ஆரோக்கியமாய் வாழ யோக மரபிலிருந்து சில குறிப்புகள்

arogyamai-vazha-yoga-marabilirunthu-sila-kurippugal

புத்தகம் முழுதும் படித்தாயிற்று, ஆனால் நான் இன்னும் யோகா எதுவும் கற்றுக்கொள்ளவில்லையே, என்னைப் போன்றவர்கள் என்ன செய்ய என்கிறீர்களா? இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆறு குறிப்புகள் நீங்கள் தினசரி வாழ்வில் இருந்துகொண்டே எப்படி யோகியாக வாழலாம் எனச் சொல்கிறது.

சத்குரு:

யோகக் குறிப்பு ஒன்று

நாள் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டே இல்லாமல் இருப்பது மிக அவசியம். 30 வயதிற்கு குறைவானவராக நீங்கள் இருந்தால், மூன்று வேளை உணவு சரியாக இருக்கும். முப்பது வயதினை கடந்துவிட்டால் இரண்டு வேளை உணவிற்கு மாறிவிடுவது பொருத்தமாக இருக்கும். வயிறு காலியாக இருக்கும்போதுதான் நம் உடலும் மனமும் சிறப்பாக வேலை செய்யும். அதனால், உணவு உண்ணும்போது, இரண்டு மணி நேரத்திற்குள் வயிறு காலியாகிவிடும்படி கவனமாக உண்ணுங்கள். இந்த எளிமையான விழிப்புணர்வால், உடலில் அதீதமான சக்தியும், சுறுசுறுப்பும், அலர்ட்டாக இருக்கும் தன்மையும் உருவாவதை கவனிக்க முடியும். இவை யாவும் வெற்றிகரமான வாழ்க்கைக்கான அடிப்படைகள்.

யோகக் குறிப்பு இரண்டு

ஹடயோகா, கிரியா போன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவரும்போது உங்களுடைய நுரையீரலின் கொள்ளளவு மெல்ல அதிகரிக்கும்.
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 12 முறை சுவாசிக்கிறான். அதனை பதினொன்றாக குறைத்தால் பூமிப்பந்தின் வெளிமட்ட பகுதிகளை உணரும் தன்மை ஏற்படும். அதாவது meteorologically sensitive ஆக முடியும். அதையே ஒன்பதாக குறைத்தால் பிற உயிர்களின் மொழிகளைப் புரிந்துகொள்ள முடியும். ஏழாக குறைத்தால், இந்தப் பூமியின் மொழியையே உங்களால் உணர முடியும். ஐந்தாக குறைத்தால், இந்தப் படைப்பின் மூலத்தையே உணர்ந்துகொள்ள முடியும். இது மூச்சினை பிடித்து வைத்து கொள்ளும் மாய வித்தை அல்ல. ஹடயோகா, கிரியா போன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவரும்போது உங்களுடைய நுரையீரலின் கொள்ளளவு மெல்ல அதிகரிக்கும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு குறிப்பிட்ட ஒத்திசைவும், சுகமான ஒரு நிலையையும் இந்த உடல் அடையும். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அத்தனை விஷயங்களையும் அதனால் கிரகித்துக் கொள்ள முடியும்.

யோகக் குறிப்பு மூன்று

ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை நீங்கள் வைத்துள்ள ஒவ்வொரு பொருளும் – உங்கள் கைப்பை, உங்கள் பணம், உங்கள் உறவுகள், உங்கள் இதயத்தை ஆட்கொண்டுள்ள வேதனை – இவை யாவும் நீங்கள் காலப்போக்கில் சேகரித்த விஷயங்கள் என்பதை நினைவுறுத்திக் கொள்ளுங்கள். இந்த அடிப்படை உண்மையைப் பற்றிய விழிப்புணர்வு வளர்ந்து, அதனுடன் செய்யும் அத்தனை செயல்களிலும் ஆழமான ஈடுபாடு கொள்ளும்போது, தியானம் இயல்பாகவே நிகழும்.

யோகக் குறிப்பு நான்கு

அன்பென்பது இருவருக்குள் நடக்கும் நிகழ்வல்ல. உங்களுக்குள் மலரும் ஒரு அற்புதம் அது. உங்களுக்குள் அழகாய் மலரும் ஒரு விஷயம், பிறரால் பாதிப்படையவோ, பிறருக்கு அடிமையாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு சம்பந்தமே இல்லாத, அர்த்தம் தராத ஏதோ ஒரு விஷயத்துடன், பொருளுடன் தினமும் 15 நிமிடம் செலவு செய்யுங்கள். உங்கள் தேர்வு ஒரு புழுவாக, கல்லாக, மனைவியாக, கணவனாக, பூச்சியாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் காணும் ஒவ்வொன்றையும் அன்பாக பாருங்கள். நீங்கள் காணும் ஒவ்வொன்றையும் அன்பாக காணும் வழக்கம் ஏற்பட்டுவிட்டால், உலகமே அன்பு மயமாகிப்போகும். அன்பு என்பது நீங்கள் செய்யும் ஒரு செயலல்ல, நீங்கள் வாழும் நிலையே அன்பு என்பதை உணர்நதுவிடுவீர்கள்.

யோகக் குறிப்பு ஐந்து

ஒரு பக்தரால், சாதாரண ஒரு மனிதரால் கற்பனை செய்துகூட பார்க்க இயலாத பல விஷயங்களை மிகச் சுலபமாக அறிந்துகொள்ள முடியும். பக்தி நிலையை அடைய சில விஷயங்களைச் செய்ய முடியும், ஆனால் பக்தியை பயிற்சி செய்ய இயலாது. இதற்கு நீங்கள் செய்யக்கூடிய மிகச்சுலபமான ஒரு விஷயம், நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விஷயத்தையும் உங்களைவிட உயர்ந்ததாக பாருங்கள். வானம் நிச்சயமாக உங்களைவிட உயர்ந்தது, கீழே கிடக்கும் சிறு கல், மண், மரம் இவை யாவும் உங்களைவிட நிரந்தரமானது அதனால் அதையும் உயர்வாகப் பாருங்கள். நீங்கள் விழித்திருக்கும்போது மணிக்கொரு முறை, நீங்கள் காணும் ஒவ்வொரு விஷயத்தையும் உயர்வாக பாருங்கள். சற்று காலத்திற்கு பின், இதையே ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை என குறைக்க முடியுமா எனப் பாருங்கள். இப்படி வணங்கியிருக்கும் நிலையே உங்கள் வாழ்க்கை நிலையாக மாறும்போது பக்தராக ஆகிவிடுவீர்கள். வாழ்க்கை முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் தன்னை உங்களுக்கு திறந்துகாட்டும்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert