை மறுநாள் என்ன சொல்லலாம் என்ற தெளிவு வேண்டும். அவர்கள் வழிநடத்தப்பட வேண்டும்.

இந்த தேசத்தின் மக்களிடம் நம் தேசத்தின் உயர்ந்த குறிக்கோள் பற்றி இப்போதே சொன்னால், அதை நோக்கி யாரும் முன்னேற மாட்டார்கள். எல்லோரும் இப்போதே எண்ணத்தை கைவிட்டு விடுவார்கள். "இப்பொழுது ஒரு அடி மட்டும் எடுத்து வைக்கலாம்" என்று நீங்கள் அவர்களிடம் சொல்ல வேண்டும். அந்த அடியை அவர்கள் வெற்றிகரமாக கடந்தால் அவர்களுக்கு சக்தி கிடைக்கும், அதன் பிறகு அடுத்த அடி, அடுத்த அடி, இப்படிதான் இது நடைபெற வேண்டும். எனவே சம்பூர்ண பாரதம் குறித்து இப்பொழுது பேசத் தேவையில்லை. இந்த தேசத்தை நிர்வாகம் செய்பவர்களிடம் நான் சம்பூர்ண பாரதம் பற்றிப் பேசுவேன், மக்களிடம் இல்லை. மக்கள் ஒரு சமயத்தில் ஒரு அடி என்று வழிநடத்தப்பட வேண்டும் இல்லாவிட்டால் அவர்கள் நகர மாட்டார்கள்.

ஒரு சிறந்த தேசம் உருவாக்க வேண்டுமென்றால், சிறந்த மக்களை, சிறந்த நிறுவனங்களை உருவாக்க வேண்டும். அவர்கள் தங்கள் மேன்மையை வெளிப்படுத்தத் தேவையான சூழலை உருவாக்க வேண்டும். தற்சமயம் தெளிவற்ற, தேவையற்ற, குழப்பமான விதிமுறைகள் உள்ளன. ஒரு சாதாரண குடிமகன் ஏதாவது ஒரு வழியில் விதிமீறல் செய்யாமல் தன் அன்றாடத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடிவதில்லை. வேறுவிதமாக சொன்னால் குற்றம் புரியும் நோக்கம் இல்லாத மனிதர்களை குற்றவாளியாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். எளிமையான, தெளிவான விதிகள்தான், இன்றைய காலகட்டத்தில், நம் பொருளாதாரத்தை, சமூகத்தை, மற்ற செயல்களை வழி நடத்தத் தேவையாக இருக்கிறது. இதற்காக இந்த தேசத்தில் உள்ள திறன்வாய்ந்த மனிதர்கள் எளிமையான ஆனால் ஓட்டைகள் இல்லாத நிர்வாகத்தை உருவாக்குவது நோக்கி செயல்புரிய வேண்டும்.

பாரத மாதாவுக்கு ஜெய்

Love & Grace