நம் பெற்றோர்கள் 60 வயதை எட்டிவிட்டால், அவர்களுக்கு சஷ்டியப்தபூர்த்தி எனும் 60ம் கல்யாணத்தை செய்கிறோம். இதை ஏன் செய்ய வேண்டும்? இது எல்லோரும் கட்டாயமாக செய்ய வேண்டிய சடங்கா? இதற்கு சத்குரு தரும் பதில் இங்கே.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

நம் பாரம்பரியத்தில் ஒரு குழந்தை பிறந்து 12 வயது ஆகும் வரை, அந்த பருவத்தை, பாலாவஸ்தா என்பார்கள். அப்போது குழந்தை செய்வதெல்லாம், விளையாட்டு, சாப்பாடு, தூக்கம் அவ்வளவுதான். அதற்கு மேல் அவன் ஏதும் செய்யத் தேவையில்லை. 12 வயது நிறைவுற்றதும் அவனுக்கு பிரம்மோபதேசமும் அதன்பின் வித்தியாபியாசம் அதாவது கல்வி கற்பித்தலும் நடக்கும். பிரம்ம உபதேசம் என்பது இது எனது, இது எனதில்லை என்று பிரித்துப் பார்க்காமல் அனைத்திலும் பிரம்மனைக் காணக் கற்றுத் தருவது. இந்த தன்மை இல்லாத மனிதருக்கு கல்வி கற்பிக்கக் கூடாது. ஏனெனில் கல்வி என்பது ஒரு பெரும் சக்தி. அவர், இவர், எனது, எனதில்லை, வேண்டும், வேண்டாம் என்று பிரித்துப் பார்க்கும் மனிதருக்கு சக்தியைக் கொடுத்துவிட்டால் அவரால் பிரச்சனைகள்தான் ஏற்படும்.

வானப்பிரஸ்தா செல்லும்முன், அவர்கள் ஏற்கனவே 12 வருடங்கள் பிரிந்திருந்ததால், அவர்களுக்கு மீண்டும் திருமணம் செய்து அனுப்பும் வழக்கம் நமது கலாச்சாரத்தில் இருந்தது.

எனவே 12 வயதில் பிரம்மோபதேசம் கொடுத்து அதன்பின் அடுத்த 12 வருடங்கள் அதாவது 24 வயது வரை வித்தியாபியாசம் கொடுத்தார்கள். அவன் தன் வீட்டில் இருக்கக்கூடாது. ஒரு குருவிடம் சென்று அங்கேயே தங்கி அனைத்தையும் கற்றுக் கொள்வான். அப்போது அவனுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவை போதிக்கப்படும். இந்த நிலையை பிரம்மச்சரியம் என்றார்கள். 12 வருடங்கள் குருவிடம் தேவையான கல்வி கற்று தன் 24வது வயதில் தேவையான அறிவு பெற்றவராக இருப்பார். இப்போது அவருக்கு ஆர்வம் இருக்கும்பட்சத்தில் பிரம்மச்சரிய நிலையிலிருந்து துறவு நிலைக்கு நேரடியாகச் சென்றுவிடலாம். அல்லது திருமணம் செய்து கொண்டு அடுத்த 24 ஆண்டுகள் இல்லற வாழ்க்கையில் இருக்கலாம்.

அந்த 24 வருட தாம்பத்திய வாழ்க்கையின் பிறகு, அதாவது அவருடைய 48வது வயதில், குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி இருப்பார்கள். இந்த நேரத்தில் கணவன், மனைவி இருவரும் தனித்தனியாகப் பிரிந்து சன்னியாசம் எடுப்பார்கள். ஓரிடத்திற்கு சென்று 12 வருடம் ஆன்மீக சாதனை செய்து தன்னை உணர்ந்த நிலையில் திரும்பி வருவார்கள். 12 வருடங்கள் தனித்தனியாக இருந்த கணவனும் மனைவியும் இப்போது அவருடைய 60வது வயதில் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.

அவர்களுக்கு முதல் முறை திருமணம் நடந்தபோது அவர்களுக்கு உடல் ஆர்வம் முக்கியமாக இருந்தது. ஆனால் இப்போது கணவனுடைய 60வது வயதில், அவர்கள் இருவரும் உடல் ஆர்வத்தினால் ஒன்று சேரவில்லை. வேறு ஒரு ஆழமான தன்மையை உணர்ந்த நிலையில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். இப்போது இவர்கள் காட்டிற்குச் சென்று மீதி வாழ்க்கையை வேறொரு தன்மையில் ஒன்றாக சேர்ந்து வாழ விரும்புகிறார்கள். இந்த வாழ்க்கையைத்தான் வானப்பிரஸ்தா என்றனர். வானப்பிரஸ்தா செல்லும்முன், அவர்கள் ஏற்கனவே 12 வருடங்கள் பிரிந்திருந்ததால், அவர்களுக்கு மீண்டும் திருமணம் செய்து அனுப்பும் வழக்கம் நமது கலாச்சாரத்தில் இருந்தது.

ஆனால் இப்போது வீட்டில் சேர்ந்து வாழ்ந்து கொண்டே 60வது வயதில் மீண்டும் இன்னொரு முறை திருமணம் செய்து கொள்கிறார்கள். இதில் ஒன்றும் அர்த்தமில்லை. இப்போது இது வெறும் சடங்காகத்தான் இருக்கிறது.