சத்குருவுடன் சேகர் கபூர் - பகுதி 4

சத்குருவுடன் சேகர் கபூர் உரையாடியத் தொகுப்பின் இந்த வாரப் பகுதியில், ஈஷா அன்பர்கள் ஏன் பக்தர்களாகிறார்கள்? என்பதையும், சிவனின் மகன் கணபதியான கதையையும் தெரிந்துகொள்ளலாம்.



சேகர் கபூர்:
ஈஷாவில், இங்கு அனைவரையும் பார்க்கும்போது, பெரும்பாலானோரிடம் பக்தி உணர்வைப் பார்க்க முடிகிறது. சிலர் அதை வழிபாடு என்று கூட சொல்லக்கூடும்.
மக்களைப் பார்த்தவுடன் என் கண்களில் நீர் வழிவதைப் பார்த்து அவர்கள் மீது நான் அன்பாக இருப்பதாக கூறினால் அதன் மதிப்பைக் குறைப்பதாகத்தான் நினைப்பேன். ஏனெனில் அன்பு என்பது ஒரு வகை கொடுக்கல் வாங்கல் கொண்டது.என் நிலையோ அனைவரையுமே என்னுள் இணைத்துக் கொள்ளும் ஒரு மேம்பட்ட பரிமாணம்.

சத்குரு: பொதுவாக நாம் இங்கே பக்தியை உபதேசிப்பதுமில்லை, ஊக்கப்படுத்துவதுமில்லை. ஆனால் ஏன் மக்கள் இவ்வாறு இருக்கிறார்கள் என்றால், இப்போது நீங்கள் பாலைவனத்தில் இருப்பதாக வைத்துக் கொள்ளலாம். தண்ணீர் கிடைக்காமல் நா வறண்டு விட்டது. உயிர் போய்விடும் போல் இருக்கிறது. அந்த நேரத்தில் யாராவது வந்து ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்தால், நன்றியால் நிறைந்து, இயல்பாகவே அவருக்கு தலை வணங்குவீர்கள், இல்லையா?

சேகர் கபூர்: ஆமாம்.

சத்குரு: அதைத்தான் இங்கேயும் பார்க்கிறீர்கள்.இங்குயாரும் அவர்களுக்கு இப்படி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லித் தரவில்லை. அது போன்று எப்போதும் இங்கு ஊக்கப் படுத்துவதில்லை. ஆனால், இங்கு தங்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதனால் அவர்கள் மூழ்கடிக்கப்படுவதால், இயல்பாகவே தலைவணங்குகிறார்கள். நான் உங்களை ஒரு கேள்வி கேட்க வேண்டும்...

சேகர் கபூர்: கேளுங்கள்.

சத்குரு: ஒருவர் தன்னை ஒரு அறிவாளி என நினைக்க ஆரம்பிக்கும்போது, அவர் ஏன் பக்திக்கு எதிராக இருக்கிறார்? நீங்கள் திரைப்படம் உருவாக்குபவர். பக்தி உணர்வு இல்லாமல் உங்களால் ஒரு நல்ல திரைப்படம் எடுக்க முடியுமா?

சேகர் கபூர்:
முடியாது. ஒரு ஆழமான உணர்வு அதாவது பக்தி உணர்வு இல்லாமல் அப்படி ஒரு திரைப்படம் தயாரிக்க முடியாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு: பக்தி இல்லாமல் உங்கள் வாழ்க்கையில் அழகான விஷயமே நடக்க முடியாது.

சேகர் கபூர்:
ஆம்.

சத்குரு: எனவே ஒரு தனி நபராகப் பார்த்து என் மீது அவர்கள் பக்தி செலுத்தவில்லை. தாங்கள் உயர்நிலை அடைவதற்கான ஒரு வாய்ப்பாக பார்த்துத்தான் என் மீது பக்தி உணர்வுடன் இருக்கிறார்கள்.

சேகர் கபூர்: நேற்றுகூட யோகா வகுப்பு முடிந்தவுடன் பார்த்தேன். யோகா வகுப்பில் தன்னார்வத் தொண்டு செய்தவர்கள் நின்றிருந்தார்கள். அவர்களுடனான உங்கள் உறவை நேற்று பார்த்தேன். இயேசு வந்தார், செல்லும் இடமெல்லாம் அன்பைப் பரப்பினார் என்பதாக எல்லாம் படித்திருக்கிறேன். அது எப்படி அன்பைப் பரப்ப முடியும் என்று யோசித்திருக்கிறேன். ஆனால் நானே அதை நேற்று கண்கூடாகக் கண்டேன். உங்களைப் பார்த்த அன்பர்களின் கண்களில் கண்ணீர் தாரைத் தாரையாக வழிகிறது. அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவர்களைப் பார்த்தவுடன் உங்கள் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. அவர்கள் எப்படி உங்களிடம் பக்தி உணர்வோடு அப்போது இருந்தார்களோ நீங்களும் அதேநிலையில்தான் அவர்களுடன் இருந்ததாகவே நான் உணர்கிறேன்.

சத்குரு: அவர்கள் ஒரு பக்தராக, பக்தி உணர்வுடன் இருந்தார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் என் வாழ்க்கையை நான் அவர்களுக்கு பக்தியுடன் அர்ப்பணித்திருக்கிறேன். அது மட்டும் உறுதி. எனவே மக்களைப் பார்த்தவுடன் என் கண்களில் நீர் வழிவதைப் பார்த்து அவர்கள் மீது நான் அன்பாக இருப்பதாக கூறினால் அதன் மதிப்பைக் குறைப்பதாகத்தான் நினைப்பேன். ஏனெனில் அன்பு என்பது ஒரு வகை கொடுக்கல் வாங்கல் கொண்டது.என் நிலையோ அனைவரையுமே என்னுள் இணைத்துக் கொள்ளும் ஒரு மேம்பட்ட பரிமாணம்.

சேகர்கபூர்: சத்குரு, இங்கு என்ன கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கிறது? கற்சட்டங்கள் மிகவும் தடிமனாக உள்ளன.

சத்குரு: இங்கு ஒரு தேவிக்கு சந்நிதி(லிங்கரைபவி சந்நிதி) உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

சேகர்கபூர்: இங்கு முகப்பில் இருக்கும் கற்சிலையை பூதகணம் என்று சொன்னீர்கள். அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

சத்குரு: பூதகணங்கள் என்பவர்கள் சிவ பெருமானின் நண்பர்கள். சிவனுக்கு மனைவி இருந்தாலும், பக்தர்கள் இருந்தாலும், அவர் எப்போதும் இவர்களின் நெருக்கத்தில்தான் இருப்பார். பூதகணங்கள் என்பவர்கள் சிதைவுற்ற உடலமைப்பைக் கொண்டவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். உடலுறுப்புகள் இருக்கும், ஆனால் எலும்புகள் இருக்காது. ஆனால் இங்கு இந்த சிலையில் அப்படி காண்பிக்கப்படவில்லை.

குறிப்பாக நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், அவர்கள் நம்மைப்போல் உடலமைப்பு கொண்டவர்கள் இல்லை. இந்த விஷயம் ஜீரணிக்க சிறிது கடினமாக இருக்கலாம். ஆனால் சிவன் எப்போதும் ஒரு யக்ஷா ஸ்வரூபனாகத்தான் சித்தரிககப்படுகிறார். யக்ஷா என்றால் வானுலகத்தை சார்ந்தவர் அல்லது எங்கோ இருந்து வந்தவர். சிவனும் அவரது நண்பர்களான பூத கணங்களும் மனிதர்களுக்கு புரியாத மொழியில்தான் பேசிக் கொண்டார்கள். உங்களுக்கு கணபதி தலையை இழந்த கதை தெரியுமல்லவா?

ஒரு சமயம், சிவன் வெளியே சென்று வந்த போது குழந்தையாக இருந்த கணபதி அவரை தடுக்கப்போக, சிவன் கணபதியின் தலையை வெட்டிவிட்டார். உடனே துக்கத்தில் ஆழ்ந்த பார்வதி சிவனை இறைஞ்சி நிற்க, சிவன் தனது நண்பர்களின் ஒருவர் தலையை வெட்டி கணபதியின் உடலில் பொருத்தி விட்டார். அன்று முதல், இனி என் ஆட்களுக்கு நீதான் தலைவன் என்று கூறி பூத கணங்களின் தலைவனாகவும் ஆக்கினார். அன்று முதல் அவர் கணபதி என்று அழைக்கப்பட்டார். கஜபதி என்றல்ல.

நாம்தான் அவரை கஜபதி ஆக்கி விட்டோம். பூத கணத்தின் தலை என்னும்போது அது எலும்புகள் அற்ற உறுப்பு என்பதால் நாம்தான் அதை யானையின் தலையாக உருவகப்படுத்தி இப்போது உள்ளது போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுத்திருக்கிறோம.

எனவே, இங்கு நாம் முகப்பில் வைத்திருப்பது அப்படிப்பட்ட ஒரு பூத கணத்தின் சிலைதான். மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாம் இதை சிறிது மனிதத்தனமாக உருவாக்கி இருக்கிறோம்.

தொடரும்…


அடுத்த வாரம்...

லிங்கபைரவியின் கட்டிட அமைப்பு முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டதன் காரணம், ஆணுக்குள் இருக்கும் பெண்தன்மை எனப் பல சுவாரஸ்யப் பகுதிகள் அடுத்த வார உரையாடலில் இடம் பெறுகின்றன.