Question: ஈஷா யோகா வகுப்பை முடித்துவிட்டேன். இப்போது ஆனந்தமாக இருக்கிறேன். தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் எனது இந்த ஆனந்தம் எப்போதும் நீடிக்குமா?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் தொடர்ந்து ஒரு ஆனந்த கடலில் வாழ வேண்டுமென்று நினைத்தால் உங்களைச் சுற்றி ஒரு ஆனந்த அலையை உருவாக்க வேண்டும். உங்களுடைய இருப்பே ஆனந்தமாகிவிட வேண்டும். நீங்கள் தொழில் செய்தாலும், குடும்பம் நடத்தினாலும், என்ன செயல் செய்தாலும் ஒரு ஆனந்தமான சூழ்நிலை உருவாக்கிக் கொள்ளலாமா? ஆனந்த அலை என்பது வெற்றுக் கற்பனை என்று நினைத்துவிட வேண்டாம். கட்டாயமாக மனிதனால் இதைச் செய்ய முடியும். இத்தனை காலங்களாக இது நடக்காமல் போய்விட்டது. இதுவரைக்கும் ஆன்மீகமென்றால், “நீங்கள் சற்று அமைதியாக இருந்தால் போதும்" என்று கூறியிருந்தனர். ஆனால் ஆனந்தமாக இருக்க வேண்டிய நேரம் இது. எனக்கு வெறும் அமைதி வேண்டாம். மனிதன் உயிருடன் இருக்கும்போது தெம்பாக, ஆனந்தமாக, புத்துணர்வாக இருக்க வேண்டும். உயிரோட்டமாக இருக்க வேண்டும். இது ஈஷாவுடைய இயக்கமல்ல. இது எனது விருப்பமல்ல. இதுதான் ஒவ்வொரு உயிரின் நோக்கமாகக் கூட இருக்கிறது.

ஒருவர் ஆனந்தமாக இருக்கும்போதுதான் யாருக்கு பிரச்சனை என்றாலும் அவருக்கு என்ன செய்யலாம் என்ற எண்ணம் வரும்.

ஒவ்வொரு உயிருக்கும் ஆனந்தமாக இருக்க வேண்டுமென்ற நோக்கம் இருக்கிறது. சமூகத்தில் அதற்கு வழிவகை இல்லாமல் செய்திருக்கிறோம். ஆனந்தமாக இருப்பது ஏதோ அதிசயம் என்பது போல செய்து விட்டிருக்கிறோம். ஆனால் ஆனந்தமாக இருப்பதுதான் இயல்பானது. சின்னக் குழந்தையாக இருந்தபோது எந்தக் காரணமும் இல்லாமல் ஆனந்தமாகத்தானே இருந்தீர்கள்? இப்போது மட்டும் நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? வேறேதுமில்லை. கவனம் எங்கெங்கோ சென்றுவிட்டது. சிறிதளவேனும் இதைப்பற்றி நாம் கவனம் செலுத்தினால் ஆனந்தமாக இருப்பது ஒரு கற்பனையாகவோ, கனவாகவோ இருக்காது. நம் சமூக சூழ்நிலையில் நம் ஒவ்வொருவருக்குள்ளும் நிச்சயமாக இதை உருவாக்க முடியும்.

நம்முடைய நாட்டில் இப்பொழுது பொருளாதாரம் சிறிதளவு புத்துயிர் பெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு சிறு சதவிகித மக்கள் மட்டும்தான் இதில் பலன் அடைவதற்கான வாய்ப்பு உள்ளது. மற்றபடி கிராமப்புற மக்களுக்கு எந்த புத்துயிர்வும் ஏற்படவில்லை. பெரும்பான்மையான கிராம மக்கள் பழைய நிலைமையில்தான் இருக்கின்றனர். ஒட்டுமொத்த உலகத்திலேயே இப்போதைய தலைமுறை ஒரு முக்கியமான தலைமுறை. உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் தேவையான உணவு, கல்வி, ஆரோக்கியம் வழங்கக்கூடிய அளவுக்கு தொழில்நுட்பம், திறமை, பொருளாதாரம் அனைத்தும் இப்போது உலகில் உள்ளது. இத்தகைய வசதியான சூழல் எப்பொழுதுமே இதற்கு முன் நிலவியதில்லை. ஆனால் மனிதனின் மனதில் அதைப் பகிர்ந்தளிக்கும் விருப்பம் மட்டும் இன்னும் தலையெடுக்கவில்லை. அதற்குக் காரணம் ஒவ்வொருவருமே தான் பிரச்சினையில் இருப்பதாக நினைப்பதுதான். தனக்கே பிரச்சனை என்றிருந்தால் மற்றவர் பிரச்சனையை கவனிக்க முடியாது.

ஒருவர் ஆனந்தமாக இருக்கும்போதுதான் யாருக்கு பிரச்சனை என்றாலும் அவருக்கு என்ன செய்யலாம் என்ற எண்ணம் வரும். தம் திறமைக்கேற்றபடி பிரச்சனை தீர எதையாவது செய்வதற்கான ஒரு நோக்கம் வரும். இந்த நோக்கமுள்ள மனிதநேயம் மிக, மிகத் தேவையான ஒன்று. தொழில்நுட்பம், திறமை, பொருள் என்று அனைத்தும் இருந்தும், இவற்றை ஒன்றிணைத்து மற்றவருக்கு உதவக்கூடிய மனிதநேயம் இல்லை. இந்த மனிதநேயம் வரவேண்டுமென்றால் சாதாரண மக்களுக்குள்ளும், நாட்டுத் தலைவருக்குள்ளும் ஓர் ஆனந்தமான உணர்வை உருவாக்க வேண்டும். அப்போது உலகத்தின் ஒவ்வொரு மனிதனுடைய அடிப்படைத் தேவையும் பூர்த்தியடையக்கூடிய வாய்ப்பு உருவாகலாம்.

ஒரு வளமையான உலகை உருவாக்க நூறு வருடம் தேவையில்லை. நம்மிடையே இருக்கின்ற தலைவர்களுடைய உள்ளங்களில் ஓர் ஆனந்தமான உணர்வும், அனைவரையும் மனதார ஏற்றுக் கொள்கிற ஓர் உணர்வும் ஏற்பட்டுவிட்டதென்றால் நிச்சயமாக மூன்றிலிருந்து ஐந்து வருடங்களுக்குள் ஓர் அற்புதமான உலகம் உருவாக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய திறன் கொண்ட ஒரு வாய்ப்பு ஆயிரமாயிரம் வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் அமைந்திருக்கிறது. ஆனால் இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ளலாமா என்பதையும், அதற்கான இதயபூர்வமான உணர்வு நமக்கு இருக்கிறதா? என்றும் பார்க்க வேண்டும். ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் அந்த உணர்வை உருவாக்க வேண்டுமென்ற ஆசை எனக்கு இருக்கிறது.
நீங்கள் உங்கள் ஊரில் ஆனந்த அலையைப் பரவச் செய்வீர்களா? ஒவ்வொரு மனிதனுக்கும், இன்னொரு மனிதன் பற்றி, இன்னொரு உயிர் பற்றி கவனம் ஏற்படுவது போல ஒரு சூழ்நிலை உருவாக்குவீர்களா? அவர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒரு புழுவாக இருக்கட்டும், பூச்சியாக இருக்கட்டும், மனிதனாக இருக்கட்டும். அதனுடன் நல்லவிதமாக வாழ வேண்டும் என்கிற ஓர் உணர்வு உருவாக்கலாமா? இந்த உணர்வு மட்டும் வந்துவிட்டால் போதும். திறமைக்கு இங்கே பஞ்சமில்லை. தொழில்நுட்பம் என்கிற மிகப்பெரும் சக்தி மனிதனிடம் இப்பொழுது உள்ளது.

இது உங்களுடைய வாழ்க்கை. ஆனந்தமான சூழ்நிலை உருவாக்குவதற்குத் தேவையான தொழில்நுட்பம் உங்களிடம் இருக்கின்றது. அது மட்டுமல்ல. அதற்கு மிகவும் உதவியாக, என்னுடைய அருளும் உங்களுக்கு ஒவ்வொரு கணத்திலும் இருக்கிறது. நீங்கள் இதை உபயோகப்படுத்தி ஒரு முழு ஆனந்தமான மனிதனாக வளர வேண்டும், உங்களை சுற்றியுள்ள உலகத்தையும் ஆனந்தமானதாக மாற்ற வேண்டும் என்பது என்னுடைய ஆசை.