Question: “நல்ல தரமான மதுபானத்தை தினமும் சிறிது பருகுவதில் ஏதும் தவறு உண்டா? தினமும் சிறிது மதுபானத்தை அருந்தினால் உடல்நலத்துக்கு நல்லது என்று மருத்துவர்களே சொல்கிறார்களே?”

சத்குரு:

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவர் தேவை இல்லை என்று பழமொழி உண்டு. தினமும் ஒரு ஆப்பிள் என்பது தினமும் ஒரு கோப்பை மது என்று எப்போது மாறியது? இரவில் சிறிது மது அருந்தினால் காலையில் எழுந்து யோகா செய்ய முடியும் என்ற உற்சாகம் நிச்சயம் இருக்காது. நீங்கள் எந்த வகை மது அருந்தினாலும், வைன் அல்லது விஸ்கி எதுவாக இருந்தாலும், அது உங்களைச் சற்றே அமைதிப்படுத்துகிறது. உங்களுக்குள் சில வேதியல் மாற்றத்தை ஏற்படுத்தி உங்களைச் சிறிது அமைதியாகவும், சிறிது தளர்வாகவும் மாற்றுகிறது. சிறிது மது இந்த மாற்றத்தை தருகிறது என்பதற்காக ஒரு வாளி நிறைய மது அருந்தினால் இன்னும் அதிக அமைதி வர வேண்டும் அல்லவா? ஆனால் அப்படி நடப்பதில்லையே?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சிறிது அளவு மது அருந்தும்போது அமைதி கிடைப்பதால் பலரும் அதை விரும்புகிறார்கள். அமைதியாக இருக்கிறது என்று மேலும் அருந்தினால், நிலைமை வேறு மாதிரிப் போய்விடுகிறது. அவர்கள் திடீரென்று வெறித்தனமாகவும், கட்டுப்பாடு இழந்தவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். தங்கள் வாழ்வில் இதுவரை செய்யாத செயல்களைச் செய்யத் தூண்டுவது அளவைத் தாண்டி அவர்கள் அருந்திய அந்த கடைசிக் கோப்பை மதுதான். அந்தக் கடைசிச் சுற்று மதுவினால்தான் பல குற்றங்களும் நிகழ்ந்துள்ளன. எனவே மது அருந்துவது நன்மையா, தீமையா என்பதல்ல கேள்வி. ஒழுக்கம் என்ற அடிப்படையில் நான் இதைப்பற்றி சொல்லவில்லை. நீங்கள் உங்கள் உயிருக்கு நன்மை செய்கிறீர்களா அல்லது உயிருக்கு எதிராகச் செயல்படுகிறீர்களா என்பதுதான் அடிப்படைக் கேள்வி. உயிருக்கு நன்மை செய்கிறோம் என்று சொன்னால், உயிர் என்றால் என்ன என்று பார்ப்போம்.

உங்கள் வாழ்க்கை அனுபவத்தில் எவை எல்லாம் உங்கள் விழிப்பு உணர்வில் இருக்கிறதோ, அவை மட்டும்தான் இருக்கின்றன. உங்கள் விழிப்பு உணர்வில் இல்லாதவை எல்லாம் உங்களைப் பொறுத்தவரை இல்லை.

நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? ஒரு குறிப்பிட்ட அளவு விழிப்புடன் இருப்பதால்தான் அல்லவா? நீங்கள் நன்றாக உறங்கும்போது நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களா, இறந்து போய்விட்டீர்களா என்று உங்களுக்குத் தெரிவதில்லை. ஏனென்றால், உறக்கத்தில் எதுவுமே உங்கள் அனுபவத்தில் இல்லை. எனவே, உங்கள் அனுபவத்தில் உயிரோடு இருப்பது என்றால் விழிப்புடன் இருப்பது. எவ்வளவு விழிப்புடன் இருக்கிறீர்களோ, அவ்வளவு உயிர்ப்புடன் இருக்கிறீர்கள்.

உங்கள் வாழ்க்கை அனுபவத்தில் எவை எல்லாம் உங்கள் விழிப்பு உணர்வில் இருக்கிறதோ, அவை மட்டும்தான் இருக்கின்றன. உங்கள் விழிப்பு உணர்வில் இல்லாதவை எல்லாம் உங்களைப் பொறுத்தவரை இல்லை. நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள்... உங்களுக்குப் பின்னால் ஒரு பெரிய யானை வந்து நிற்கிறது என்று வைத்துக்கொள்வோம். அது எத்தனை பெரிய மிருகமாக இருந்தாலும் அது நிற்பது தெரியாவிட்டால், அது இல்லை என்றுதான் நினைப்பீர்கள். காரணம், உங்கள் விழிப்பு உணர்வில் அது இல்லை. எனவே, உங்களைச் சுற்றி என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். உங்களுக்கு அது தெரியாதவரை, அது இல்லை என்றுதான் நினைப்பீர்கள். எனவே விழிப்பு உணர்வுதான் உயிரோட்டம். எந்த விதமான போதை வஸ்துவாக இருந்தாலும் அது உங்கள் உயிரை அல்லது உங்கள் விழிப்பு உணர்வைக் குறைத்துவிடும். எனவேதான் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்ட வேண்டாம் என்று சொல்கிறார்கள்.

இப்போது நீங்கள் ரத்தமும் சதையுமான ஒரு படைப்பாக, மனித உயிராக இருக்கிறீர்கள். முழு விழிப்பு உணர்வில் இருக்கும்போது நீங்கள் படைத்தவராகவே ஆகிவிடுகிறீர்கள். இந்த வாய்ப்பு எப்போதுமே உங்களுக்கு உண்டு. ஒரு சிறிய படைப்பாக வாழப்போகிறீர்களா? அல்லது படைத்தவராக வாழப் போகிறீர்களா? படைத்தவராக வாழ வேண்டும் என்றால் உங்கள் விழிப்பு உணர்வு விரிவடைய வேண்டும். ஆனால், உங்கள் மதுப்பழக்கம், மன அழுத்தம், வருத்தங்கள், குழப்பங்கள் இவை எல்லாம்தான் உங்கள் விழிப்பு உணர்வைக் குறைக்கின்றன. இன்பம் துய்ப்பதற்குத்தான் நாங்கள் இங்கே இருக்கிறோம் என்று நீங்கள் சொன்னால், நான் அதற்கு எதிரானவன் அல்ல. இருப்பதிலேயே பெரிய இன்பத்தை பெறும் வாய்ப்பை நான் உங்களுக்குத் தந்தால் அதை வேண்டாம் என்றா சொல்வீர்கள்?

‘எப்போதும் முழு போதையில் ஆனால் முழு விழிப்பு உணர்வுடன்’ இந்த ஒரு நிலையை நான் உங்களுக்கு சொல்லித்தந்தால், அதைக் கற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பமா? விருப்பம் என்றால் நீங்கள் உயிருக்கு உடன்பாடானவர்கள்.

எந்தவிதமான யோகா கற்றுக்கொண்டாலும் கற்றுக்கொண்டதைத் தினமும் பயிற்சி செய்தால்தான் அது வேலை செய்யும். அதுதான் யோகாவில் உள்ள ஒரு பிரச்னை. எதுவும் அப்படித்தானே? ஒரு மருத்துவரிடம் சென்று மருந்து வாங்கி வந்தீர்கள். மருந்து சாப்பிட்டால்தான் நோய் தீரும். மதுகூட அப்படித்தானே? குடித்தால்தானே போதை ஏறும்.

எனவே, நான் மதுவுக்கு எதிரானவன் அல்ல. இன்பத்துக்கு எதிரானவன் அல்ல. தமக்குள் அடையக்கூடிய பெரிய இன்ப நிலை இருந்தும் சிறிய இன்பங்களிலேயே திருப்தி அடைந்துவிடும் மனிதர்களைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. உங்களை எப்போதும் முழு போதையில் நிலைக்கச் செய்ய முடியும். அதுவும் இலவசமாக... பின் விளைவுகள் இன்றி!