ஆயுட்காலம் நீள என்ன செய்ய வேண்டும்?

ayutkalam-neela-enna-seyya-vendum

மரணத்தைக் கண்டு பயமோ, வாழ்வின் மீது காதலோ, காரணம் எதுவாக இருந்தாலும், நீண்ட நாள் வாழவேண்டும் என்ற ஆசை மட்டும் எல்லோருக்கும் பொதுவானது. சீக்கிரம் இறந்திடாமல் வாழ்வை நீட்டிக் கொள்ள சத்குரு வழங்கும் வழி இதோ….

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா
சத்குரு, உலகம் சந்தோஷமாக மாற நீங்கள் முயற்சி செய்து வருகிறீர்கள். மனிதர்கள் எப்போதும் புன்னகை முகத்தோடும், மலர்ச்சியோடும், நீண்ட ஆயுளோடும் இருக்க நீங்கள் காட்டும் வழி என்ன?

சத்குரு:

1940-களில் ஒரு மனிதனின் ஆயுட்காலம் தோராயமாக 27 வயதாக இருந்தது. ஆனால் இப்போது மருத்துவ விஞ்ஞானத்தின் வளர்ச்சியால், பலவிதமான நோய் தடுப்பு முறைகள் கண்டறியப்பட்டு, ஒரு மனிதனின் சராசரி வயது 65 ஐ தாண்டிவிட்டது. இரண்டு மடங்கைவிட அதிகமாக ஆயுள் நீண்டிருக்கிறது. இதுவே மனிதனின் ஆயுளை நீட்டிட முடியும் என்பதற்கான சான்று.

யோகப் பயிற்சிகளை தினமும் செய்து வந்தால், நம் மீதும், நம் மனம், உணர்ச்சிகள் மீதும் ஒரு கட்டுப்பாடு நமக்குக் கிடைக்கும்.
நீங்கள் கேட்ட மற்றொன்று, புன்னகை முகத்தோடும், மலர்ச்சியோடும் மக்கள் வாழ வேண்டும் என்று. இன்றைய நிலை எப்படி உள்ளது எனில், நம் சமூகத்தில் 35 வயதில் இரத்த அழுத்தம் வந்தால், அது பரவாயில்லை. 45 வயதில் சர்க்கரை நோய் வந்தால், அதில் தவறேதும் இல்லை. 50 வயதில் மாரடைப்பு வந்தால் அதுவும் சகஜம்தான் என்று சொல்லி, இதெல்லாம் மனிதனின் வாழ்வில் இயல்பான விஷயங்களாக மாற்றிவிட்டார்கள். ஆரோக்கியமாக வாழ்வது சாத்தியமில்லை என்றே சமூகத்தில் நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது.

விலங்குகள், உயிரினங்களை கவனித்துப் பார்த்தால், ஒரு நிமிடத்திற்கு அவை எவ்வளவு சுவாசம் எடுக்கிறதோ அதற்கும் அதன் ஆயுட் காலத்திற்கும் நெருங்கிய தொடர்புள்ளது.

உதாரணமாக, ஒரு நாய் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 72 முறை சுவாசிக்கிறது. அதன் ஆயுட்காலம் 12 வருடங்கள். குதிரை ஒரு நிமிடத்திற்கு 30 முறை சுவாசிக்கிறது. அதன் ஆயுட்காலம் 25 – 30 வருடங்கள். யானை ஒரு நிமிடத்திற்கு 14 – 18 முறை சுவாசிக்கிறது. அதன் ஆயுட்காலம் 80 – 100 வருடங்கள். மனிதன் ஒரு நிமிடத்திற்கு 13 – 15 முறை சுவாசிக்கிறான். அப்படியெனில், அவன் சரியான சூழ்நிலையில் வாழ்ந்தால், அவன் 160 வருடங்கள் வரை வாழ அவனுக்கு வாய்ப்பு இருக்கிறது.

என்றாலும், இன்றைய காலத்தில் அவன் வாழும் விதத்தில் வெகு சீக்கிரம் அவனது உடல் பழுதடைகிறது. இதனால் அத்தனை ஆண்டுகள் வாழமுடியாமல் அவனது உடல் உடைகிறது. உதாரணமாக, கார் அல்லது மோட்டார் சைக்கிளில் உள்ள எஞ்ஜினை எடுத்துக் கொண்டால் அதில் ஆர்.பி.எம் என ஒன்று உள்ளது. அதாவது ஒரு நிமிடத்தில் எஞ்ஜினில் நடக்கும் சுழற்சியின் அளவு அது. ஒரு நிமிடத்தில் மிக அதிகமாக சுழற்சி நடக்கும் வகையில் காரை ஓட்டினால், அதன் எஞ்ஜின் வெகுவிரைவில் பழுதடைந்துவிடும். அதிவேகமாக இல்லாமல், அதன் திறத்திற்கு ஏற்ற வகையில் செலுத்தப்படும் எஞ்ஜினே நீண்ட நாட்கள் செயல்படும்.

இதுபோல் தான் நம் உடலும் செயல்படுகிறது. உடலை எப்போதும் சீரான நிலையில், தேவையற்ற படபடப்பின்றி (அடக்கி வைக்கும் கோபம், பயம், ஆத்திரம் போன்றவற்றால் உடலில் படபடப்பு ஏற்படும்) அதை செலுத்தினால், அப்போது இயல்பாகவே அதன் ஆயுட்காலம் நீள்கிறது. யோகப் பயிற்சிகளை தினமும் செய்து வந்தால், நம் மீதும், நம் மனம், உணர்ச்சிகள் மீதும் ஒரு கட்டுப்பாடு நமக்குக் கிடைக்கும். இந்தக் கட்டுப்பாடு இருக்கும்போது, தேவையற்ற படபடப்பின்றி நாம் வாழமுடியும். அந்நிலையில் வாழும்போது, முக மலர்ச்சியோடு, புன்னகையோடு, வாழ்வை வாழ முடியும். இதனால் ஆயுட்காலம் இயல்பாகவே அதிகரிக்கும்.
இதையும் வாசியுங்கள்

Tags

Type in below box in English and press Convert