சமாதி நிலை என்று அறியப்படும் அவதூத நிலையில் ஒருவர் வாழும்போது, அவரின் தன்மை எப்படிப்பட்டதாக உள்ளது என்பதையும், அப்போது கர்ம வினைகளின் கட்டுக்கள் களையப்படும் விதத்தையும் சத்குரு இதில் பேசுகிறார்!

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

யோகாவின் முழுமுதற் நோக்கமே - "நீங்கள் அல்லாத" பரிமாணங்களை உங்களுக்குள் உருவாக்குவதுதான். "நீங்கள்" என்று நான் சொல்வது, தற்சமயம் நீங்கள் எதனுடன் அடையாளப்பட்டிருக்கிறீர்களோ அதைத்தான். உங்கள் குறுகிய அடையாளங்களைத் தாண்டி உங்களுக்குள் ஒரு இடத்தை உருவாக்குவதே யோகா. முதலில் அது ஒரு சிறு புள்ளியாகத் துவங்குகிறது. அதற்காக இடம் உருவாக்க ஆரம்பித்தால், மனம் சேகரித்திருக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தினால், இந்த இடம் விரிவடைய ஆரம்பிக்கிறது. ஒருநாள் அது உங்களை முழுமையாக ஆட்கொள்கையில் உங்கள் குப்பைகள் உங்களைச் சுற்றி மிதக்கும். உங்களுக்குத் தேவையென்றால் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம், தேவையில்லை என்றால் அது உங்களைத் தொடமுடியாது. அந்நிலையை அடையும்போது, நீங்கள் உண்மையான தியானத்தன்மையில் இருக்கிறீர்கள் என்கிறோம், உங்களை எதுவுமே பாதிக்காதபடி சமாதி எனும் நடுநிலையில் இருக்கிறீர்கள் என்கிறோம்.

இது மிகவும் பரவசமான அற்புதமான நிலை, ஆனால் அந்நிலையில் உங்களை கவனித்துக்கொள்ள ஒருவர் தேவைப்படுவார், இல்லாவிட்டால் அப்படி வாழமுடியாது.

தகவல் குப்பைகளின் கேடயமில்லாமல் நீங்கள் உலகில் வாழமுடியாது. எந்த விளையாட்டும் உங்களுக்குத் தெரியாது, நீங்கள் அவதூதர் போல ஆகிவிடுவீர்கள். இன்று எல்லோரும் இந்தப் பெயரை சூட்டிக் கொள்கிறார்கள், "நான் ஒரு அவதூதர், நீயும் ஒரு அவதூதர்" என்கிறார்கள், அது வேறு விஷயம். உண்மையில் ஒரு அவதூதர் என்றால் அவர் இருக்கும் நிலையில் பச்சிளம் குழைந்தை போல ஆகிவிடுகிறார், அவருக்கு எதுவும் தெரியாது. உணவை ஊட்டி விட வேண்டியிருக்கும், எழவும் அமரவும் கூட உதவ வேண்டியிருக்கும். எப்போதும் ஒரு பரவசத்திலேயே இருக்கும் அவதூதர்களால் வாழ்வின் பிற அம்சங்கள் எதையும் கையாள முடியாது.

அத்தகைய மனிதர், மனதை முற்றாகத் துறந்தவர், எல்லாக் குப்பைகளையும் முழுவதுமாக விட்டொழித்தவர். அவரைக் குழந்தையைப் பராமரிப்பது போல பார்த்துக்கொள்ளவில்லை என்றால் அவரால் உலகில் இருக்க இயலாது. இந்நிலை நிரந்தரமாக நீடிக்காமல் போகலாம், ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு நீடிக்கும். ஆண்டாண்டு காலமாய் அவதூதராகவே இருப்பவர்களும் இருக்கிறார்கள். இது மிகவும் பரவசமான அற்புதமான நிலை, ஆனால் அந்நிலையில் உங்களை கவனித்துக்கொள்ள ஒருவர் தேவைப்படுவார், இல்லாவிட்டால் அப்படி வாழமுடியாது.

அந்த நிலைக்குள் மனிதர்களைத் தள்ளுவது எனக்கு மிகவும் எளிது. அது மிகவும் ஆனந்தமானது, அற்புதமானது, ஆனால் அவர்களைப் பார்த்துக் கொள்ளக்கூடிய மனிதர்கள் எங்கே கிடைப்பார்கள்? இன்றைய சமூகச்சூழலில் இது ஓர் ஆக்கபூர்வமான படியாக பார்க்கப்பட மாட்டாது. அத்தகைய மனிதர்களை மனநிலை பிறழ்ந்தவர்கள் என்று கருதி மனநோயாளிகள் விடுதியில் சேர்த்திட நினைப்பார்கள். அவர் பேரானந்தமாகவே இருப்பார், ஆனால் பார்ப்பவர்களுக்கு அதுவொரு பொருட்டாக இருக்காது.

பாரதத்தில் அவதூதர்கள் கொண்டாடப்பட்டார்கள், வணங்கப்பட்டார்கள். தென்னிந்தியாவில் சில அற்புதமான அவதூதர்களுடன் நாம் தொடர்பில் இருந்துள்ளோம். அவர்கள் நிகரற்றவர்கள், ஆனால் உரிய துணையின்றி அவர்களால் இருக்க முடியாது.

விடுதலை அடையத் துரிதமான வழி என்பதால் யோகிகள் இந்த நிலையில் குறிப்பிட்ட காலத்திற்கு இருப்பார்கள்.

குறுகிய காலங்களுக்கு அத்தகைய நிலைக்கு மனிதர்கள் போவது நல்லது. ஏனெனில், அது உங்கள் கர்மவினைகளின் கட்டமைப்புடைய கீழ்தளத்தை சுத்தப்படுத்துவது போல. உங்கள் கர்மவினைகளின் கட்டமைப்பை 110 மாடிக் கட்டிடமாக நீங்கள் உருவகித்தால், அவதூத நிலையில் அதன் அடிப்பகுதியை நீங்கள் தூய்மை செய்கிறீர்கள், பிறநிலைகளில் இதைச் செய்வது சாத்தியமில்லை. ஒரு மனிதர் இத்தனை ஆழமாய் சென்று தன்னைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால், அதற்கு அபாரமான விழிப்புணர்வு தேவை. ஆனால் அவதூத நிலையில் அடியில் படிந்திருக்கும் கசடுகளை சுலபமாக சுரண்டியெடுக்க முடியும். அவதூத நிலையில் அவர் எதையும் செய்வதில்லை, அவருக்கு எதுவும் தெரிவதில்லை, ஆனாலும் அவரின் கர்மவினைகளும் பிணைப்புகளும் களையப்பட்டுவிடுகின்றன, எல்லாம் சுத்தமாகிறது.

விடுதலை அடையத் துரிதமான வழி என்பதால் யோகிகள் இந்த நிலையில் குறிப்பிட்ட காலத்திற்கு இருப்பார்கள். அதேசமயம் ஓர் அவதூதர், பெரும்பாலும் அவதூதராகவே உடலை விடமுடியாது. விடுதலை என்பது மனித விழிப்புணர்வில் வேரூன்றியிருப்பது. அதனால் அவதூத நிலையில் உடலை விடமுடியாது. உடலை விடும்போது முழு விழிப்புணர்வு நிலைக்கு வந்தாக வேண்டும். அவதூத நிலையிலிருந்து வெளிவந்திருக்கும் அந்த சில விநாடிகளில் நீங்கள் மீண்டும் கர்மவினைகளை உருவாக்கிட முடியும். அவதூதராகவே வாழ்ந்து, கிட்டத்தட்ட அனைத்திலிருந்தும் விடுபட்டு, கடைசி க்ஷணங்களில் அந்நிலையை விட்டு வெளியே வந்தபோது மீண்டும் அவர்களின் கர்மவினையில் சிக்கிக்கொண்ட சிலரை நமக்குத் தெரியும். மிக எளிய கர்மப்பிணைப்புகள் தான், ஆனால் அதிலிருந்து விடுபடும் வழிகளை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

குப்பைகளின் கேடயமொன்று இல்லாமல் உலகில் நீங்கள் வாழமுடியாது. உங்களுக்குள் இடையறாது இயங்கிக்கொண்டிருக்கும் இருமைநிலைகளுக்கு இடையிலான தவறான புரிதலிலிருந்து இந்த குப்பை உருவாகிறது. இந்த இருமை நிலைகளை நீங்கள் கடந்துவிட்டால், உங்களுக்குள் ஒரு தெளிவான இடம் உருவாகிவிடுகிறது, இருமைநிலைகள் உங்களுக்கு வெளியே இயங்கும். நீங்கள் விரும்பினால் விளையாட்டினை விளையாடலாம், இல்லையெனில் நீங்கள் உள்ளபடியே நலமாக இருப்பீர்கள். இப்படி இருக்கையில் உங்கள் குப்பைகள் உங்களுக்குள் ஒரு பாகமாய் இருக்காது, ஆனால் குப்பையின் கையிருப்பு மட்டும் இருக்கும். தேவைப்பட்டால் அந்தக் குப்பையை பயன்படுத்தலாம், ஆனால் நீங்கள் அதுவாகவே இருக்கமாட்டீர்கள்.