Question: சத்குரு ஏன் தியானலிங்கத்தின் கூரை கோள வடிவில் உள்ளது? இதற்கு அறிவியல் காரணங்கள் உண்டா?

சத்குரு:
என் வாழ்வில் எனக்கு மிகுந்த வருத்தமளிக்கும் ஒரு விஷயம், தியானலிங்கத்தின் வடிவமைப்பில் நான் என்னை நானே சமாதானம் செய்து கொண்டதுதான்.

இந்த வளாகத்தில் நுழையும் ஒவ்வொரு முறையும் அதை எப்படியெல்லாம் செய்திருக்கலாம் என்று நினைத்துப் பார்க்கிறேன்.

ஆனால் நிதி நிலைமை மற்றும் நேரமின்மை போன்ற கட்டுப்பாடுகளால் நம்மால் இந்த அளவிற்குதான் கட்ட முடிந்தது. முதலில் இதை வடிவமைக்கும் போது, நிலப்பரப்புக்கு 60 அடி ஆழத்தில், நீர்பரப்புக்கு நடுவில் தியானலிங்கம் வடிவமைக்கப்பட வேண்டும் என்று நினைத்தேன். தியானலிங்கத்தை அமைப்பதற்கு மிகச் சிறந்த கட்டமைப்பாக அது இருந்திருக்கும்.

இதை வடிவமைக்கும் போது, நிலப்பரப்புக்கு 60 அடி ஆழத்தில், நீர்பரப்புக்கு நடுவில் தியானலிங்கம் வடிவமைக்கப்பட வேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால் தியானலிங்கத்தை கட்டிக் கொண்டிருந்த காலகட்டத்தில், என் வாழ்வில் ஏற்பட்ட சில சூழ்நிலைகளின் காரணமாக அந்தப் பணியை விரைந்து முடிக்க முயன்றேன். நேரமும் நிதிநிலையும், நம்மை இரண்டாவது திட்டத்தை தேர்ந்தெடுக்கச் செய்தது.

இரண்டாவது திட்டமும் பெருஞ்செலவு பிடிக்கிற வேலையாய் போக, மூன்றாவது திட்டத்திற்கு மாறினோம். மூன்றாவது திட்டத்தின்படி கட்டப்பட்டுள்ள தியானலிங்க வளாகத்தை முடிந்தவரையும் அழகுபடுத்த முயன்று கொண்டிருக்கிறோம். இந்த கட்டிட அமைப்புக்குள் அமர்ந்திருப்பவர் அனைவரிலும் உயர்ந்தவர். அவருக்கு பாந்தமான, எழில் கொண்ட வேலைப்பாடுகளை நாம் இன்னும் செய்யவில்லை. நம்மால் முடிந்தவரையேனும் சிறப்பு செய்ய நினைக்கிறோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கட்டிடக் கலையின்படி, தியானலிங்கக் கூரையின் கோள வடிவம் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. தாஜ் மஹால், கோல் கும்பாஸ் போன்றவற்றில் உள்ள கோள வடிவம் சரியான அரைவட்ட கோளமாக இருக்கும். ஆனால் இங்கு நாம் நீள்கோள வடிவத்தில் கட்ட முடிவு செய்தோம். நீள்கோளத்தின் ஒருபாகம் போன்ற கூரையை, ஸ்டீல், கான்கிரிட், சிமென்டு போன்றவை இன்றி வடிவமைப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது.

இதனால்தான் தியானலிங்கத்தின் கூரை தனித்தன்மை வாய்ந்தது என்று சொல்கிறேன். சாதாரணமாகப் பார்த்தால் இது ஒரு அரைகோளம் போல் தெரிந்தாலும், உண்மையில் இது நீள்கோளத்தின் ஒரு பகுதி. உள்ளே இருக்கும் லிங்கமும் நீள்கோள வடிவில் இருப்பதால் கூரையையும் அதே வடிவத்தில் அமைத்தோம். நீள்கோள லிங்கத்தின் அதிர்வலைகளுக்கு நீள்கோள வடிவ கட்டிடம்தான் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

சிமென்டு, ஸ்டீல், கான்கிரீட் போன்ற கட்டிடப் பணிகளுக்கு பயன்படுத்தும் பொருட்களை ஏன் பயன்படுத்தவில்லை என்று நீங்கள் கேட்கலாம். எவ்வளவு உயர்தர கான்கிரிட்டாக இருந்தாலும் அதன் அதிகபட்ச ஆயுட்காலம் 125 ஆண்டுகள் மட்டுமே. நாம் செங்கல் மட்டும் பயன்படுத்தியதற்கான முக்கியக் காரணமும் இதுவே.

இங்கு வாழப் போகும் அடுத்த தலைமுறைக்கு நாம் கஷ்டம் கொடுக்க விரும்பவில்லை. ஒருவேளை கான்கிரிட் தூண் யார் மீதாவது விழுந்துவிட்டால், அவர் நிலை என்ன? எனவே 3000 முதல் 5000 ஆண்டுகள் வரை நீடிக்கும் வகையிலான ஒரு கட்டிடத்தை உருவாக்கும் எண்ணத்திலேயே இதனை அமைத்தோம்.

தியானம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட இடங்கள், மக்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவிக்கும் ஒரு சொத்து. மெசபடோமியா மற்றும் எகிப்திய அகழ்வுகளைப் பார்த்தால், நீங்கள் முதலில் பார்ப்பது அங்கிருக்கும் மண் பாண்டங்கள்தான். களி மண்ணை சுட்டுவிட்டால், அவை ஆண்டாண்டு காலத்திற்கு நீடித்து இருக்கும். அது போலத்தான் செங்கல்லும், அவற்றின் ஆயுட்காலமும் மிக அதிகம்.

கோளவடிவத்திற்கு மற்றுமொரு குணமும் உண்டு. நவீன கட்டிடங்களில் இருப்பது போல், கூரைக்கும் புவியீர்ப்பு விசைக்கும் இடையே நிகழும் தொடர் போராட்டம், கோளவடிவ கட்டிடங்களில் இல்லை. புவியீர்ப்பு விசை உங்கள் கட்டிடத்தை கீழிறக்கப் பார்க்கிறது. ஆனால் உங்கள் கூரை மேலேயே நீடித்திருக்க விரும்புகிறது.

இறுதியில் ஒருநாள் புவியீர்ப்பு விசைதான் வெல்லும். ஆனால் இந்த கோளவடிவம் என்பது செங்கல், மண், சிறிதளவு சுண்ணாம்பு மற்றும் மூலிகை சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள தொழில்நுட்பப்படி, அத்தனை செங்கற்களும் ஒரே சமயம் கீழே விழப்பார்க்கின்றன. அதனாலேயே அவற்றால் கீழே வரமுடியாது.

10 பேர் சேர்ந்து, ஒரே சமயத்தில் ஒரு கதவு வழியாக போகப் பார்ப்பது போன்றதுதான் இது. பத்து பேரால் ஒரே சமயத்தில் கதவு வழியாக வெளியேற முடியுமா என்ன? ஒருவர் பண்பு கருதி பின்னடைந்தால் மட்டுமே கதவில் சிக்காமல் போகமுடியும். ஆனால் செங்கற்களுக்குத்தான் அத்தகைய பண்பு எல்லாம் இல்லையே!

ஒவ்வொரு செங்கல்லும் நீரில் 24 மணிநேரம் ஊறவைத்த பின்னரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படி ஊறவைப்பதால் அவை சுட்ட செங்கற்களா என பரிசோதிக்க முடிகிறது. சுடாத செங்கல் என்றால் நீரில் போட்டதும் கரைந்துபோகும். 24 மணிநேரம் ஊறியும் கரையாத செங்கல், நன்றாக சுட்ட கல் என்பதை அறிந்துக் கொள்ளலாம். அவை காலத்திற்கும் நிலைத்திருக்கும்.
மேலும் செங்கல் ஒவ்வொன்றையும் மில்லிமீட்டர் தவறாமல் அளவெடுத்தோம். அவற்றின் அளவு முன் பின் இருந்தால் விழுந்துவிடும். ஒவ்வொரு வரிசையாக வளையங்கள் போல் இந்த கோளத்தை உருவாக்கினோம்.

இதில் முக்கியமான ஒரு விஷயம், ஒரு வரிசையை துவங்கிவிட்டால் அன்றே அந்த வரிசையை கட்டி முடிக்க வேண்டும். அப்படி முடிக்கவில்லை என்றால் இரவே அந்த வரிசை விழுந்துவிடும். ஒரே நாளில் ஒரு வரிசையைக் கட்டி முடித்துவிட்டால் அது விழாது.

இது முழுக்க முழுக்க மக்களுடைய அன்பின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்றே விரும்பினேன்.

ஈஷா யோகா மையம், நிலநடுக்கத்துக்கு உட்பட்ட பகுதியில் இருக்கிறது. அதனால் இந்த கோளத்தை மணல் மீது அமைத்துள்ளோம். இருபது அடி பள்ளம் தோண்டி, அதில் மணல் நிரப்பியுள்ளோம். இது ஒரு குஷன் போல் செயல்படும். அது நில அதிர்வுகள் போன்ற இயற்கை சீற்றங்களைத் தாங்கிக் கொள்ளும்.

மிகுந்த துணிவுடன், இந்த கோள வடிவில் 9 அடி துளையை ஏற்படுத்தி உள்ளோம். வெப்பக் காற்றை வெளியேற்றுவதற்காக இது அமைக்கப்பட்டது. பொதுவாக ஒரு கோளத்தில் ஒரு துளையை அனுமதித்தால், அந்த கோளம் நிலைப்பது கடினம் என்று பலரும் கருதினார்கள்.

அதை முழுதாக மூடாவிட்டால் அது விழுந்துவிடும் என்று சொன்னார்கள். நான் சொன்னேன், "கவலைப்படாதீர்கள், இது பூமியின் விசையுடன் இயைந்து உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்த அமைப்பே தளர்வாக, ஒரு தியான நிலையில் இருப்பது போல் இருக்கிறது, இதில் இறுக்கம் சிறிதும் இல்லை," என்றேன். மேலும் இந்த கட்டிமே தியான நிலையில் இருக்கும்போது தியானம் உங்களுக்கு சுலபத்தில் வாய்க்காதா என்ன?

இந்தக் கோளத்தில் உள்ள 1,80,000 செங்கற்களும் தியான அன்பர்களே அளவெடுத்து கட்டியது. "இதை இப்படித் தான் செய்ய வேண்டும். அந்த பொறுப்பை உங்கள் கைகளில் தருகிறேன். யாராவது ஒருவர் கவனக் குறைவாக இருந்து 2 மிமீ அளவு குறைந்தால்கூட, கோளம் முழுவதும் சிதைந்துவிடும்," என்று நான் தியான அன்பர்களிடம் விளக்கினேன்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் அமர்ந்து அளவெடுத்தார்கள். இரவும் பகலும் செய்தார்கள். இது முழுக்க முழுக்க மக்களுடைய அன்பின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்றே விரும்பினேன். இன்று மிகுந்த கம்பீரத்துடன் நம் முன்னே எழுந்து நின்று அருள் பாலிக்கிறது தியானலிங்கம்!

மேலும், வெளிச்சமோ வெப்பமோ அது பரவும் போது வட்டவடிவில் தான் பரவும். ஒருவேளை தியானலிங்கத்தை சதுர வடிவ கட்டிடமாகக் நாம் அமைத்திருந்து, உங்கள் உணரும் திறனும் அதிகமாக இருந்தால், அந்த கட்டிடத்தின் வடிவ அமைப்பால், அந்த விஸ்தீரணத்தில் பிசகல் இருப்பதை நீங்கள் உணர முடியும். அதனால் தியானலிங்கம் வட்டவடிவ கட்டிடமாக இருக்க வேண்டியதாயிற்று.