நம் ஆசைகளால் தான் துன்பங்கள் விளைகின்றன என்ற தவறான புரிதலை தகர்க்கும் விதமாக சத்குரு தரும் இந்த உரை அமைகிறது! ஒருவர் ஆசைகொள்வதன் உளவியலை ஆராய்வதோடு, ஆசைகள் எப்போது பிரமாதமான ஒரு கருவியாகும் என்பதையும் சத்குரு எடுத்துரைக்கிறார்!

Question: நம் ஆசைகளைக் கட்டுப்படுத்தி, அவற்றை எப்படிக் கையாள்வது?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

ஆசைகள் வலியையும் வேதனையையும் உண்டு செய்யும்போது, அவற்றை வெவ்வேறு வழிகளில் மக்கள் கையாள்கின்றனர். நீங்கள் ஆசைகளைக் ‘கட்டுப்படுத்துவது’ என்று கூறினாலும், உண்மையில் நீங்கள் செய்ய நினைப்பது ஆசையை ‘சுருக்குவது’தான். ஆசையின் அளவை குறைப்பது, நீங்கள் அடையும் துயரத்தின் அளவை நிச்சயம் குறைக்கப் போவதில்லை. ஒரு சின்ன ஆசையும் கூட உங்களுக்கு அளவற்ற வேதனையைக் கொடுக்க முடியும்.

ஆசைகள் உங்களைத் துன்புறுத்துகிறது என்றால், அதற்குக் காரணம், அதுதான் ஆசையின் இயல்பு என்பதால் அல்ல. ஆசைகள் உங்களைத் துன்புறுத்துவதற்குக் காரணம், நீங்கள் உண்மை அல்லாதவற்றில் ஊறியிருப்பதால்தான்.

ஆசையை வைத்துக் கொள்ளலாமா, வேண்டாமா என்பது போன்ற கேள்விக்கே இடமில்லை. ‘வாழ்க்கை என்றால் என்ன, அதன் இயல்பு என்ன’ என்று புரியாததினால்தான், மக்கள் இப்படி ஆசை-அற்றநிலையை அடைய எண்ணுகிறார்கள். உண்மையில் ஆசையற்ற வாழ்க்கை என்று எதுவுமில்லை. இக்கணத்தில் உங்களுக்குள் உயிர் துடித்துக் கொண்டிருப்பதே கூட வாழ வேண்டும் என்ற ஆசையால்தான். ஆனால் அந்த ஆசையோடு உங்கள் எண்ணத்தையும், உணர்வுகளையும் இணைத்துச் செயல்படுகிறீர்களா, இல்லையா என்பதுதான் கேள்வி. ஆனால் அது உங்கள் வாழ்க்கைச் சூழ்நிலைகளைப் பொறுத்தும் இருக்கிறது.

உதாரணத்திற்கு, நீங்கள், சாலையோரமாக, அமைதியாக, நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நடப்பதையே அனுபவித்து நடந்து கொண்டிருக்கிறீர்கள். இதுவும் ஒரு ஆசைதான். ஆனால் அந்த ஆசையுடன் நீங்கள் விழிப்புணர்வாக எந்த எண்ணத்தையும் உணர்ச்சியையும் சேர்த்துக் கொண்டிருக்கவில்லை. ஆசை என்பது அந்த சூரியன் போல. இரவில் சூரியன் இருக்கிறதா? இருக்கிறதுதான், ஆனால் அதை நீங்கள் உணரமுடிவதில்லை. மதியத்தில் இருந்ததுபோன்றேதான் சூரியன் இரவிலும் இருக்கிறான், ஆனால் இப்பூமியில் நீங்கள் இருக்கும் இடத்தில், அந்நேரத்தில், சூரியனை அவ்வாறு உணரமுடிவதில்லை. அதேபோல்தான், ஆசை எல்லா நேரத்திலும் இருக்கிறது. சிலநேரம் அதன் வெப்பத்தை உணர்கிறீர்கள், சிலநேரம் அது தணிந்துபோய் இருக்கிறது. தகித்திடும் ஆசைகள், சாதாரண ஆசைகள் எல்லாம் உங்களுக்கு வந்திருக்கிறதுதானே? ஆசைகள் சிலநேரம் தகித்திடும், சிலநேரம் சாந்தமாய் இருக்கும், சிலநேரம் தீயாய் சுட்டெரிக்கும், சிலநேரம் சாதாரணமாய் இருக்கும். ஆனால் ஆசைகள் எப்போதுமே இருக்கும். உயிர் இருந்தால் ஆசையும் இருக்கும்.

அப்படியென்றால் எது துயரத்தை வரவழைக்கிறது? உங்கள் ஆசையின் அடிப்படையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் உடல் இந்த பூமியைச் சேர்ந்தது. இந்த உடல் உங்களுக்குச் சொந்தமல்ல, அது நீங்கள் சேகரித்தது மட்டுமே. பூமியிடமிருந்து கடனாகப் பெற்றிருக்கிறீர்கள், அவ்வளவுதான். இக்கடனை வசூல் செய்யும் நேரம் வரும்போது, சிலர் அழுவார்கள், சிலர் சந்தோஷமாகச் செல்கிறார்கள். இது அக்கடனை அவர்கள் எப்படிப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதைப் பொறுத்து அமைகிறது.

உதாரணத்திற்கு, நீங்கள் ஒருவரிடம் 10 கோடி ரூபாய் கடன் பெற்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த 10 கோடி ரூபாயை முதலீடாய் வைத்து, இரண்டே வருடத்தில் அதை 100 கோடியாய் பெருக்கிவிட்டீர்கள் என்றும் வைத்துக் கொள்வோம். இப்போது கடன் கொடுத்தவர் உங்கள் வீட்டிற்கு வந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அவரை வரவேற்று, மரியாதை செய்து, அவர் கொடுத்த 10 கோடியையும், அதனோடு சேர்த்து 10% அல்லது 20% அதிகமாகவே கூட அவருக்குத் திருப்பிக் கொடுப்பீர்கள். ஆனால் இதுவே அவரிடம் பெற்ற 10 கோடியை எவ்வாறோ தொலைத்துவிட்டீர்கள் என்றால், அவர் வரும்போது பயத்தில் நீங்கள் நடுநடுங்க ஆரம்பித்து விடுவீர்கள். ஒரு கடன்காரர் அல்லது மரணம் - இவற்றில் யாரை சந்திக்கத் தயாராக இருக்கிறீர்கள் என்னும் நிலை வரும்போது பலரும் மரணத்தை சந்திக்கவே துணிந்திருக்கிறார்கள்.

இதேநிலை உங்களுக்கும் பொருந்தும். இப்பூமியில் இருந்து இவ்வுடலை கடன் பெற்றிருக்கிறீர்கள். அதை வைத்து வாழ்க்கையை நீங்கள் பிரமாதமாக உணர்ந்துவிட்டீர்கள் என்றால், கடனைத் திருப்பித் தரும் நேரம் வரும்போது, சந்தோஷமாக அதை திருப்பித் தந்துவிடுவீர்கள். ஆனால் வாழ்வில் எதையுமே உணரவில்லை எனில், மரணம் உங்கள் முன் வரும்போது, பயத்தில் நீங்கள் அரண்டுபோவீர்கள். உங்களிடம் இருக்கும் பொருள்நிலையிலான அனைத்துமே நீங்கள் சேகரித்தவை - உங்கள் உடலும், மனமும் உட்பட. உங்கள் உடல் என்பது இம்மண்ணை எடுத்து நீங்கள் உருவாக்கிக் கொண்டது. உங்கள் மனம் என்பது சமுதாயக் குப்பைத்தொட்டி. உங்கள் மனத்தில் இருக்கும் யோசனைகளும், எண்ணங்களும், உணர்வுகளுமே கூட நீங்கள் வெளியில் இருந்து சேகரித்தவைதான். இப்படி நீங்கள் சேகரித்த உங்கள் உடல்-மனக் குவியல்களின் நடுவே, நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் சேகரித்தவை உங்களுடையதாக இருக்கலாம், ஆனால் அது என்றுமே ‘நீங்களாக’ ஆக முடியாது.

ஆசைகள் உங்களைத் துன்புறுத்துகிறது என்றால், அதற்குக் காரணம், அதுதான் ஆசையின் இயல்பு என்பதால் அல்ல. ஆசைகள் உங்களைத் துன்புறுத்துவதற்குக் காரணம், நீங்கள் உண்மை அல்லாதவற்றில் ஊறியிருப்பதால்தான். நீங்கள் சேகரித்தவை அனைத்தையும் ‘நீங்கள்’ என்று எண்ணுகிறீர்கள், அதனால்தான் நீங்கள் சேகரித்தவை குறித்த சரியான புரிதல் உங்களுக்கு இல்லை. யார் என்ன சொன்னாலும், எத்தனை விளக்கம் கொடுத்தாலும், அது உங்களுக்குத் தெளிவாகாது.

உங்கள் உடைகளை சற்றே தளர்வாக நீங்கள் அணிந்திருந்தால், ‘இது நான்... இது என் உடை’ என்று உங்களுக்கு தனித்தனியாகத் தெளிவாகத் தெரியும். ஆனால் இதுவே உடலோடு ஒட்டிவிடும் ‘டைட்ஸ்’ போன்ற உடையை நீங்கள் அணிகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். சில நேரம் சென்றபின், எது நீங்கள், எது உங்கள் உடை என்ற உணர்வே உங்களுக்கு இல்லாமல் போய்விடும். கிட்டத்தட்ட அந்த உடை நீங்களாகவே ஆகிவிடும், ஏனெனில், அதற்கும் உங்களுக்கும் இடையே இடைவெளி இல்லை.

அதேபோல்தான், உங்களுக்கும் உங்கள் உடலுக்கும், உங்களுக்கும் உங்கள் மனதிற்கும், இடையே சிறிது இடைவெளி வேண்டும். அந்த இடைவெளி இருந்தால்... உங்கள் உடலையும், மனதையும் நீங்கள் சற்றே தளர்வாக அணிந்திருந்தால், பின் மிகத் தெளிவாக உங்களுக்குப் புரியும்: உடலும் மனமும் என்னுடையது, ஆனால் அவைகளே ‘நான்’ அல்ல என்பது. இந்த வித்தியாசத்தை உங்கள் அனுபவத்தில் நீங்கள் உணரும்போது, பிறகு நீங்கள் முற்றிலும் வேறுவிதமான நிலையில் இருப்பீர்கள். அப்போது ஆசை என்பது பிரமாதமான கருவியாக இருக்கும், துயரத்திற்கான அடித்தளமாக இருக்காது.