ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முன் நம் தேசத்தில் தோன்றிய மருத்துவ முறையே ஆயுர்வேதம். கடவுளே மனிதனுக்கு பரிமாறிய முறை ஆயுர்வேதம் என்ற நம்பிக்கையும் பரவலாக உள்ளது. ஆயுர்வேதத்தைப் பற்றி சத்குரு என்ன சொல்கிறார் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

ஆயுர்வேதம் என்றால்...

ஆயுர்வேதம் - ஆயுர் என்றால் ஆயுட்காலம், வேதம் என்றால் நூல்கள் - ஒருவரது ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவும் நூல்கள் எனலாம். ஆயுர்வேதம் என்பது வாழ்க்கையின் முற்றிலும் வேறுவிதமான பரிமாணத்திலிருந்து வந்ததாகும். அது மட்டுமல்ல, ஆயுர்வேதம் வாழ்க்கையை முற்றிலும் வேறுவிதமாக புரிந்துக் கொள்வதுமாகும். ஆயுர்வேதக் கட்டமைப்பின்படி, இந்த உடலானது இன்றைய காலக்கட்டத்தில், நாம் இந்த பூமியிலிருந்து சேகரித்த ஒரு குவியல். இந்த பூமியின் தன்மை எதுவாகயிருந்தாலும், இந்த பூமியை உருவாக்கிய பஞ்சபூதங்களின் தன்மை எதுவாகயிருந்தாலும், அவை இந்த பருப்பொருள் உடலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு முழுமையான மருத்துவ முறை என்றால், இந்த உடல் மட்டுமே எல்லாம் என்று பார்க்காமல் இந்த வாழ்க்கையை முழுமையாகக் கவனிப்பது.

அடிப்படையில், இந்த உடலானது, பஞ்சபூதங்களின் ஒரு விளையாட்டுதான். நமது தனிப்பட்ட உடலானாலும், அல்லது இந்த மிகப் பெரிய பிரபஞ்ச உடலானாலும், எல்லாமே இந்த பஞ்சபூதங்களால், அதாவது நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயத்தால் ஆனதுதான். ‘நான்’ என்று நீங்கள் நினைப்பதுகூட, இந்த பஞ்சபூதங்களின் குறும்புத்தனம் தான். காலத்தையும் சக்தியையும் உபயோகப்படுத்தி, உச்சக்கட்ட பலன் தரும் வகையில் நீங்கள் உங்கள் பருப்பொருள் உடலைக் கையாள வேண்டும். நீங்கள், உங்கள் உடலை உபயோகப்படுத்தி என்ன செய்தாலும், அது இந்த பூமியுடன் ஒரு தொடர்பில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிக முக்கியமானது.

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

இந்த பூமியிலுள்ள ஒவ்வொரு வேரிலும், ஒவ்வொரு இலையிலும், ஒவ்வொரு மரப்பட்டையிலும், மருத்துவ குணம் உள்ளது என்று ஆயுர்வேதம் சொல்கின்றது. அதில், நாம் ஒரு சிலவற்றை தான், பயன்படுத்தக் கற்றுக் கொண்டிருக்கின்றோம். மற்றவற்றையெல்லாம் பயன்படுத்த நாம் இன்னும் கற்கவில்லை. இந்த வாக்கியம் கூறுவது என்னவென்றால், ஆரோக்கியம் என்பது வானத்திலிருந்து நம் மீது விழுவதில்லை. நமது உடல், நமக்குள்ளிருந்து வளர்வதுபோல, நமது ஆரோக்கியமும் நமக்குள்ளிருந்து வளரவேண்டும். அதற்கான உள்ளீடு பூமியிலிருந்து கிடைத்தாலும், ஆரோக்கியம் என்பது நமக்குள்ளிருந்து தான் வளர வேண்டும்.

இந்த உடலை நாம் சற்று ஆழமாக உள்நோக்கிப் பார்த்தால், இந்த உடல் என்பது ஒரு முறை நிகழ்வல்ல என்றும் இந்த மண்ணை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொடர்ச்சியான செயல்முறை என்றும் நன்றாகப் புரியும். ஆயுர்வேதத்தின் சாராம்சமும் இந்த அடிப்படையிலேயே இருக்கிறது. உடலுக்கும் மண்ணுக்குமான தொடர்பு சரிவர இயங்கவில்லையென்றால், உள்ளிருந்து இயங்கும் இந்த சூட்சுமமான அமைப்புள்ள மருந்து வேலை செய்யாது. முழு அமைப்பையும் கவனிக்காமல், ஒரு அம்சம் மீது மட்டும் கவனம் செலுத்தினால், அது சரியாக வேலை செய்யாது.

ஒரு முழுமையான மருத்துவ முறை என்றால், இந்த உடல் மட்டுமே எல்லாம் என்று பார்க்காமல் இந்த வாழ்க்கையை முழுமையாகக் கவனிப்பது. அதில் நாம் வாழும் இந்த பூமி, நாம் உண்ணும் உணவு, என்ன சுவாசிக்கிறோம், என்ன அருந்துகிறோம் ஆகிய எல்லாமே அடங்கும். இதனையெல்லாம் கவனிக்காமல், ஆயுர்வேதத்தின் முழுமையான பலனை உணர முடியாது. ஆயுர்வேதம் நமது வாழ்விலும், நமது சமூகத்திலும் ஒரு நிதர்சனமான உண்மையாக விளங்கினால், மக்கள் கடவுளைப்போல வாழலாம்.