சத்குரு:

இல்லறத்தில் இருப்பவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்தி வாழ்வதென்றால் அதற்கு ஒரு அடிப்படைத் தேவை இருக்கிறது. ஆண்கள், தங்கள் தன்மைக்கு எவ்விதத்திலும் பெண்கள் குறைந்தவர்கள் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உடல் வலிமையில் வேண்டுமானால் ஆண்கள் விஞ்சியிருக்கலாம். உள்நிலையில் எந்த மாறுதலும் இல்லை. பெண்களை மதிக்கத் தெரியாத எந்த ஆணும், தன்னைத்தானே உணர்ந்துகொள்ள வாய்ப்பில்லை.

வேத காலத்திலேயே ஆன்மீகத்தின் உயரிய எல்லைகளைக் கண்ட பெண்கள் நிறையப் பேர் வாழ்ந்திருக்கிறார்கள். வழிபாட்டின் தொடக்கமே, தாய் வழிபாடாகத்தான் இருந்திருக்கிறது. இன்றும் கூட ஆண் கடவுளர்களை விடவும், பெண் தெய்வ வழிபாடுதான் மிகுந்த செல்வாக்கோடு திகழ்கிறது.

இந்திய ஆன்மீக உலகில் தன்னை உணரும் வாய்ப்பு ஆண்கள், பெண்கள் இருவருக்கும் சமம் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. உள்நிலையில் ஆண், பெண் என்கிற பேதங்கள் ஏதுமில்லை. உயிரின் தன்மை ஒன்றுதான். ஆண் என்ற சொல்லும், பெண் என்ற சொல்லும் உடலைத்தான் குறிக்குமே தவிர உயிரின் இயல்பைக் குறிக்காது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வேத காலத்திலேயே ஆன்மீகத்தின் உயரிய எல்லைகளைக் கண்ட பெண்கள் நிறையப் பேர் வாழ்ந்திருக்கிறார்கள். வழிபாட்டின் தொடக்கமே, தாய் வழிபாடாகத்தான் இருந்திருக்கிறது. இன்றும் கூட ஆண் கடவுளர்களை விடவும், பெண் தெய்வ வழிபாடுதான் மிகுந்த செல்வாக்கோடு திகழ்கிறது.

ஜனக மகாராஜாவின் அரசவையில் ஞானிகளின் மாநாடு ஒன்று நடைபெற்றது. விவாதங்கள் தொடங்கின. போகப்போக மிக நுட்பமான விஷயங்கள் குறித்து விவாதங்கள் முன்னேறின. பலரும் விவாதத்திற்கு ஈடுகொடுக்க இயலாமல் திணறி விலகினர். மீதம் இருந்தவர்கள் இரண்டே பேர். ஒருவர் யாக்ஞவல்கியர், இன்னொருவர் மைத்ரேயி என்கிற பெண்.

மற்ற அறிஞர்களாலும், முனிவர்களாலும் புரிந்துகொள்ள முடியாத அளவு ஆழமாகவும், மிக நுட்பமாகவும் இந்த இருவரும் தொடர்ந்து விவாதங்கள் நிகழ்த்தினர். ஒரு கட்டத்தில் யாக்ஞவல்கியர் தோல்வியைத் தழுவினார். மைத்ரேயியின் கால்களில் விழுந்து தன்னை சீடராக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினார். அவரது ஞானத்தின் மேன்மையினை உணர்ந்த மைத்ரேயி யாக்ஞவல்கியரை தனது கணவராக ஏற்றுக்கொண்டார். தான் விரும்புகிறவரை கணவராகத் தேர்வு செய்கிற உரிமை பெண்களுக்கு இருந்தது என்பது இதன் மூலம் விளங்கும்.

ஒருநாள் யாக்ஞவல்கியர் மைத்ரேயியிடம் வந்து, தான் வனங்களில் சென்று தவம் செய்யப் போவதாகவும், தன்னிடமிருக்கும் செல்வங்களையெல்லாம் மைத்ரேயியிடம் தந்துவிட்டு செல்ல விரும்புவதாகவும் கூறினார். அதற்கு மைத்ரேயி, "ஞானப்புதையலை நோக்கி அவர் செல்லும்போது தான் மட்டும் அற்பமான பொருட்களை வைத்துக் கொண்டு வாழ விரும்பவில்லை" என்று கூறிவிட்டு துறவு மேற்கொள்வதாகக் கூறினார். உறவுநிலை, துறவு நிலை இரண்டிலுமே தேர்வு செய்கிற உரிமை பெண்களுக்கு இருந்தது என்பது இதன் மூலம் புலப்படுகிறது. அப்படியானால், பெண்ணடிமை எப்போது தொடங்கியது என்பதை சிந்திக்க வேண்டும். ஒரு சமூகம் நல்ல நிலையில் பாதுகாப்பான சூழலில் இருக்கும் காலகட்டத்தில் ஒரு பெண் சுதந்திரத்தோடு வாழ்வாள். அன்னிய ஆதிக்கங்களின்போது பெண் போகப் பொருளாகக் கருதப்பட்டு அவள் ஆணின் பாதுகாப்பில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மற்றவர்களிடமிருந்து பெண்ணை பாதுகாக்கும் பொறுப்பை ஆண் மேற்கொள்ளும் போதுதான் விதிகள், சாத்திரங்கள், தர்ம முறைகள் ஆகியவை மாற்றி எழுதப்பட்டு, பெண் அடிமையாக்கப்படுகிறாள். மங்கோலியா, மத்திய சீனம் போன்ற இடங்களிலிருந்து படையெடுப்புகள் நிகழ்ந்தபோது இத்தகைய பெண்ணடிமைத் தனங்கள் தோன்றின.

இப்போது ஆன்மீகத் தேடல் உள்ள ஆண்களையே எடுத்துக் கொள்ளுங்கள். 10, 15 வருடங்கள் குடும்பம் நடத்திவிட்டு திடீரென்று சந்நியாசம் வாங்கிக் கொண்டு போகிற உரிமையும் ஆணுக்கு இருக்கிறது. ஆனால் அப்படி அவன் போகிறபோது அவன் மனைவியையும், குழந்தையையும் யார் பார்த்துக் கொள்வார்கள்? இதுபோன்ற கேள்விகளுக்கு இன்றுவரை பதிலில்லை. ஆனால் அந்த நாட்களில், தன் வளர்ச்சிக்கு குடும்பம் ஒரு தடை என்று பெண்ணுக்குத் தோன்றினால் அதனை உதறிவிட்டுப் போகிற உரிமை தரப்பட்டிருக்கிறது.

பெண்மைக்குரிய சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் பறிக்கத் தொடங்கிய பிறகு குடும்பங்களிலிருந்த மகிழ்ச்சி பறிபோய் விட்டது. எப்போது ஒரு குடும்பத்தில் சமஅளவு சுதந்திரத்தோடு, இரண்டு உயிர்கள் இணைந்து வாழுகின்றனவோ, அங்கேதான் அன்பும், அமைதியும், ஆனந்தமும் இருக்கும். ஒருவர் சுதந்திரமாகவும், இன்னொருவர் அடிமையாகவும் இருக்கிறபோது குடும்பத்தில் பதட்டமும், பரபரப்பும், அவநம்பிக்கையும் நிலவுகிறது. பெண்மையின் ஆற்றலை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிடாத ஆண்கள்தான் இல்லற வாழ்க்கையிலும், தன்னைத்தானே உணர்ந்து கொள்கிற தேடலிலும் வெற்றி பெற இயலும்.