சத்குரு:

தன் வாழ்வில் ஆனந்தத்தையே உணராத மனிதர் என்று யாராவது இருக்கிறார்களா? அப்படி ஒருவர் இருக்க சாத்தியமே இல்லை. உலகத்திலேயே மிகவும் துயரமான மனிதன்கூட, தன் வாழ்வில் ஆனந்தமான கணங்களை அனுபவித்திருக்கிறான். அவனால் ஆனந்தமாக இருக்க முடியவில்லை என்று இல்லை. எப்படி அவனால் துக்கமாக இருக்க முடிகிறதோ, அதேபோல் ஆனந்தமாகவும் இருக்க முடியும்.

ஒரு கணத்தை நீங்கள் விரும்பிய விதத்தில் ஆனந்தமாக உங்களால் உருவாக்க முடியும் என்றால், அடுத்தடுத்த கணங்களையும் நீங்கள் விரும்பிய விதத்தில் ஆனந்தமாக உருவாக்க உங்களால் நிச்சயம் முடியும். முழு வாழ்க்கையே இப்படி ஒவ்வொரு கணங்களாகத்தான் உங்களிடம் வருகிறது.

அவனுடைய பிரச்னை என்னவென்றால், ஆனந்தத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. அவன் துயரமாக இருப்பதற்கு காரணமே, ஆனந்தத்தைத் தொலைத்துவிட்டதுதான். மக்களிடம் துயரம் அதிகமாக இருப்பதற்குக் காரணமே, ‘நேற்று அற்புதமாக இருந்தது. இன்று என்ன நடந்தது என்றே புரியவில்லை’ என நினைப்பதுதான். இது அவர்களின் துயரத்தை பன்மடங்கு அதிகரிக்கிறது. ஆக, ஆனந்தத்தை உணராதவர்கள் என்று யாருமே கிடையாது. ஒரு கணமாவது ஆனந்தத்தை எல்லோருமே உணர்ந்திருக்கிறோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்களால் ஒரு கணத்திற்கு ஆனந்தத்தை உருவாக்க முடிகிறது என்றால் நான் ‘முடிகிறது’ என்று கூறுவது ஏனென்றால், நீங்கள் உங்களை ஆனந்தமாகவும் வைத்துக்கொள்ள முடியும், துக்கமாகவும் வைத்துக்கொள்ள முடியும். ஒரு கணத்திற்கு, நீங்கள் உங்களை ஆனந்தமாக வைத்துக்கொள்ள முடிகிறது என்றால், பிறகு ஒவ்வொரு கணமுமே உங்களை நீங்கள் ஆனந்தமாக வைத்துக்கொள்ள முடியும்.

ஆனந்தத்தை உங்களுக்குள்ளேதான் உணர முடியும், வெளியே அல்ல. இதைப் புரிந்து கொண்டால்தான் ஆனந்தமாக இருக்க முடியும்.

சிலபேர் என்னிடம், ‘உள்ளார்ந்த ஆனந்தத்தை எப்படிப் பெறுவது?’ என்று கேட்கின்றனர். நான் உங்களை கேட்கிறேன், நீங்கள் ஆனந்தத்தை எப்போது வெளியில் அனுபவித்தீர்கள்? நீங்கள் மது அருந்தும்போது ஆனந்தமாக இருந்திருக்கலாம், ஆனால் அந்த ஆனந்தத்தையும் உங்கள் உள்ளேதானே உணர்ந்தீர்கள். நீங்கள் எதைச் செய்தாலும் சரி... ஆனந்தம் எப்போதுமே உங்களுக்குள்ளேதான் நிகழ்கிறது; உங்களுக்கு வெளியே அல்ல.

இப்போது உங்கள் துயரத்திற்குக் காரணமே, நீங்கள் ஆனந்தத்திற்கு திரும்பி வராமல், அதைத்தேடி வெளியே அலைந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனந்தம் உங்களுக்குள்தான் இருக்கிறது என்பதை உணராமல், அது ஏதோ வெளியே தொங்கிக்கொண்டு இருப்பது போல அலைந்து தேடிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் சக்தியை விரயம் செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

நீங்கள் இப்போது ஆனந்தமற்று இருப்பதே, உங்களை விட்டு நீங்கள் விலகிச் செல்ல முயற்சிப்பதால்தான். உங்கள் இயல்பே ஆனந்தமாக இருக்கும்போது, அதை உணராமல் அதனை விட்டு விலகி, ஆனந்தத்தை தெருவில் தேடிக்கொண்டு அலைகிறீர்கள். ஆனந்தத்தை விட்டு விலகிச் செல்கிறீர்கள்.

ஆக, ஆனந்தமாக இருக்கும் தகுதி அனைவருக்கும் உள்ளது. ஆனால் அதை உங்களால் சில கணங்களுக்குத்தான் உருவாக்க முடிகிறது. மீதிநேரம் முழுவதும் துயரமான கணங்களை உருவாக்குகிறீர்கள்.

ஒரு கணத்தை நீங்கள் விரும்பிய விதத்தில் ஆனந்தமாக உங்களால் உருவாக்க முடியும் என்றால், அடுத்தடுத்த கணங்களையும் நீங்கள் விரும்பிய விதத்தில் ஆனந்தமாக உருவாக்க உங்களால் நிச்சயம் முடியும். முழு வாழ்க்கையே இப்படி ஒவ்வொரு கணங்களாகத்தான் உங்களிடம் வருகிறது.

நல்லவேளை, ஒரு நேரத்திற்கு ஒரு கணம்தான். அவை தனித்தனியாகத்தானே வருகின்றது. கணங்கள் கட்டுக்கட்டாக உங்களிடம் வருவதில்லை. இந்த கணத்தில் ஆனந்தமாக இருக்கத் தெரிந்தால் போதும், உங்கள் வாழ்வே ஆனந்தமாகிவிடும். ஆனால் இது தெரியவில்லை என்றால், நீங்கள் நிரந்தரமாக உங்களை தொலைத்து விடுவீர்கள்.