அருள் பெறுவதற்காக பலர் பல காலங்கள் காத்துக்கிடக்க, சிலர் தன்னைத் தேடிவரும் அருளினை ‘அருள்வாக்கு’ என்ற பெயரில் சிதறடிப்பதைப் பார்க்கமுடிகிறது. ஆனால், அருள்வாக்கினால் சில நல்லதும் நடப்பதாக சொல்கிறார்களே! அப்படியென்றால் அருள்வாக்கு சொல்லலாமா, வேண்டாமா? அருள்வாக்கு சொல்லும் தனது அம்மா குறித்து சத்குருவிடம் ஒருவர் கேட்டபோது…

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

Question: என் அம்மா கோவில் போன்ற பக்தியான இடங்களுக்கு சென்றால் பல நேரங்களில் அவர்களுக்கு அருள் வரும். அப்போது அவர் அருள்வாக்கு சொல்வார். பல வருடங்களாக குழந்தையே இல்லாத ஒரு தம்பதிக்கு இன்னும் 8 வருடங்களில் குழந்தை பிறக்கும் என்றார்கள், அப்படியே நடந்தது. நம் கலாச்சாரத்தில் பல இடங்களில் இப்படி அருள்வாக்கு சொல்வது நடக்கிறது. இதெல்லாம் சரிதானா? சிறு வயதிலிருந்தே எனக்கு இந்தக் கேள்வி இருக்கிறது...

சத்குரு:

அருள் நம்மைத் தேடி வருகிறது என்றால் உடனே நாம் வாயை மூடி அமைதியாகிவிட வேண்டும். இதை முதலில் உங்கள் அம்மாவிற்கு சொல்லுங்கள். அருள் நம்மைத் தேடி வருவது என்பது நாம் வளர்வதற்கான ஒரு வாய்ப்பு. இது எப்படி என்றால், நமக்குத் தாகமாக இருக்கிறது, நமது தாகம் தணிக்க ஒருவர் தண்ணீர் கொடுக்கிறார். அதை முழுமையாகக் குடித்துக் கொள்ள வேண்டும்தானே? அதை விட்டுவிட்டு கொடுத்தவர் மேலேயே ‘உஃப்’ என்று துப்பிவிட்டால் என்ன பிரயோஜனம்? நம் முன்னாடி வருபவர் மேல் எல்லாம் துப்பிக் கொண்டிருந்தால் எப்படி? அப்படி துப்பக்கூடாது. அந்தத் தண்ணீரை முழுமையாகக் குடித்துக் கொள்ள வேண்டும். அப்படிக் குடித்தால் இந்த உயிர் வளர்கிறது. துப்பிவிட்டால் என்ன ஆகும்?

அருள் வரும்போது, அதை உங்கள் வளர்ச்சிக்காகவும், இந்த உயிர் மலர்வதற்காகவும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஏதோ ஒரு சக்தி வந்தால், நம் மக்களுக்கு உடனே அதை வைத்து கடை பரப்பிவிட வேண்டும்! அப்படி செய்யாதீர்கள். 8 வருடம் கழித்து குழந்தை பிறக்கும் என்று சொன்னதால் உங்கள் அம்மாவிற்கு என்ன கிடைத்தது? எப்படியோ அந்தக் குழந்தை 8 வருடம் கழித்து பிறக்கத்தான் போகிறது. அதை நீங்கள் ஏன் சொல்ல வேண்டும்? வாய்மூடி இருக்க வேண்டும்தானே? அல்லது 8 வருடத்தில் வருவதை 4 வருடத்தில் வருமாறு செய்ய முடியுமா? இதே காரணத்தால்தான், ஈஷாவில் கூட, இந்த மாதிரி எல்லாம் மக்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக பல தடைகளை வைத்திருக்கிறோம். இல்லையென்றால் ஈஷாவில் இருக்கும் பலரே கடை விரித்து விடுவார்கள், இல்லையா?

உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு சொட்டு ஆன்மீகமாவது கிடைக்க வேண்டும் என்பதற்காக நாம் செயல் செய்து வருகிறோம். ஆனால் அந்த ஒரு சொட்டு கிடைத்தாலே பலர் கடை விரித்து விடுவார்கள். அதனால் அருள் வந்தாலும் அது வந்தமாதிரி தெரியக்கூடாது என்பதற்காக ஈஷாவில் நாம் பல செயல்களை செய்கிறோம், பல தடைகளை வைக்கிறோம். நான் இப்படி கை தட்டினாலே ஈஷாவில் பலருக்கும் அது போன்ற அருள் வருகிறது. ஆனால் 8 வருடம், 10 வருடம் என்றெல்லாம் இவர்களுக்கு சொல்லத் தெரியாது. வெறுமனே, சக்தி அதிகரிப்பால், ‘பே’ என்று கத்திக் கொள்கிறார்கள், அவ்வளவுதான்.

எனவே அருள் வரும்போது, அதை உங்கள் வளர்ச்சிக்காகவும், இந்த உயிர் மலர்வதற்காகவும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.