"20 வயதுப் பெண் நான். நல்ல நகைச்சுவைக்கு வாய்விட்டுச் சிரிப்பவள். 'சத்தம் போட்டுச் சிரித்தால், பின்னாலேயே துக்கம் வந்து தாக்கும். ஓவென்று அழ வேண்டியிருக்கும்' என்று என் அம்மா கோபப்படுகிறார். இதில் உண்மை இருக்கிறதா? மனதுக்குள் சிரிப்பதுதான் நல்லதா?"

சத்குரு:

பெண்கள் சிரிக்கக் கூடாதா?

"என் கொள்ளுப்பாட்டி பற்றி நிறையச் சொல்லி இருக்கிறேன். எறும்புகளுக்கு உணவு கொடுத்தாலே அவளுக்கு வயிறு நிரம்பிவிடும். ஆனந்தமாகச் சிரித்து ஆடிக்கொண்டு இருப்பாள். அவள் வாய்விட்டு அதிரடியாகச் சிரிக்கையில், அந்த ஊரே குலுங்கும், இவள் என்ன சாத்தான்போல் இப்படிப் பேய்ச் சிரிப்பு சிரிக்கிறாள்? என்று பார்ப்பவர்கள் சொல்வார்கள்.

சிரிப்பு உங்களிடம் பொத்துக்கொண்டு வருகிறது என்றால், உங்களிடம் எல்லாம் சரியாக இருக்கிறது என்று அர்த்தம்.

'சாத்தான்தான் சிரிக்கும். கடவுள் அழும் என்றால், சாத்தானாக இருப்பதே மேல்' என்று அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன். இன்றைக்கும் பல மதங்களில் சாத்தான்கள்தாம் சிரிக்கின்றன. கடவுள் 'உம்' என்று முகத்தை வைத்துக்கொண்டு இருப்பதைத்தான் பார்க்கிறேன். இந்தச் சமூகத்தில் பெண்கள் சிரித்தால், அது மிகப்பெரிய பிரச்சினையாகிவிடுவது ஏன்? சிரிக்கத் தெரியாத பெண்ணுடன் எப்படி ஆண் வாழமுடியும்? எனக்குப் புரியவில்லை.

ஆனந்தமான சிரிப்பு பல அடைப்பட்ட கதவுகளைத் திறக்கவல்லது!

வில்லியம் கௌபர் இயற்றிய நாடகம்

18ம் நூற்றாண்டில் வில்லியம் கௌபர் என்ற ஆங்கிலக் கவிஞர் இருந்தார். அவர் ஒரு மாலை நேரத்தில், மிகவும் சோர்வாக எதையோ பறிகொடுத்ததுபோல் இருந்தார். அவர் மனநிலையை மாற்றி, அவருடைய வாட்டத்தைப் போக்கி சந்தோஷத்தைக் கொண்டுவர, ஆஸ்டின் என்ற அவருடைய தோழி முடிவு செய்தாள். தன் சிறுவயதில் சந்தித்த 'ஜான் கில்பின்' என்ற நபரைப்பற்றி அவரிடம் விவரித்துச் சொன்னாள். கேட்கக் கேட்க கவிஞரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. மகிழ்ச்சியுடன் புறப்பட்டுப்போன கவிஞர், மறுநாள் தோழியைத் தேடி வந்தார்.

'நீ சொன்ன கதையை நினைத்து நினைத்துப் பொங்கிப் பொங்கிச் சிரித்துக்கொண்டு இருந்ததால், நேற்றிரவு என்னால் தூங்கவே முடியவில்லை. உலகத்திற்கே அந்தக் கதையைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்' என்றார்.

'ஜான் கில்பின்' என்று ஒரு கதாபாத்திரத்தை வைத்து அவர் எழுதிய இசை நாடகம் மாபெரும் வரவேற்பைப் பெற்று இலக்கியச் சரித்திரத்திலேயே இடம் பெற்றுவிட்டது.

சிக்கியுள்ள சுழற்சி

ஆனந்தமாகச் சிரிக்கும்போதுதான் மனிதன் முழுமை பெறுகிறான். சிரித்தால் பின்னாலேயே அழுகை வந்துவிடும் என்று சொல்வதற்கு வேறு ஒரு காரணம் இருக்கலாம். இந்தப்பூமி, சூரிய மண்டலம், இப்படிப் பொருள்தன்மை கொண்ட எதுவும் ஒரு சுழற்சிக்குக் கட்டுப்பட்டதுதான். உள்ளுணர்வு பற்றிய கவனம் இல்லாமல், பொருள் தன்மையாகவே வாழ்கிற மனிதன், மற்ற மிருகங்களைப்போல் அந்தச் சுழற்சிகளில் சிக்கிப்போக வேண்டியதுதான். ஜனனம், மரணம் என்பதே அப்படிப்பட்ட ஒரு சுழற்சிதான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சந்தோஷம், துக்கம் என்ற சுழற்சிகள் மனித மனதில் ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்ட நினைவுகளால் அமையப்பெற்றவை. அந்தச் சுழற்சிகளுக்குள் சிக்கிக்கொண்டவர்களுக்கு எதைச் செய்கிறார்களோ, அதற்கு நேர் எதிரான விஷயம் அடுத்து நடக்கக்கூடும்.

நீங்கள் மனிதராகப் பிறந்ததே இந்தக் கர்ம சுழற்சிகளைத் தகர்த்து, விடுபட்டு வெளியே வரவேண்டும் என்பதற்காகத்தான். வாழ்க்கையின் எல்லா விதிச் சுழற்சிகளையும் தகர்த்து, சிறைப்படுத்தும் தளைகளில் இருந்து விடுபடுவதுதான் ஆன்மீகத்தின் அடிப்படை. யோகாவின் அடிப்படை நோக்கமும் அதுதான்.

சிரிப்பு உங்களிடம் பொத்துக்கொண்டு வருகிறது என்றால், உங்களிடம் எல்லாம் சரியாக இருக்கிறது என்று அர்த்தம். உங்கள் அம்மா இளமையாக இருந்தபோது, அவரும் வெடித்துச் சிரிக்கத்தான் ஆசைப்பட்டு இருப்பார். அது அப்போது இயலாமல் போயிருக்கலாம். அவரை மற்றவர்கள் கட்டுப்படுத்தி இருக்கலாம்.

'அங்கே என்னடா சத்தம்?' என்று அம்மா கத்தினாள்.

'அம்மா, நம் வீட்டில் ஒரு பூஜாடி, தலைமுறை தாண்டி தலைமுறையாக வந்துகொண்டு இருக்கிறது அல்லவா?' என்று மகனின் குரல் வந்தது.

'ஆமாம் கண்ணா, அதற்கு என்ன?'

'இந்தத் தலைமுறையோடு அந்த வழக்கம் முடிந்துபோய்விட்டது அம்மா!'

சென்ற தலைமுறையோடு சிரிப்பது பற்றி இருந்த அச்சம் இப்படி ஒழிந்துபோகட்டும். உங்கள் அம்மாவிடம் பழைய அச்சங்களை உதறி, இப்போதாவது சந்தோஷமாக, ஆனந்தமாக வாய்விட்டுச் சிரிக்கச் சொல்லுங்கள். அவர் சிரிப்பது மட்டுமல்ல, உங்களையும் உலகத்தையும் சிரிக்க அனுமதிக்கட்டும்.

கர்மா என்றால் விதியா?

கர்மா என்பது தலையில் எழுதப்பட்ட விதி அல்ல, கடவுள் எழுதிவைத்தது அல்ல, எனக்கு எது நடந்தாலும் அது நானே உருவாக்கியதுதான் என்பதை அழுத்தம் திருத்தமாகப் புரியவைத்து ஒரு பக்குவத்தைக் கொண்டுவருவதற்காகவே கர்மா என்பது பயன்படுத்தப்பட்டது.

சிரித்தால், துன்பம் வரும் என்று சிரிக்காமல் இருந்தால், அப்புறம் மனிதராகப் பிறந்ததற்கு என்ன பயன்?

மனிதனின் விழிப்புணர்வு இந்தக் கர்ம சுழற்சிக்கு அப்பாற்பட்டது. அந்த விழிப்புணர்வுடன் வாழ்ந்து வந்தால், ஆனந்தத்தின் அடுத்தடுத்த கட்டங்களுக்குப் பயணப்படலாம். ஆனந்தத்தின் சிகரத்தைக்கூட தொடலாம். அப்படி இருக்கையில், எதற்காக இந்தச் சுழற்சிகளில் சிக்கிப்போக வேண்டும்?

இன்று காலையில் சாப்பிட்டீர்களே, போன வருடம் சமைத்ததையா... இல்லை, புதிதாகச் சமைத்ததையா? பழைய கர்மாவைப் பற்றி நீங்கள் நினைக்கத் தேவை இல்லை. இப்போது, இந்தக் கணத்தில் செய்யும் கர்மாதான் ரொம்ப முக்கியமானது, அதை மறக்காதீர்கள். இந்தச் சுழற்சிகளில் சிறைப்பட்டுப் போகாமல், தளைகளை உடைத்துவிட்டு வெளியே வருவதற்குப் பல ஆன்மீகப் பயிற்சிகள் இருக்கின்றன.

தொடர்ந்து சிரித்துக்கொண்டு ஆனந்தமாக இருக்கமுடியும் என்று ஓர் அற்புத வாய்ப்பு இருக்கையில், துக்கத்தை எதிர்பார்த்து எதற்காக அச்சம்கொள்ள வேண்டும்? சிரித்தால், துன்பம் வரும் என்று சிரிக்காமல் இருந்தால், அப்புறம் மனிதராகப் பிறந்ததற்கு என்ன பயன்?

நீங்கள் முதலில் செய்யவேண்டியது எல்லாம் உங்கள் அம்மாவையும் வாய்விட்டுச் சிரிக்கவைப்பது தான். அதேசமயம் ஆனந்தம் இல்லாமல், வலுக்கட்டாயமாகச் சிரிக்கப் பார்த்தால், அது பைத்தியக்காரத்தனத்தில் கொண்டுவிடும். இது புரியாமல், சிரிக்கும் யோகா என்று வலுக்கட்டாயமாகச் சிரிக்கச் சொல்லும் அபத்தமான செயலும் ஆங்காங்கே நடக்கின்றன

குடிப்பதை விட்ட சங்கரன்பிள்ளை

சங்கரன்பிள்ளை எப்போது பாருக்கு வந்தாலும் இரண்டுபேருக்கான மதுவை ஆர்டர் செய்வார். ஒன்றைக் குடித்து முடித்துவிட்டு, அடுத்ததைக் குடிப்பார். இதைக் கவனித்து பாரை நடத்துபவர் ஆச்சர்யமாகி, அவரிடம் விசாரித்தார்.

'அதுவா? என் நெருக்கமான நண்பன் ஒருவனுடன் வந்து குடிப்பது வழக்கம். அவன் இறந்துவிட்டான். ஆனாலும் அவனுக்காக இரண்டாவது கோப்பையைக் குடிக்கிறேன்'.

சிலமாதங்கள் கழித்து சங்கரன்பிள்ளை வந்து ஒருவருக்கான மதுவை மட்டும் ஆர்டர் செய்தார்.

'ஏன் சார், என்னாயிற்று?' என்றார் பாரை நடத்துபவர்.

'நேற்றோடு நான் குடிப்பதை விட்டுவிட்டேன்' என்றார் சங்கரன் பிள்ளை.

யாரோ சொன்னதற்காகச் சிரிப்பதும், அடுத்தவருக்காகக் குடிப்பதுபோல்தான். ஆனந்தத்தில் திளைத்தீர்கள் என்றால், புன்னகையும் சிரிப்பும் தாமாகவே உங்கள் முகத்தில் வந்துசேரும். சிரிப்பு என்பது ஒரு செயல் அல்ல, அது ஒரு விளைவு. நீங்கள் 20 வயதுப் பெண் என்பதால் சொல்கிறேன். உங்களை அழகாகக் காட்டிக்கொள்ள மூக்கையும், கண்களையும், கன்னத்தையும் திருத்தி அமைத்துக்கொண்டு இருக்கத் தேவையில்லை. மூக்கு சரியான அமைப்பில் இல்லாவிட்டாலும் ஆனந்தமான முகமாக இருந்தால், அதைவிட அழகான வேறு முகம் இங்கே கிடையாது.

இந்த உலகமே அருளும் அன்பும் பொங்க ஆனந்தச் சிரிப்பால் நிறைந்திருக்க வேண்டும் என்பதே என் கனவு!"