IYO-Blog-Mid-Banner

கொல்லைப்புற இரகசியம் - பகுதி 8

இந்த பூமி பலவித அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் சுமந்தபடி சுற்றிக்கொண்டிருக்கிறது. அவற்றுள் நோய்களைத் தீர்க்கும் அதிசய மூலிகைகளும் மரஞ்செடி கொடிகளும் குறிப்பிடத்தக்கவை. அப்படிப்பட்ட ஒரு அற்புத கிழங்கு வகையான அமுக்கிரா கிழங்கைப் பற்றி உமையாள் பாட்டி என்ன சொல்கிறார் எனக் கேட்போம்!

"பாட்டி... உங்க கிட்ட ரொம்ப நாளா ஒன்னு கேக்கணும் கேக்கணும்னு நெனச்சேன். ஆனா, அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவே இல்ல. இப்போ கேட்கவா?!" என்றேன் சிறியதொரு புன்னகையை வெளிப்படுத்தியவனாய்.

அமுக்கிரா கிழங்க பொடி செஞ்சு, பால்ல கலந்து குடிச்சுட்டு வந்தா, நரம்புத் தளர்ச்சி நம்ம பக்கமே எட்டிப் பார்க்காது.

"நீ என்ன கேக்கப் போற...?! நீ கேட்டா கொடுக்கறதுக்கு ஏங்கிட்ட சொத்து-பத்து, தோட்டம்-தொறவு எதுவும் இல்லப்பா?! கொஞ்சம் பாத்து கேளு!" என்றார் பதில் புன்னகை சிந்தியபடி.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"அதில்ல பாட்டி, இந்த வயசிலயும் எப்படி தளர்வில்லாம உறுதியா இருக்குறீங்க?! எனக்கு உங்களப் பாத்தா ஆச்சரியமா இருக்கு" என்று நான் வெகு நாட்கள் கேட்க நினைத்ததைக் கேட்டு விட்டேன்.

"டேய்... பாட்டிய வச்சு ஏதாவது காமெடி பண்றியா?" என்று செல்லமாக முறைத்தவர்,

"நான் எப்பவுமே தானியம், காய்கறி, பயறு வகை... இப்படியான உணவுகள்தான் சாப்பிடுறேன். நீங்க சாப்பிடுற மாதிரி பீட்சா, பர்கரெல்லாம் சாப்பிட மாட்டேன். அதோட தொடர்ந்து யோகா, தியானம் பண்றேன். இதெல்லாம்தான் காரணம்!" என்று பேசிக் கொண்டே நடந்தவர் ஒரு வெண்கலச் செம்பிலிருந்த பாலில் ஏதோ பொடியைக் கலந்து, எனக்கு ஒரு டம்ளர் கொடுத்து விட்டு, அவரும் ஒரு டம்ளரில் குடித்தார்.

"பால்ல என்ன கலந்தீங்க பாட்டி?! ஹெல்த் ட்ரிங்கா? குடித்துக் கொண்டே கேட்டேன்."

"அதான் அமுக்கிரா கிழங்குப் பொடி. என்னோட தளராத இந்த உடல் திடத்துக்கு இதுவும் ஒரு காரணம்ப்பா! இந்த அமுக்கிரா கிழங்கு மிகச் சிறந்த தாது விருத்தியா இருக்கு. நம்மோட நரம்பு மண்டலம் சரியா செயல்படுறதுக்கு தாதுப் பொருட்கள் (தாது உப்புகள்) அவசியமானது. அமுக்கிரா கிழங்கு நம் உடல்ல தாது பொருட்களை சீரா வச்சிக்கிறதுக்கு உதவுது. அமுக்கிரா கிழங்க பொடி செஞ்சு, பால்ல கலந்து குடிச்சுட்டு வந்தா, நரம்புத் தளர்ச்சி நம்ம பக்கமே எட்டிப் பார்க்காது."

"எவ்வளவோ பேரு நரம்புத் தளர்ச்சியால அவதிப்படுறாங்க தெரியுமா?! நீங்க சொன்ன இந்த மருந்து அவங்களுக்கு நிச்சயம் நல்ல தீர்வா இருக்கும் பாட்டி! எப்படி இவ்வளவு பெரிய விஷயத்த சாதாரணமா சொல்றீங்க பாட்டி?!"

மெதுவாக என்னருகில் வந்தவள் "பெரிய பெரிய விஷயமெல்லாம் ரொம்ப சாதாரணமாதான் இருக்கும். நாமதான் அதுக்கு கவனம் கொடுக்கணும்!" என்று தோள்களைத் தட்டிச் சென்றார். பாட்டி கூறிய வார்த்தை மறைமுகமாக இன்றைய இளைய சமுதாயத்தை சாடுவதாகவே எனக்குத் தெரிந்தது.

அமுக்கிரா கிழங்கின் அற்புத பலன்கள், Amukkira kizhangin arputha balangal!

குறிப்புகள்:

  • அமுக்கிரா கிழங்கை பொடி செய்து நெய்யுடன் சேர்த்து பயன்படுத்தினால் உடல் உறுதி, அழகு, நீண்ட ஆயுள் பெறலாம்.
  • அமுக்கிரா கிழங்கை பச்சையாக எடுத்து, பசுவின் பால்விட்டு அரைத்து கொதிக்க வைத்து, இடுப்பு வலி, கண்டமாலை வீக்கம் போன்றவற்றிற்கு பற்றிடலாம்.
  • அமுக்கிரா கிழங்கை சுக்குடன் சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கு போட வீக்கம் கரையும்.
  • கிழங்கை பாலில் வேக வைத்து அலம்பி உலர்த்தி பின் பொடி செய்து, ஒரு வேளைக்கு 2-4 கிராம் வரை தேனில் கொடுக்க உடல் பருமன், வீக்கம், பசியின்மை நீங்கும்; நெய்யில் கொடுக்க உடலிற்கு வன்மை தரும்.
  • அமுக்கிரா கிழங்கு பொடி - 1 பங்கு, கற்கண்டு - 3 பங்கு என சேர்த்து, காலையும் மாலையும் பசுவின்பாலுடன் (½ - 1 ஆழாக்கு) 4கிராம் சேர்த்து சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். உடல் வன்மை பெறும்.

கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்


Photo credit: cliff1066™ @ flickr, Hari Prasad Nadig @ flickr, Aswagandhaherb @ wikimedia