சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து, ஈஷா பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவது பலரும் அறிந்ததே. அதில் ஒரு பகுதிதான் நூலகங்களுக்கு நூல்கள் வழங்குதல். அதைப் பற்றி சில துளிகள்...

சமீபத்தில் சென்னை வெள்ளப் பெருக்கால் பல்வேறு வகையான பாதிப்புகள் நிகழ்ந்தன. பொதுமக்கள் பயன்படுத்தகூடிய அரசு நூலகங்களில் உள்ள பல லட்சக்கணக்கான மதிப்புள்ள புத்தகங்கள் பயன்படுத்த முடியாதபடி சேதம் அடைந்தது. சமூகத்தின் வளர்ச்சியில் பல்வேறு தளங்களில் தன்னை ஈடுபடுத்தி வரும் ஈஷா யோக மையம், இந்த அரசு நூலகங்களுக்கு நூல்களை வழங்க முன்வந்துள்ளது.

அதனின் ஒரு அம்சமாக பல பதிப்பகங்களிடம் இருந்து 38 இலட்சம் ரூபாய் மதிப்பிற்கு 5000 தலைப்புகளில் 16000 நூல்கள் வாங்கப்பட்டு, அவற்றை சென்னையில் பாதிப்புக்குள்ளான அரசு நூலகங்களுக்கு வழங்கும் விழா, பிப்ரவரி 27 காலை 11 மணியளவில், சென்னை அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் அரங்கம், LLA நூலகக்கட்டிடம், அண்ணாசாலை, சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் திரு.இரவிக்குமார், மணற்கேணி வெளியீட்டகம் தலைமையேற்று நிகழ்த்தி பேசுகையில் நூலகங்களின் முக்கியத்துவத்தையும் இந்த வெள்ளம் பாதித்த அரசு நூலகங்களுக்கு ஈஷாவின் பங்களிப்பையும் வாழ்த்திப் பேசினார், பல்வேறு பதிப்பகங்களில் இருந்து பெறப்பட்ட புத்தகங்களை ஈஷாவின் சார்பில் சுவாமி நிராகாரா அவர்கள் முனைவர் திரு.ச.கண்ணப்பன், தமிழ்நாடு பொதுநூலக இயக்குநர்(பொறுப்பு), அவர்களிடம் அளித்தார், இதில் பேராசிரியர் திரு.பா.கல்யாணி, திரு.சமஸ், திஇந்து தமிழ் மற்றும் எழுத்தாளர் திரு.சந்திரகுமார் (லாக்அப் நாவல்), ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக சென்னை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின. சத்குருவின் அறிவுறுத்தலின்படி, மருத்துவ முகாம்கள் மூலமும் நடமாடும் மருத்துவமனைகள் மூலமும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈஷா சார்பாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும் 10 லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் அளிக்கப்பட்டது. ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் நேரடியாக களமிறங்கி நிவாரணப்பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

ஈஷா வெள்ள நிவாரணப் பணியின் மேலும் ஒரு பகுதியாக சென்னை மற்றும் கடலூர் அரசுப்பள்ளி மாணவர்கள் சுமார் 11000 பேருக்கு தேவையான புத்தகப்பை, நோட்டு மற்றும் எழுதுபொருட்கள் வரும் மார்ச் மாதம் அளிக்கப்பட உள்ளது. 300 பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் மறுவாழ்விற்காக தையல் இயந்திரமும் வழங்கப்பட உள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.