அர்ப்பணிப்பு

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், நம் சக்தி முழுவதையும் ஒரே நோக்கத்தில் செலுத்துவதன் அவசியத்தைப் பற்றி பேசும் சத்குரு அவர்கள், சிவனிடம் அன்பை மட்டும் செலுத்தாதீர்கள், உங்கள் வேட்கையும், உங்கள் தாபமும், உங்கள் கோபமும் அவன்பால் இருக்கட்டும் என்று புது வழி சொல்கிறார். ஒரு நோக்கில் குவிக்கப்பட்ட சக்தி நகரத் துவங்கும் என்கிறார். படித்து மகிழுங்கள்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: நமஸ்காரம் சத்குரு, உங்களுடைய ஒரு உரையில் நம் சக்தி முழுவதும் சிவனை நோக்கி செலுத்த வேண்டும் என்று நீங்கள் சொல்லி இருந்தீர்கள். "அது அன்போ, காமமோ, கோபமோ, வேட்கையோ அத்தனையும் சிவனை நோக்கி இருக்க வேண்டும்," என்று சொன்னீர்கள். அன்பை அவர் மீது செலுத்த வேண்டும் என்பது சாத்தியமாக தெரிகிறது, ஆனால் கோபத்தையும், காமத்தையும், வேட்கையையும் அவர் மீது செலுத்துவது எப்படி? எனக்கிது புரியவில்லை.

சத்குரு:

உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துத்தான் நீங்கள் எதையுமே உங்கள் வாழ்வில் செய்ய முடியும். உங்களிடம் இல்லாததைக் கொண்டு உங்களால் எதையும் செய்ய இயலாது. அதனால் உங்களிடம் என்ன இருக்கிறதோ அதைப் பயன்படுத்துங்கள். இது சிவனுக்கு என்ன கிடைக்கும் என்பதைப் பற்றிய விஷயமல்ல. உண்மையில், அவனுக்கு உங்களிடமிருந்து எதுவும் தேவையில்லை. நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதையும், உங்கள் சக்தி அத்தனையையும் ஒரே திசையில் செலுத்துவது மிக முக்கியம். உங்களுடையது அனைத்தையும் ஒரே திசையில் செலுத்தாவிட்டால் நீங்கள் எங்குமே செல்ல இயலாது.

உங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் மீது தாபத்துடனும், நண்பர் மீது பகையுடனும், சிவனின் மேல் அன்பை மட்டும் கொண்டிருந்தால் நீங்கள் ஐந்து திசைகளில் செல்லத் துவங்கிவிடுவீர்கள். தன்னை ஐந்து திசைகளில் இழுத்துச் செல்லும் மனிதர் நிச்சயமாக தனது பயணத்தின் மேல் அக்கறைக் கொண்ட மனிதராக இருக்க இயலாது. அதுவே உங்கள் அத்தனை விஷயங்களையும் ஒரே திசையில் செலுத்தினால் நீங்கள் எங்கோ ஓரிடத்திற்குச் செல்வீர்கள். உங்களிடம் அன்போ வெறுப்போ, தாபமோ பொறாமையோ கிடையாது, இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களிடம் இருப்பதெல்லாம் உயிர் மட்டும்தான். அதனிடமிருந்து நீங்கள் எதை உருவாக்கிக் கொள்கிறீர்கள் என்பது உங்கள் கைகளில் உள்ளது. அதனிலிருந்து நீங்கள் அன்பை உருவாக்கலாம், போரானந்தத்தை உருவாக்கலாம், மனஅழுத்தத்தையோ வெறுப்பையோ உருவாக்கலாம். அதனை நீங்கள் சுகமானதாக, சுகமற்றதாக, அழகானதாக, அருவருக்கத்தக்கதாக என எப்படி வேண்டுமோ அப்படி உருவாக்கிக் கொள்ளலாம்.

அழகான கதை ஒன்றுள்ளது... மைசூர் செல்லும் வழியில் நஞ்சன்கூட் என்றொரு இடமுண்டு. நஞ்சன்கூடை அடுத்து இடதுபுறமாக ஒரு சிறிய ஆசிரமம் உள்ளது, அதன் பெயர் மல்லண்ணா மூலை. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மல்லா என்றொரு மனிதர் வாழ்ந்தார். அந்தக் காலகட்டத்தில், தென்னிந்தியாவில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரங்களில் மைசூரும் ஒன்று. மிக அழகான நகரமது, அதை ஆண்ட அரசனுக்கு கலையுணர்ச்சி சற்றே மிகுந்திருந்தது. அவர் அழகான மாளிகையையும் தோட்டங்களையும் உருவாக்கினார்.

வணிகம் செய்யவும், வாழ்வாதாரத்திற்காகவும் சுகத்திற்காகவும் கூட மக்கள் மைசூருக்கு செல்வதுண்டு. இன்னும் சொல்லப் போனால் அத்தனை விஷயங்களுக்கும் மக்கள் மைசூரைத் தேடிச் சென்றனர். கால்நடையாகவோ அல்லது மாட்டு வண்டியிலோ மக்கள் அங்கு செல்வர். மைசூரிலிருந்து 16 மைல் தொலைவில் இருக்கும் மல்லாவின் இந்த இடத்திற்கு வரும்போது மல்லா அவர்களை களவாடிவிடுவார். இதைக் கண்டறிந்த மக்கள் அவருடன் ஓர் உடன்படிக்கைக்கு வந்தனர். அதனால் மல்லா வருமான வசூல் செய்பவர் ஆகிவிட்டார். அவ்விடத்தை கடந்து செல்லும் ஒவ்வொருவரும் மல்லாவிடம் ஒரு ரூபாய் பணம் செலுத்திச் சென்றனர். அந்தக் காலத்தில் ஒரு ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை. மக்களுக்கு இது பிடிக்காமல் போகவே, மல்லாவை "கள்ளா" என அழைக்கத் தொடங்கினர். அதனால் அவ்விடம் "கள்ளன் மூலை" ஆனது.

வருடம் முழுவதும் வசூல் செய்த பணத்தை கொண்டு மஹாசிவராத்திரி தினத்தை கோலாகலமாகக் கொண்டாடினார் மல்லா. அத்தினத்தில் முழு நகரத்திற்கும் உணவளித்தார். வசூல் செய்த பணத்தைக் கொண்டு அவர் ஆடம்பரமாக வாழவில்லை, தனக்கென்று ஒரு சிறு நிலத்தை மட்டுமே வைத்திருந்தார். ஆனால் அனைவரிடமும் கொள்ளையடித்த அவர், சிவனுக்கு பிரம்மாண்டமாய் விழா எடுத்தார். சிவ பக்தர்களான, வீரசைவ முறையைச் சேர்ந்த இரண்டு துறவிகள், சூழ்ச்சியாக பிறரிடம் கொள்ளையடித்து மஹாசிவராத்திரியைக் கொண்டாடும் இவர்தம் பக்திமுறையைக் கண்டு சங்கடமுற்றனர். "இந்த பண்டிகையைக் கொண்டாட வேறுசில வழிகள் உள்ளன" என மல்லாவிடம் பேசி அவரை இதிலிருந்து மீட்டனர். அவர்கள் இருவரும் ஒரு சிறு ஆசிரமத்தை உருவாக்கினர், அங்கு மல்லாவும் ஒரு துறவியானார். மூவருமே மஹாசமாதி அடைந்தனர்.

சிவன் தன் அன்பர்களால் எவ்வாறு இன்புற்றான் எனச் சொல்லும் பல அற்புதமான கதைகள் உள்ளன. அவர்கள் ஏதோ கொஞ்சம் தங்கத்தை கொடுத்ததாலேயோ அல்லது வைரத்தை வழங்கியதாலோ அவன் இன்புறவில்லை, அவர்களிடத்தில் என்ன இருந்ததோ அதை வழங்கியதால் இன்புற்றான். இதிலிருந்து நாம் பெறும் செய்தி, "உள்ளதை அர்ப்பணியுங்கள்" என்பதே. ஏனெனில், இயற்கையைப் பொருத்த மட்டில், உங்களிடம் இல்லாததை நீங்கள் அர்ப்பணிக்க முடியாது.

அதனால் எந்த ரூபத்தில் நான் அர்ப்பணிப்பது என்பதல்ல கேள்வி, மாறாக உங்களை முழுமையாக அர்ப்பணியுங்கள். அர்ப்பணிப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கை ஒருமுகப்படும். ஒருமுகமானவுடன் அது நகரத் துவங்கும். அதுவே ஐந்து முக நட்சத்திரமாக இருந்தால் உங்கள் வாழ்க்கை எந்தத் திசையிலும் நகராது. ஐந்து திசைகளில் விறைப்பான இழுவிசையையே அது உண்டாக்கும். ஒரு ஆயுதத்தை உருவாக்கும்போது அது ஆழமாக ஊடுறுவ வேண்டும் என்பதற்காக அதனை ஒரு முனையுடன் உருவாக்குவீர்கள் அல்லவா? அது கூர்மையாக இருக்க வேண்டும். கூர்மையாக இருக்கிறதென்றால் அதன் திசைகளுக்கும் வரையறைகள் இருக்கும்.

Love & Grace