துவங்கியது யக்ஷா... அனைவரையும் தன் வசப்படுத்திய முதல் நாள் நாட்டிய நிகழ்ச்சி...

ஈஷா யோகா மையத்தில், மஹாசிவராத்திரிக்கு முந்தைய ஏழு நாட்களில் கொண்டாடப்படும் இசை மற்றும் நாட்டியத் திருவிழாவான 'யக்ஷா' கொண்டாட்டம் இன்று துவங்கியது. முதல் நாளான இன்று, திருமதி.கீதா சந்திரன் அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நம் கலாச்சாரத்தில் ஆடலும் பாடலும் கூட முக்தியை நோக்கியே வடிவமைக்கப்பட்டுள்ளன. நடனத்தின் நளினத்தால் இறைவனின் இன்னொரு பரிமாணத்தை உணர்த்துவதே பரதநாட்டியம்!

காலங்காலமாய் நம் பாரம்பரியத்தில் பல்வேறு இடங்களில் குறிப்பாக நம் கோவில்களில் ஆடப்பட்டு வரும் பரதநாட்டியம் இன்று திருமதி.கீதா சந்திரன் அவர்களின் நடனம் பார்வையாளர்களை மெய் மறக்கச் செய்தது.

கீதா சந்திரன், தனது கலை ஆளுமையினாலும் உத்திகளாலும் கற்பனைத் திறம் மிக்க நடன அமைப்பு இயக்கத்தாலும் பார்வையாளர்களுக்கு நடனத்தின் இதயத்துடிப்பை உணரச்செய்தமைக்காக உலக அளவில் பாராட்டப் பெற்றுள்ளார்.

தனது குருக்களிடம் பயின்ற கலை ஞானத்தை தனக்குள் உள்வாங்கி அழகும், ஆனந்தமும், ஆன்மீகமும் மிளிர அபிநயங்களை வழங்குகிறார் கீதா சந்திரன். தனது தனித்துவமிக்க நடனத் திறத்தால் நாட்டின் முன்னணி நடனக் கலைஞர்களில் ஒருவாரகத் திகழ்கிறார் இவர். தனது கலை மற்றும் நாட்டியத் திறத்திற்காக பல விருதுகளை பெற்ற கீதா சந்திரன் அவர்களுக்கு 2007 ஆம் ஆண்டு வழங்கப்பெற்ற பத்மஸ்ரீ விருது அவரது மணிமகுடத்தின் வைரகல்லாக ஜொலிக்கிறது.

சிவனின் அதிர்வுகள் இந்த பிரபஞ்சத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை தன் நடன அசைவுகளால் இவர் வெளிப்படுத்திய விதம் காண்பதற்கு மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது.

சிவனின் பஞ்சாட்சர மந்திரமான "நமசிவாய" மந்திரத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆடிய "நாகேந்திர ஹாராய த்ரிலோச்சனாய..." என்ற நடனமும், ஒரு பக்தை தன் தெய்வமான சிவபெருமானை எண்ணி உருகிப் பாடும் "வர்ணம்" என்ற நடனமும் கூடியிருந்தவர்களை மெய் மறக்கச் செய்தது.