மஹாசிவராத்திரியின் முன்னோட்டமாக, ஈஷா யோகா மையத்தில் நிகழும் தெய்வீக இசை மற்றும் நாட்டியத் திருவிழாவான 'யக்ஷா' கொண்டாட்டத்தில், முதல்நாள் இரவான இன்று, திருமதி. ரமா வைத்தியநாதன் அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது. அதைப்பற்றிய ஒரு தொகுப்பு இங்கே...

மாலை 6.50 மணியளவில் ஆதியோகி சிலை முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை சத்குருவுடன் ஆயிரக் கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

இன்றைய நிகழ்ச்சியில், திருமதி. ரமா வைத்தியநாதன் அவர்கள் அலாரிப்பூ எனும் நாட்டிய வகையுடன் துவங்கினார். சந்நிதியின் கட்டிடக்கலை நுணுக்கங்களையும் அழகையும் விவரிக்கும் வண்ணம் அமைந்த அந்த நாட்டிய அமைப்பைத் தொடர்ந்து, பல தெய்வீகக் கீர்த்தனைகளுக்கு தனது அற்புத அபிநயங்களை வெளிப்படுத்தினார். கிருஷ்ணனின் புல்லாங்குழல் இசைக்காக ஏங்கும் ராதேயின் மனநிலையையும், தன் இடப் பாகத்தை உமைக்குத் தந்து, அர்த்த நாரீஷ்வரராய் அருள்செய்யும் சிவனின் நிலையையும், தனது அபிநயங்களால் கண்முன் நிறுத்த, பார்வையாளர்கள் நாட்டியக் கலையில் மூழ்கித் திளைத்தனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கண்களுக்கு நல்ல கலைவிருந்தாகவும், பிரபஞ்ச நடனமாடிக் கொண்டிருக்கும் நடனத்திற்கு அதிபதியான அந்த ஆதிசிவனுக்கு அர்ப்பணிப்பாகவும் அமைந்த அந்த நாட்டிய நிகழ்ச்சியைத் தொடர்ந்து, நிகழ்ச்சியை ரசிக்க வந்த அனைவருக்கும் இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த யக்ஷா திருவிழாவில் கலந்துகொள்ள, பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ள ஈஷா யோக மையம், கோவையிலிருந்து ஈஷாவிற்கும், நிகழ்ச்சி முடிந்தவுடன் ஈஷாவிலிருந்து கோவைக்கும் இடையிலுள்ள கிராமங்களுக்கும் இலவசப் பேருந்து சேவையையும் வழங்கியுள்ளது.

இரண்டாம் நாள் விழாவான நாளை மல்லாடி சகோதரர்களின் கர்நாடக குரலிசை நிகழ்ச்சி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

யக்ஷாவைப் பற்றி:

'யக்ஷா', இந்தியாவின் புராண இலக்கியங்களில் குறிப்பிடப்படும் தேவலோக கலைஞர்களை குறிக்கும் விதத்தில் பெயரிடப்பட்டிருக்கிறது. காண்பவரின் உள்ளம் கவரும் வண்ணமயமான இசை மற்றும் நடனத் திருவிழா, இந்த யக்ஷா. புனிதமான தியானலிங்க வளாகத்தில், பசுமையான வெள்ளியங்கிரி மலைச்சாரலில், ஈஷா அறக்கட்டளை இந்நிகழ்ச்சியை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது.

இவ்வருடம் மார்ச் 4 முதல் 6 வரை நடைபெறும் யக்ஷா நிகழ்ச்சியில், தொடர்ந்து 3 நாட்களின் மாலைப் பொழுதுகளிலும் இந்தியாவின் தலைசிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. ஆர்வமிக்க பார்வையாளர்களை ஆயிரக்கணக்கில் ஈர்க்கும் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என்பது மற்றுமொரு சிறப்பு அம்சம்.

பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து நிலைப் பெற்றிருக்கும் இந்தியக் கலை வடிவங்களை, நம் செவிகளுக்கும் கண்களுக்கும் விருந்தாய் படைக்கிறது யக்ஷா. இவை நம் கலாச்சாரத்தின் மாறுபட்ட கலை வகைகளை பிரதிபலிப்பதுடன், ஆன்மீகத் தூண்டுதலுக்கு ஆழமான அடித்தளமாகவும் அமைகிறது.

தற்போது இக்கலைகள் மறக்கப்பட்டு, வேகமாக அழிந்து வருகின்றன. ஈஷாவின் யக்ஷா நிகழ்ச்சி, நம் நாட்டுக் கலை வடிவங்களின் தனித்தன்மை, தூய்மை, அவற்றின் மாறுபட்ட வகைகளைப் பாதுகாத்து, வளர்த்து, அனைவருக்கும் கொண்டு செல்வதற்கான சீரிய முயற்சியாகும்.

கலைஞர்கள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தவும், தேர்ந்த கலை ரசிகர்கள் கலையைக் கண்டு களிக்கவும் ஒரே மேடையாக விளங்குகிறது யக்ஷா திருவிழா.

கலையின் கைவண்ணம்:

கலையின் கைவண்ணம் எனும் பாரம்பரிய இந்திய கைவினை & கைத்தறி கலைஞர்களின் கண்காட்சி யக்ஷா மற்றும் மஹாசிவராத்திரி திருவிழாவையொட்டி ஈஷா யோகா மையத்தில் நடைபெறுகிறது. இந்தியா முழுவதிலுமிருந்து வருகைதரும் கைவினைக் கலைஞர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்துகிறார்கள். நசிந்து வரும் கைவினைக் கலையை கைதூக்கி விடுவதற்கான சிறிய முயற்சியாக ஈஷா இந்நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்துள்ளது.

உணவுத் திருவிழா:

நாவுக்கு சுவைதரும் பல்வகை உணவுப் பதார்த்தங்களுடன் கூடிய சிற்றுண்டி மையங்களும் பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன.