கொல்லைப்புற இரகசியம் - பகுதி 36

நன்னாரி எனும் தாவரத்தை பற்றியும் அதன் வேரிலிருந்து நாம் பெறக்கூடிய நன்மைகள் பற்றியும் உமையாள் பாட்டி கூறக் கேட்போம், வாருங்கள்!

பால்ய வயதுகளில் நன்னாரி சர்பத் எனது ஃபேவரிட் சம்மர் பானம் என்றாலும், இடையில் கார்பன்-டை-ஆக்ஸைடு அடைக்கப்பட்ட பானங்களின் விளம்பர கவர்ச்சிகளில் மயங்கி தடம் மாறிய பல்லாயிரம் இளைஞர்களில் நானும் ஒருவன். ஆனால், பின் நாட்களில் உமையாள் பாட்டியின் அறிவுறுத்தலின்படி அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, தற்போது மீண்டும் இயற்கை வழிக்குத் திரும்பிவிட்டேன்.

பொதுவாக பித்தத்தை குறைக்கக் கூடியதாகவும் கோடையில் தாகத்தை தணிக்கக் கூடியதாகவும் உள்ள நன்னாரி, சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.

ஒரு வழியாக தற்போது அக்னி நட்சத்திரமெல்லாம் கடந்து வந்துவிட்டாலும், இன்னும் வெயிலின் தாக்கம் முற்றிலும் குறையவில்லை! இத்தருணத்தில் உடலுக்குக் குளிர்ச்சி தருவது மட்டுமல்லாமல் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் நன்னாரி வேர் பற்றி அறிந்துகொள்வது உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாயிருக்கும்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்த கோடையை விட கடந்த ஆண்டின் கோடை இன்னும் உஷ்ணமாக இருந்தது! அப்படியொரு தகிக்கும் நாளின் பகல் பொழுதில் நான் உமையாள் பாட்டியின் வீட்டிற்கு வெளிநாட்டு கம்பெனிகளின் குளிர்பானம் சகிதமாக போய் நின்றதும், என்னை ‘Statue’ என்று சொல்லி அசையாமல் நிற்க வைத்து, கையிலிருந்த குளிர்பான பாட்டிலை அப்படியே லாவகமாகப் பறித்து வாய்க்காலில் கொட்டிய உமையாள் பாட்டி, நன்னாரி மணப்பாகினை எனக்காக கலந்துகொடுத்து குடிக்கச் சொன்னாள்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அதன் ருசி என்னை வெகுவாகக் கவர்ந்ததோடு, அந்த பானம் எனக்குள் சடுதியில் உண்டாக்கிய குளுமை உணர்வு இயற்கையின் உன்னதத்தை உணர்த்தியது. உடனடியாக அந்த பானம் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் பிறக்க, உமையாள் பாட்டியிடம் கேட்டறிந்தேன்.

நன்னாரி மணப்பாகு என்பது... நன்னாரி வேரை இடித்தெடுத்து அதனை வெந்நீரில் ஊறவைத்து, பின் வடிகட்டி அதனுடன் சர்க்கரை சேர்த்து மெல்லிய நெருப்பில் சூடுசெய்து, 1 முதல் 2 தேக்கரண்டி வீதம் நீரில் கலந்தால் அதுவே நன்னாரி மணப்பாகு. இதனை தங்கள் வீட்டில் செய்ய இயலாதவர்கள் ஈஷா ஆரோக்யா மையங்களில் கிடைக்கும் நன்னாரி மணப்பாகினை வாங்கிப் பருகி பயன்பெறலாம்.

இத்தனை தகவலையும் எனக்காக விவரமாக கூறிய பாட்டி அதன் பலன்களையும் தொடர்ந்து கூறாமல் விடவில்லை! உங்களுக்காக நானும் அதனை விலாவாரியாகவே சொல்கிறேன்.

நன்னாரி மணப்பாகு அருந்தினால் உடல் உஷ்ணம், சிறுநீர் பாதை எரிச்சல், சிறுநீர் சுருங்கி வெளியேறுவது போன்ற வெப்ப நோய்கள் தீரும். நன்னாரி வேர், இலை, கொடி, காய், பூ ஆகியவற்றை நெய்யில் வதக்கி சிறுபுளி, மிளகு, உப்பு சேர்த்து வறுத்து துவையல் செய்யலாம். அல்லது அதனை வடகம் போல செய்து முறைப்படி 1 மண்டலம் வரைக்கும் பத்தியத்தோடு உண்டு வர பெண்களுக்கு பித்தத்தால் ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாவதோடு, அக்குள் நாற்றம் மற்றும் உடல் வேர்வை துர்நாற்றம் தீரும்.

பொதுவாக பித்தத்தை குறைக்கக் கூடியதாகவும் கோடையில் தாகத்தை தணிக்கக் கூடியதாகவும் உள்ள நன்னாரி, சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.

நன்னாரி வேரை வெந்நீரில் ஊறவைத்து 30 மிலி வீதம் இரு வேளை குடித்து வர, செரியாமை மற்றும் வாத நோய்கள் நீங்கும். இந்நீரை குழந்தைகளுக்கு பால் மற்றும் பனங்கற்கண்டு கலந்து அருந்தக் கொடுக்கலாம். நன்னாரி வேரை குடிநீரிலிட்டு சூடாக குடித்து வர ஆண்மை பெருகும். நன்னாரி வேரைப் பொடி செய்து பசும்பாலில் கலந்தோ அல்லது சீரகம் சேர்த்த குடிநீரில் சேர்த்தோ குடித்தால் சிறுநீர் சுருங்கி வருவது (அளவு குறைவது & சொட்டுச் சொட்டாக இறங்குவது) குணமாகும். மேலும், இதனை சிறுநீர் எரிச்சலுடன் வெளியேறுவதை குணப்படுத்துவதற்காகவும் அருந்தலாம். நன்னாரி வேர்ச்சாற்றினை கண்களில் விட கண்கள் குளிர்ச்சி பெறும்.

நன்னாரியின் இத்தனை பலன்களையும் எனக்காக சொன்ன உமையாள் பாட்டி ‘மலையில விளைஞ்சா மாகாளி, நாட்டுல விளைஞ்சா நன்னாரி’ என்ற பழமொழியை பேச்சு வாக்கில் கூற, மாகாளி எனும் கிழங்கு நன்னாரியைப் போன்ற குணம் கொண்டதென்பதையும், நம்மூரில் நன்னாரி சர்பத் எப்படி பெட்டிக் கடைகளில் விற்கப்படுகிறதோ அதுபோலவே ஆந்திராவில் மாகாளி கிழங்கு சர்பத் விற்கப்படுகிறது என்பதையும் புதிய தகவலாக பாட்டியின் மூலமே அறிந்துகொண்டேன்.

இறுதியில் பாட்டியிடம் கேட்பதற்கு ஒரு டவுட் இருந்தது... “நம்ம வைகை புயல் வடிவேலு படங்களில் ‘அட நன்னாரிப் பயலே’ என திட்டுகிறாரே அதற்கு என்ன அர்த்தம் பாட்டி?”

“நன்னாரிப் பயல்னா என்னனு எனக்கு தெரியல, நீ சோம்பேறி பயலா இருக்காம, உடனே ஈஷா ஆரோக்கியாவுக்குப் போயி 2 பாட்டில் நன்னாரி மணப்பாகு வாங்கிட்டு வா!” என் தலையில் செல்ல குட்டு வைத்தாள் பாட்டி!

கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்