சத்குரு:

நம் யோகக் கலாச்சாரத்தில் ஆயிரமாயிரம் ‘தன்னை உணர்ந்த’ குருமார்கள் இருந்திருக்கிறார்கள். உலகின் வேறு எந்த பகுதியிலும், வேறு எந்த ஆன்மீகக் கலாச்சாரத்திலும், இத்தனை குருமார்கள் இருந்ததில்லை. பலவிதமான முறைகளும், வழிகளும், இயக்கங்களும் இந்தக் கலாச்சாரத்தில் வளர்ந்து வந்துள்ளன. ஒவ்வொரு குருவும், தனக்கென ஒரு பாணியும் வழிமுறையும் வைத்திருந்தார். தன்னைச் சுற்றி இருக்கும் மக்களுக்கு எது பொருத்தமோ அத்தகைய முறையை வகுத்து வழங்கினார்.

குரு என்பவர் உங்களுடைய தற்போதைய நிலையை வைத்து உங்களை அணுகுவதில்லை. பின்னொரு நாள் நீங்கள் என்னவாக முடியும் என்ற வாய்ப்பையே அவர் பார்க்கிறார். உங்களுக்குள் நீங்கள் அந்த வாய்ப்பை சுமந்திருக்கிறீர்களா என்று மட்டும் தான் பார்க்கிறார். அது மட்டும் தான் குருவுக்கு முக்கியம்.

அடிப்படையில் யோகத்தின் நோக்கம், நீங்கள் யார் என்பதை உணர்வது தான். இதற்காகத்தான் பல முறைகள் வகுக்கப்பட்டுள்ளன, பல கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன, பல இயக்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை அனைத்துமே ஒவ்வொருவரையும், தான் யார் என்று உணர வைப்பதற்காகத்தான். குருமார்கள், பல விசித்திரமான வழிகளில் இதை மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு குருவும் தனக்கென்று அமைத்துக்கொண்ட பாணியில் செயல்பட்டார். அவர்கள் ஒவ்வொருவரும் சமூகத்தில் வெவ்வேறு அளவில், வெவ்வேறு வகைகளில் எதிர்ப்புகளை சந்தித்தனர். ஏனென்றால், சமூகத்தின் கட்டமைப்பு அப்படி இருந்தது.

நூறு வருடங்களுக்கு முன் ஒரு குரு வந்து சில வழிகளை வகுத்திருப்பார். இப்போது வேறு ஒருவர் வருகிறார். தன் பாணியில் செயல்படுகிறார். அது முன்பு வந்தவரின் வழியைக் காட்டிலும் முழுவதும் வித்தியாசமாக இருக்கிறது. இப்போது சமூகம் என்ன நினைக்கும்? பழைய குரு சரியா அல்லது இவர் சரியா? இருவரில் யாரை விலக்கலாம் என்று யோசிக்கும். ஆன்மீகம் என்றால், பல வழிகள் இருக்கக்கூடும் என்று பார்க்கமாட்டார்கள்.

இது எனக்கு ஒரு கதையை நினைவூட்டுகிறது. ‘ரிபு’ என்று ஒரு முனிவர் இருந்தார். அவரை ரிபு மஹரிஷி என்று அழைத்தனர். அவருக்கு ‘நிதாகா’ என்று ஒரு சிஷ்யர் இருந்தார். கவனக்குறைவும் குறும்புத்தனமும் உள்ளவர் நிதாகா. ஆனால் குருவுக்கு அவர் மேல் தனிப்பிரியம். இது மற்ற சிஷ்யர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. “நிதாகாவுக்கு சிறிதும் கவனம் என்பதே இல்லை, இருப்பினும் நம் குருவுக்கு நம்மைவிட அவர் மீது மட்டும் தனிப்பிரியம் எதற்கு?” என்று பொருமினார்கள்.

குரு என்பவர் உங்களுடைய தற்போதைய நிலையை வைத்து உங்களை அணுகுவதில்லை. பின்னொரு நாள் நீங்கள் என்னவாக முடியும் என்ற வாய்ப்பையே அவர் பார்க்கிறார். உங்களுக்குள் நீங்கள் அந்த வாய்ப்பை சுமந்திருக்கிறீர்களா என்று மட்டும் தான் பார்க்கிறார். அது மட்டும் தான் குருவுக்கு முக்கியம். ஒருசமயம் நிதாகா தன் குருவை விட்டு விலகிப் போய்விட்டார். ஆனால் ரிபு மஹரிஷியோ சிஷ்யர் எங்கிருந்தாலும் அவ்வப்போது போய் பார்த்துவிட்டு வருவார். ஆனால் நிதாகா, இச்சந்திப்புகளை அவ்வளவாக விரும்பவில்லை. எனவே ரிபு மஹரிஷி எப்போதுமே மாறுவேடத்தில் சென்று, தன் சிஷ்யனை பார்த்து ஆசீர்வாதம் செய்துவிட்டு வருவார். அவரை வழிநடத்தவும் செய்வார். ஒரு நாள், ரிபு மஹரிஷி ஒரு கிராமத்து மனிதனைப் போல வேடம் தரித்து நிதாகா இருக்கும் இடத்திற்குச் சென்றார். அப்போது அரசன் யானை அம்பாரியில் ஊர்வலம் வந்து கொண்டிருந்தார். நிதாகா ஊர்வலத்தை மிக்க ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

ரிபு, நிதாகாவின் அருகில் சென்று “என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். நிதாகா அவரை முறைத்துப் பார்த்து, தனக்குத்தானே, “எல்லோரும் ஊர்வலத்தைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மடையனுக்கு, எல்லோரும் எதை வேடிக்கை பார்க்கிறார்கள் என்று கூட புரியவில்லையே..” என்று எண்ணியவாறு, “மன்னருடைய ஊர்வலத்தைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!” என்று கூறினார். “இதில் மன்னர் எங்கே இருக்கிறார்?” என்று ரிபு மஹரிஷி கேட்க, “உனக்கு கண் தெரியவில்லையா? மன்னர் யானை மீது அமர்ந்திருக்கிறார்” என்றார் நிதாகா. “அது சரி, இதில் மன்னர் யார்?” என்று ரிபு மஹரிஷி கேட்க, நிதாகாவுக்கு கோபம் வந்துவிட்டது.. “முட்டாளே.... பார்த்தால் தெரியாதா? மேலே அமர்ந்து இருப்பது மன்னர். கீழே இருக்கும் விலங்கு தான் யானை.” உடனே ரிபு மஹரிஷி, “மேலே, கீழே என்று சொன்னீர்களே... மேலே என்றால் என்ன? கீழே என்றால் என்ன? எனக்குப் புரியவில்லையே...”

சலனமற்ற, அசைவற்ற மனதைப் பெற யோகத்தில் பலவிதமான கருவிகளும் பலவிதமான வழிமுறைகளும் உள்ளன.

இப்போது நிதாகாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது. “அடேய் முட்டாள்! உனக்கு மேலே, கீழே, என்றால் தெரியாது? பார்ப்பதும் கேட்பதும் உன் புத்திக்கு எட்டுவதில்லை போலும். உனக்கெல்லாம் சொன்னால் புரியாது, இப்போது செய்து காட்டுகிறேன் பார்” என்று கூறிவிட்டு, ரிபு மஹரிஷியை குனியவைத்து அவர் தோளில் நின்று கொண்டார். “இப்போது நான் மேலே இருக்கிறேன், நீ கீழே இருக்கிறாய். நான் தான் மன்னர், நீ தான் விலங்கு. என்ன புரிந்ததா?” என்று கேட்டார்.

“ஓ! இப்பொழுது மனிதன், விலங்கு என்பவை புரிகின்றன. மேலே, கீழே என்பதும் புரிந்துவிட்டது. ஆனால்.... ‘நான்’ என்றும் ‘நீ’ என்றும் ஏதோ சொல்கிறாயே... அது தான் புரியவில்லை. ‘நான்’ என்று எதைச் சொல்கிறாய்? ‘நீ’ என்று எதைச் சொல்கிறாய்?” என்று கேட்டார் ரிபு மஹரிஷி.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இதைக் கேட்டதும், “நான் யார்?” என்னும் அடிப்படைக் கேள்வி நிதாகாவை ஆழமாகத் தாக்கியது. வந்திருப்பது தன் குருவைத் தவிர வேறு யாராகவும் இருக்கமுடியாது என்று உணர்ந்து, மாறுவேடத்தில் இருந்த ரிபுவின் காலில் விழுந்தார். அந்த கணமே தன்னை உணர்ந்தார்.

எனவே ஒவ்வொரு குருவுக்கும் ஒரு தனி பாணி இருக்கும். சிலருடைய வழி சூட்சுமமாக இருக்கும். சிலருடையது நாடகத்தன்மையுடன் இருக்கும். ஈஷாவின் வழி என்ன தெரியுமா? ...ம்ஹும். அதை நான் சொல்லிவிட்டால், எனக்குத் தான் கஷ்டம். ரகசியத்தை வெளியே சொல்லிவிட்டால், அது வேலை செய்யாதே! மீண்டும் ஒரு புது வழியை வகுக்கவேண்டி இருக்கும். எனவே நான் சொல்ல மாட்டேன் (சிரிக்கிறார்). இந்த வழிமுறைகள் எல்லாம் எப்படித் தெரியுமா? அப்படியே பின்பற்றினால் எல்லாம் நன்றாக வேலை செய்யும். ஆனால் நான் அதை விளக்கிச் சொன்னால், நீங்கள் அதை யோசிக்க ஆரம்பித்து விடுவீர்கள்... பின்னர் அது வேலை செய்யாது.

இங்கு நாம், நமக்கே உரித்தான வகையில், வழிமுறைகளை வகுத்துள்ளோம். சிலருக்கு சூட்சுமமாக, சிலருக்கு நாடகத் தன்மையுடன், வேறு சிலருக்கோ தலையில் ஓங்கி அடிப்பது போன்ற வன்மையான வழிமுறைகள் இப்படி பல வழிகள் நம்மிடம் உள்ளன.

இன்னும் சொல்லப்போனால் உண்மையை உணர்வது என்பதே மிகப்பெரிய மாயை தான். ஏன் என்றால் உண்மை என்று கூறப்படுவது, எங்கும் எப்போதும் இருக்கிறது. அதை எப்படித் தேடுவது? அதை எப்படி உணர்வது? அதை நாம் தேடத் தேவை இல்லை. அது இங்கே தான் இருக்கிறது. ஒரே பிரச்சினை என்னவென்றால், உங்கள் மனம் தாண்டி உங்களால் வாழ்வை உணர முடியவில்லை. வாழ்க்கை முழுவதையும் உங்கள் மனம் மூலம் தான் உணர்கிறீர்கள். அது மிகவும் எல்லைக்கு உட்பட்ட அனுபவமாக இருக்கிறது. இதுதான் உங்கள் முன் இருக்கும் ஒரே பிரச்சினை.

வெளிச்சூழல் என்பது எப்போதும் 100% நம் கையில் இருப்பதில்லை. நீங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவராக இருந்தாலும், வெளிச்சூழல் 100% உங்கள் கையில் இருப்பதில்லை. எனவே தான் யோகா! யோகா ஒருவருடைய உள்சூழல் பற்றியது. கச்சிதமான உள்சூழல் அமைந்துவிட்டால், வெளியே என்ன நடந்தாலும் நீங்கள் அமைதியிலும், ஆனந்தத்திலும் தான் மிதப்பீர்கள்.

பதஞ்சலி முனிவர் “யோகா என்றால் சித்த விருத்தி நிரோதா” என்று விளக்கம் தந்தார். ‘மனதின் மாறுபாடுகளை நிறுத்திவிட்டால், மனதின் செயல்பாடுகளை நிறுத்திவிட்டால், அது தான் யோகா’ என்றார். மனதின் செயல்பாடுகளை நிறுத்திவிட்டால், நீங்கள் யோகநிலையில் தான் இருக்கிறீர்கள். இப்போது உங்கள் உணர்வில் எல்லாமே ஒன்றாகிவிட்டது. எனவே, யோகாவில், மனதின் செயல்பாடுகளை நிறுத்த பல வழிகள் உள்ளன.

நாம் நம் வாழ்வில் பல விஷயங்களை செய்து கொண்டிருப்போம். பல விஷயங்களை அடைந்திருப்போம். ஆனால் மனதின் மாறுபாடுகளை கடந்து போவது மிகவும் அடிப்படையான ஒன்று. அதேசமயம், அதுவே மிகவும் உயர்ந்த சாதனையும் கூட. ஏனென்றால், இது தேவைகளில் இருந்து ஒருவரை விடுவிக்கிறது. உள்ளே இருக்கும் விஷயங்களில் இருந்தும், வெளியே இருக்கும் விஷயங்களில் இருந்தும், அனைத்திலிருந்தும் விடுவிக்கிறது. மனதின் மாறுபாடுகளை நிறுத்துவதன் மூலம் மட்டுமே ஒருவருக்கு தன் முழுமை நிலையை அடையும் வாய்ப்பு அமைகிறது.

நாம் நம் வாழ்வில் பல விஷயங்களைத் தேடுகிறோம்; அதை அடைய எதை எதையோ செய்கிறோம். எதைத் தேடினாலும், செய்தாலும் மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும் என்றுதான் செய்கிறோம். சிலர் தம் முழு வாழ்நாளை செலவு செய்தும், மகிழ்ச்சியோ அமைதியோ அடைவதில்லை. மகிழ்ச்சியில்லாது இருப்பதும், அமைதியில்லாது இருப்பதும் கூட மனதின் வெவ்வேறு நிலைகள் தான், உங்கள் சக்தியின் குறிப்பிட்ட வெளிப்பாடுகள்தான்.

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, உங்கள் சக்தி ஒருவிதமாக வெளிப்படுகிறது. நீங்கள் துன்பமாக இருக்கும்போது அதே சக்தி, வேறுவிதமாக வெளிப்படுகிறது. எரிச்சலாக, கோபமாக, பதட்டமாக அல்லது பயத்துடன் இருக்கும்போது அதற்கேற்றபடி ஒவ்வொரு விதமாக வெளிப்படுகிறது. ஒரே சக்தி வெவ்வேறு வகைகளில் வெளிப்படுகிறது.

பலருடைய வாழ்வில் அவர்கள் கண்ட மகிழ்ச்சியும் அமைதியும் எளிதில் தொலைந்துவிடக் கூடியதாக இருக்கிறது. ஏனென்றால், அந்த மகிழ்ச்சியும் அமைதியும் வெளிச்சூழலைப் பொறுத்து தான் இருக்கிறது. எனவே, பலர், பெரும்பாலும், வாழ்வில் வெளிச்சூழலை சிறப்பாக ஏற்படுத்திக் கொள்ளவே முற்படுகின்றனர். ஆனால் அம்முயற்சி பலன் தராது. ஏனென்றால், வெளிச்சூழல் என்பது எப்போதும் 100% நம் கையில் இருப்பதில்லை. நீங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவராக இருந்தாலும், வெளிச்சூழல் 100% உங்கள் கையில் இருப்பதில்லை.

எனவே தான் யோகா! யோகா ஒருவருடைய உள்சூழல் பற்றியது. கச்சிதமான உள்சூழல் அமைந்துவிட்டால், வெளியே என்ன நடந்தாலும் நீங்கள் அமைதியிலும், ஆனந்தத்திலும் தான் மிதப்பீர்கள்.

இப்போது அவர்கள் எல்லோருக்கும் புரிந்தது, ஆயிரம் யானைகளைக் கொல்பவரை விட, ‘இந்த மனம், அஹங்காரம் என்னும் இந்த இரண்டு மதயானைகளை வெல்பவர் தான் உண்மையான வீரர்’!

இது தென்னிந்திய யோகக் கலாச்சாரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை எனக்கு நினைவு படுத்துகிறது. தத்வராயா என்று ஒரு பக்தர் இருந்தார். அவர் தன் வாழ்வில் மிக அற்புதமான ஒரு குருவை எதிர்கொண்டார். அவர் பெயர் ஸ்வரூபானந்தா. அவர் ஒரு மௌன குரு. சாதாரண மனிதராக அங்கொன்றும், இங்கொன்றுமாக, சில வார்த்தைகள் மட்டும் பேசுவார். ஆனால், ஒரு குரு என்ற முறையில் அவர் யாரிடமும் பேசமாட்டார். தத்வராயருக்கு தன் குருவோடு இருப்பது பேரானந்த அனுபவமாக இருந்தது. எனவே, அவரைத் தலைவராக வைத்து, ‘பரணி’யை இயற்றினார். பரணி என்பது ஒருவிதமான தமிழ் காப்பியம்; வீரதீர செயல்கள் செய்த தலைவனைப் போற்றிப் பாடப்படுவது.

தத்வராயர் இயற்றிய பரணிக்கு சமூகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட பேசாத ஒரு மனிதரைப் போற்றி பரணியா? எப்போதும், சும்மாவே உட்கார்ந்து இருக்கிறார். வேறு ஏதும் செய்ததாகவும் தெரியவில்லை. வீரர்களுக்கு மட்டுமே பாடப்படும் பரணி இவருக்கு எதற்கு?

பழங்காலத்தில் வீரன் என்றால், ஆயிரம் யானைகளை போரில் கொன்றவன் தான் வீரன். உங்களுக்கு புரியும்படி சொல்வதென்றால்... வீரப்பன் தெரியுமா? (சிரிக்கிறார்) அவரால் ஆயிரம் யானைகளைக் கொல்ல முடியும். வீரன் என்றால் அவரைப் போல் இருக்க வேண்டும் என்று அக்காலத்தில் நிர்ணயித்து இருந்தார்கள். சும்மா இருப்பவர் வீரனா? இப்படி தத்வராயர் இயற்றிய பரணிக்கு கடும் எதிர்ப்பு.

ஆனால் தத்வராயர், “என் குரு இதற்குத் தகுதியானவர் தான், இதைவிட மேலான பாடல்களுக்கும் தகுதியானவர் அவர். என்னால் முடிந்தது இந்த பரணி தான்” என்றார். இது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. ஊரில் பெரும் விவாதங்கள் நடந்தன. இதெல்லாம் சரிப்படாது... இவர்களை எல்லாம் குருவிடம் அழைத்துச் சென்றால் தான் நல்லது என்று அவர்களை காட்டில் இருக்கும் தன் குருவிடம் அழைத்துச் சென்றார்.

குரு அங்கு ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்தார். எல்லோரும் அவர் முன் சென்று அமர்ந்து கொண்டார்கள். தத்வராயர், “உங்கள் மீது நான் பரணி இயற்றினேன். அது வீரத் தலைவருக்கே உரியது என்று இவர்கள் எல்லாம் சொல்கிறார்கள்” என்று விளக்கினார். இதைக் கேட்ட குரு அமைதியாக உட்கார்ந்து இருந்தார். மற்றவர்களும் அமைதியாக உட்கார்ந்து இருந்தார்கள். அப்படியே சில மணி நேரங்கள் கழிந்தன. அப்படியே மௌனமாக உட்கார்ந்து இருந்தார்கள். சில நாட்கள் அப்படியே கழிந்தன. அப்படியும் அனைவரும் அப்படியே உட்கார்ந்து இருந்தார்கள்.

இப்படியே எட்டு நாட்கள் கழிந்தன. இன்னும் எல்லோரும் அப்படியே அமர்ந்து இருந்தார்கள். ஸ்வரூபானந்தா தன் மனதை சிறிது அசைத்தார். இப்போது எல்லோருடைய மனங்களும் விழித்துக் கொண்டன. எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன. இப்போது அவர்கள் எல்லோருக்கும் புரிந்தது, ஆயிரம் யானைகளைக் கொல்பவரை விட, ‘இந்த மனம், அஹங்காரம் என்னும் இந்த இரண்டு மதயானைகளை வெல்பவர் தான் உண்மையான வீரர்’! இவர் முன்னால் சும்மா தானே உட்கார்ந்து இருந்தோம். எட்டு நாட்களுக்கு நமக்குள்ளும் இந்த இரண்டு யானைகள் அசையாது இருந்தனவே...! “இவர் தான் பரணிக்குத் தகுதியான தலைவர்” என்று அனைவரும் வணங்கி ஒப்புக் கொண்டார்கள்.

குறிப்பு:

ஜூலை 9ம் தேதி, ஈஷா யோக மையத்தில் குரு பௌர்ணமி கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. ஆதியோகிக்கு அர்ப்பணிப்பாய், நமது நன்றியை அவருக்கு வெளிப்படுத்த இந்நாள் ஒரு நல்ல வாய்ப்பு. சத்குருவுடனான சத்சங்கமும் அன்று நடைபெறும். குருவின் அருளில், இத்தினத்தை கொண்டாடிட தங்களை அன்புடன் அழைக்கிறோம்.