அமெரிக்காவிலிருந்து தான் இந்தியா பறந்துகொண்டிருக்கும் வழியில் நமக்காக இந்த வார சத்குரு ஸ்பாட்டை புனைந்திருக்கிறார் சத்குரு. அமெரிக்காவின் தற்போதைய நிலை தன்னை சிலச் செயல்களை செய்ய உந்தச் செய்வதையும், அது நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு எத்தனை முக்கியமானது என்பதையும் தனக்கே உரிய பாணியில் எழுத்தில் வடிக்கிறார் சத்குரு...

உலகின் தலைசிறந்த நாடாக கருதப்படும் அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஏழு வாரங்கள் இருந்த பின், "எல்லாமே சரியாக இருக்கும் உலகம்" என்றால் என்ன என்பது குறித்த சிந்தனையில் ஆழ்ந்துள்ளேன். சீரிய ஆன்மீகம், பொருளாதார வளம் இவையிரண்டின் கலவையாய் அமைக்கப்பட்ட அற்புதமான ஒரு "கற்பனை உலகம்" எனக்குள் இல்லாமல் இல்லை. பொருளாதார வகையில் பார்த்தால், வெளியுலகம் எப்போதுமே வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கிறது. அதில் பூரணத்துவ நிலை ஏற்படப் போவதில்லை. ஆனால், பொருளாதாரமே பெருவாரியான மக்களை நல்வாழ்வினை நோக்கி இட்டுச் செல்வதாய் உள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அமெரிக்க மக்களில் செல்வச் செழிப்புடையவர்களை கூர்மையாக கவனித்தபின், அவசரகால நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். பெரும்பான்மையான மனிதர்கள் அடையவிரும்பும் அனைத்தையும் தங்கள் வசம் கொண்டுள்ள இவர்கள், நல்ல நிலையில் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல, அவர்களுடைய முயற்சிகளுக்கும் வாழ்வின் சாதனைகளுக்கும் பொருந்தாத வகையில், வேதனையிலும் நம்பிக்கையில்லா நிலையிலும் வாழ்கின்றனர்.

செல்வச் செழிப்பினை நாடும் மக்கள் அதனை அடைய எத்தனைப் பாடுபடுகிறார்களோ அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவர்களுடைய முகங்களில் அந்த இனிமையினை காண முடிவதில்லை. பொருளாதார மற்றும் லௌகீக நல்வாழ்விற்கு ஏற்றவாறு, அதனைச் சமன்படுத்த ஆன்மீக அருள் இல்லாதுபோனால், அனைத்துமே வீணாகிவிடும். நல்வாழ்வினை நாடிச் செயல்பட்ட மனிதர்களால் ஏற்பட்ட விளைவே இப்போது நிலவும் இந்த பேராபத்தான சுற்றுச்சூழல் விளிம்புநிலை. நாம் பூமியை நார்நாராகக் கிழித்தாலும் நல்வாழ்வு நிகழாது. ஏனென்றால், அது உள்தன்மை சார்ந்ததாக இருக்கிறது. அமைதியும் ஆனந்தமும் மலைகளின் மௌனத்திலுமில்லை, சந்தைகளின் சத்தங்களிலுமில்லை. உள்தன்மையின் பரிமாணங்களை ஆராய்பவர்களால் மட்டுமே அங்கு நிரந்தரமாக குடிகொள்ள முடியும்.

கடந்த சில வாரங்களாக, உலக அமைதி தினக் கொண்டாட்டங்கள், ஐக்கிய நாடுகள் சபையில் பேசியது, முதன்முதலாக கோல்ஃப் பந்தயத்தில் கலந்துகொண்டது என்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக அமெரிக்காவை குறுக்கும் நெடுக்குமாக பயணித்துவிட்டேன். கோல்ஃப் போட்டி, ராபர்ட் கென்னடி அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவாக கொண்டாடப்பட்டது. ஃபீஸ்டி எதல் கென்னடி, அவரது குடும்பத்தினரின் விருந்தோமல் அற்புதமாக இருந்தது.

இப்போது மும்பை செல்லும் நம் ஏர் இந்தியா விமானத்தில் அமர்ந்திருக்கிறேன். இன்னும் 14 மணி நேரத்தில் இந்தியாவில் இருப்பேன், ரைட் சகோதரர்களுக்கு நன்றி.

Love & Grace