ஆன்மீகப் பாதையில் நாட்டம் கொண்டு அப்பாதையை மேற்கொள்ளும் சிலர் அதில் விரக்தியடைகின்றனர். இது ஏன் நடக்கிறது என்று விளக்குவதோடு, ஆன்மீகப் பாதை மிக நுட்பமானது என்றும் அப்பாதையை தமக்கு தாமே கடினமாக்கிக் கொள்ளாமல் ஒருவர் அதில் முன்னேறுவது எப்படி என்றும் இங்கு சத்குரு விளக்குகிறார்.

சத்குரு:

ஆன்மீகப் பாதை ஒன்றும் கடினமானதல்ல. என்னவொன்று... அது நுட்பமானது என்பதால் மக்களுக்கு அது பிடிபடுவதில்லை. இதில் நெருடலான ஒரு விஷயம், ‘கரைந்து போகவேண்டும்’ என்று நீங்கள் செய்யும் முயற்சியும் கூட கர்மாதான். ‘நான் வளர்ச்சியடைய வேண்டும், இந்த இலக்கை எட்டவேண்டும்’ என்ற விருப்பத்தை உருவாக்கிக் கொள்ளாமல், நீங்கள் வளரமுடியாது. ஆனால் அதே சமயம், இந்த ஆசை நிறைவேறும் வரை, இது தொடர்ந்திருப்பதும்கூட கர்மா தான். அது மேன்மேலும் கர்மாவை உருவாக்கிக்கொண்டே போகும்.

வாழ்வை துச்சமாக நினைக்கும் அதே சமயம், அதை மிகத் தீவிரமாக, முழுமையான ஈடுபாட்டுடன் உங்களால் வாழமுடிந்தால், இப்பாதை மிக சுலபமாகிவிடும்.

வாழ்வை துச்சமாக நினைக்கும் அதே சமயம், அதை மிகத் தீவிரமாக, முழுமையான ஈடுபாட்டுடன் உங்களால் வாழமுடிந்தால், இப்பாதை மிக சுலபமாகிவிடும். உங்கள் முழு வாழ்வும் ஏதோ ஒரு செயலைச் சார்ந்துதான் இருக்கிறது என்பதுபோல் அந்த செயலில் முழுமையாக ஈடுபடவேண்டும், ஆனால் உண்மையில் அது எவ்விதத்திலும் உங்களுக்கு ஒரு பொருட்டாக இருக்கக்கூடாது! நீங்கள் எதைச் செய்வதானாலும், அது சூழ்நிலைக்கு அனுசாராமாய் மட்டுமே இருக்கவேண்டும்... சிறிதும் அதிகமல்ல, சிறிதும் குறைவல்ல. நீங்கள் செய்யும் செயல் எப்போது உங்களுக்கு முக்கியமாகிறதோ, அக்கணமே அதில் ஒரு சுயநல அக்கறை உங்களுக்கு ஏற்படும். அதை மனநிறைவுக்காக செய்கிறீர்களோ இல்லை சந்தோஷம், பணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் செய்கிறீர்களோ, இல்லை சொர்கத்துக்கு செல்லும் வழியாகக் கருதி அதைச் செய்கிறீர்களோ... ஏதோ ஒரு காரணம் இல்லை எதிர்பார்ப்பின் நிமித்தம் அச்செயலை செய்ய முனையும் அந்நொடியில், சுயநல அக்கறை தலைதூக்கிடும். பின் அங்கு ஆன்மீகத்திற்கு இடமிருக்காது.

'பலனை எதிர்ப்பார்த்து காரியம் செய்யாதே’ என்பதை இன்று பலரும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு அர்த்தம், 'செய்யும் காரியம் வெற்றியடைகிறதோ தோல்வி அடைகிறதோ அதைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்படு' என்பதல்ல. அதெப்படி செய்யும் செயலின் முடிவு ஒரு பொருட்டில்லாமல் இருக்கமுடியும்? ஏதோ ஒரு செயலைச் செய்கிறோம் என்றால் அது வேலை செய்யவேண்டும், சரியாய் நடக்கவேண்டும் என்று தானே அதைச் செய்வோம்? அச்செயலைப் பற்றி நன்றாக சிந்தித்து, தொடர்ந்து அதில் அக்கறையுடன் ஈடுபட்டு, எப்படியேனும் அச்செயலை சரியாகச் செய்துமுடிக்கவே முயல்வோம். என்ன ஒன்று... தனிப்பட்ட முறையில் அச்செயலின் விளைவு உங்களை பாதிக்காது. அதில் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு லாபமோ, நஷ்டமோ எதுவுமில்லை. சூழ்நிலைக்குத் தேவைப்படுவதை செய்வீர்கள். ஒருவேளை சூழ்நிலைக்கு எதுவும் தேவையில்லையா... எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு அமைதியாக ஒதுங்கி அமர்ந்துவிடுவீர்கள். எப்போது இதுபோன்ற சுதந்திரம் உங்களுக்குள் உருவாகிறதோ, அதன்பின் 'கர்மா' உங்கள் விழுப்புணர்வோடு நிகழும் ஒன்றாகிவிடும்.

உங்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லாத ஒன்றுடன் மிக ஆழமான ஈடுபாட்டோடு நீங்கள் செயல்பட வேண்டுமெனில், அதற்கு 'அதோடு பிணைப்பு உண்டாகிடுமோ' என்ற பயம் உங்களுக்கு இல்லாமல் இருக்கவேண்டும். இது நடக்கவேண்டும் என்றால், ஒன்று நீங்கள் பித்துப் பிடித்தவராக இருக்கவேண்டும், இல்லை பேரானந்தத்தில் திளைப்பவராக இருக்கவேண்டும், இல்லை... யாரோ ஒருவரின் மீது காதல் வயப்பட்டு எது நடந்தாலும் கவலையில்லை என்ற நிலையில் இருக்கவேண்டும். இந்த மூன்றில் ஏதோவொரு நிலையில் இல்லாமல்... ஒரு செயலில் மிகத் தீவிரமாக ஈடுபட்டும் அது ஒரு பொருட்டாக உங்களுக்கு இல்லாமல் இருப்பது மிகக் கடினம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.