நம்மவரு நம்மாழ்வார்... பகுதி 24

முகலாயர்கள், போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், வெள்ளையர்கள் எனப் பலர் நம் வளத்தையும் உழைப்பையும் சுரண்டினார்கள். இப்போது சுதந்திரம் பெற்ற பின்னும் அந்த அடிமைத்தனம் நம்மை விட்டுப் போகவில்லை. நம்மாழ்வார் இங்கே புதிதாகத் தலைதூக்கும் அந்நியனால் நேரவிருக்கும் ஆபத்தைச் நமக்கு சுட்டிக் காட்டுகிறார், கண் விழிப்போம்!

நம்மாழ்வார்:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்திய நாட்டின் உணவு உற்பத்தியை தனது பிடியில் கொண்டு வந்து மக்களை வறுமைக்குள் தள்ளி, கோடி கோடியாக லாபம் கொழிப்பதற்கு அமெரிக்க கம்பெனிகள் முயற்சி எடுத்துள்ளன. இது குறித்து பல கட்டுரைகளில் நான் முன்பே எழுதியிருக்கிறேன்.

இந்தியாவில் நவதானியங்களை சாராயம் அடிப்பதற்குப் பயன்படுத்த கம்பெனிகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்திய வேளாண் அறிவியல் ஒப்பந்தம் முன்பே கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி புஷ் இந்தியா வந்திருந்தபோது கையெழுத்தான அந்த ஒப்பந்தத்தின் ஒரு கிளைதான் இந்த ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்க கம்பெனிகளும், இந்தியக் கம்பெனிகளும் கைகோர்த்துக் கொண்டு வணிகச் சுரண்டலில் ஈடுபடும் வாய்ப்புள்ளது. முதல் ஒப்பந்தத்தின் கூறுகளில் உணவு பதப்படுத்துதல் (Food processing) ஒரு தனிப்பிரிவாக வரையப்பட்டு அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பணக்கார நாடுகள் உணவு தானியங்களை பயோ டீசலாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஏழை நாடுகளில் கரும்பு உற்பத்தி செய்யச் சொல்லி அதையும் பயோ டீசலாக மாற்றுகிறார்கள். உணவு தானியம் உற்பத்தி செய்து கொண்டிருந்த இந்திய உழவர்களை மக்காச்சோளம், சோயா, மொச்சையும் பயிர் செய்யச் சொல்லி கால்நடைத் தீவனமாக மாற்றுகிறார்கள். உலகம் முழுவதும் உற்பத்தியாகும் உணவு தானியத்தில் 48 விழுக்காடு பன்றித் தீனியாகவும், கோழித் தீனியாகவும் மாற்றப்படுகிறது.

இந்தியாவில் நவதானியங்களை சாராயம் அடிப்பதற்குப் பயன்படுத்த கம்பெனிகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. உழவுக்கும், உணவுக்கும் அடிப்படையான மாடுகள் இறைச்சியாக மாற்றப்படுகின்றன. இத்தகைய சூழலில் இரு தேசத்து கம்பெனிகளும் கைகோர்த்துக் கொண்டால் இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பு என்னவாகும்?

தொலைபேசியில் விஞ்ஞானி எஸ்.என்.நாகராஜன் என்னுடன் பேசினார். இந்திய தேசம் மிகப் பெரிய நெருக்கடியைச் சந்திக்க வேண்டியுள்ளது. இந்திய விவசாயம் அமெரிக்கக் கம்பெனிகளுக்குக் கைமாற்றப்படுகிறது. அவர்களுடைய பண்ணைகளில் இந்திய உழவர்கள் கூலி வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். கிராமங்களில் உள்ள மக்களின் எண்ணிக்கை மூன்றில் ஒன்றாக குறைக்கப்பட உள்ளது.

அமெரிக்கக் கம்பெனிகளுடைய கார்கள் வேகவேகமாக செல்வதற்காகத்தான் சாலையோர மரங்களை நீக்கி சாலைகள் அகலப்படுத்தப்படுகின்றன. நமக்கு வேலை நிறைய உள்ளது. அன்னிய கம்பெனிகளின் புதிய ஆக்கிரமிப்பை எதிர்த்து இந்தியா முழுவதும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. விஞ்ஞானி நாகராஜனின் பேச்சில் அர்த்தம் இருப்பதாகவே உணர்கிறேன்.

தொடர்ந்து விதைப்போம்...

nature, nammalvar, agriculture

இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவு என தன் வாழ்நாள் முழுவதையும் இயற்கை நலனிற்காவும் சமூக நலனிற்காகவும் அர்ப்பணித்தவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள். அவருக்கு ஒரு அர்ப்பணிப்பாக இங்கே அவரது எழுத்துக்களைப் பதிகிறோம்!