மாதம் ஒரு முறை வருகிறது அமாவாசை. இது இருள் நிறைந்த இரவாகும். இந்த இருள் என்ன செய்ய வல்லது? சத்குரு சொல்கிறார்...

சத்குரு:

அமாவாசை நம் விழிகளில் இருந்து நிலவு ஒளிந்து கொள்ளும் ஒரு நாள். அமாவாசை அன்று, அந்த இருட்டை குலைக்காமல், கும்மிருட்டாக வைத்திருந்தால், உங்கள் மனமும் பேய், பிசாசு, பிரேதங்களைப் பற்றிய கற்பனையில் உழலாமல், அலைபாயாமல் இருந்தால், இருள் மிக அற்புதமான ஒரு விஷயமாக இருக்கும்.

சலனமுள்ள மனம் கொண்டவர்களுக்கு இருள் என்றால் பிரச்சனை. நிலையான மனம் கொண்டவர்களுக்கு இருள் மிக அழகான ஒரு விஷயம்.

கும்மிருட்டான ஓர் இடத்தில் அமரும்போது, சற்று நேரத்தில் உங்கள் சொந்த உடலினுடைய எல்லைகளை கூட நீங்கள் உணரமாட்டீர்கள். நீங்கள் எங்கிருக்கிறீர்கள், எங்கு இல்லை என்பதில் கூட குழப்பம் ஏற்படலாம். திடமான, தியானத்தில் ஈடுபடக் கூடிய மனத்திற்கு இருள் ஒரு வரம். மனம் சற்றே பலவீனமாய் இருப்பவருக்கு இருள் என்பது பிரச்சனையே. இருள் யாரையும், எப்போதும், எங்கேயும் கடித்திருக்காவிட்டாலும், பெரும்பாலான மனிதர்கள் இருள் என்றால் பயந்து திடுக்கிட்டு போகின்றனர். கண்கள் மூலம் மனம் பல விஷயங்களை உள்வாங்கிக் கொள்வதால், கண்கள் இருளில் திணரத் துவங்கியவுடன் மனம் திக்குமுக்காடத் துவங்கிவிடுகிறது. நாம் நம் புலனுறுப்புகளுக்கு அடிமையாய் இருப்பதால்தான் இந்தப் போராட்டம்.

அரைவேக்காடான, 5 பேதைகளை நீங்கள் நண்பர்களாகக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் எதைப் பார்த்தாலும், எதை உணர்ந்தாலும் புலனுறுப்புகள் அந்த அனுபவத்தின் ஒரு பகுதியை மட்டுமே நீங்கள் உணர வழிசெய்யும். அவை முழு அனுபவத்தை என்றுமே உங்களுக்கு வழங்காது. இருந்தும், புலனுறுப்புகளை நீங்கள் நம்பத் துவங்கும்போது, அதனுடன் ஒட்டிக்கொள்ளும்போது உங்கள் கிரகிப்புத் திறன் சிதிலமடைந்து திரிக்கப்படுகிறது.

சலனமுள்ள மனம் கொண்டவர்களுக்கு இருள் என்றால் பிரச்சனை. நிலையான மனம் கொண்டவர்களுக்கு இருள் மிக அழகான ஒரு விஷயம். யாராலும் தொந்தரவு செய்ய இயலாத மிக அற்புதமான ஒரு விஷயம் இருள். அது மிக உறுதியான ஒரு விஷயமும்கூட, ஏனெனில் அதனை யாராலும் வீசி எறிய முடியாது. இருள் ஒன்றே நிலையானது, இருள் ஒன்றே எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்துள்ளது. இந்த படைப்பு முழுவதும், இந்தப் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பது இருள் மட்டுமே. இருளின் நிச்சலனத்தை, இருளின் அழிவில்லா நிலையை உணர, சுவைக்க ஸ்திரமான மனதை நீங்கள் பெறுவீர்களாக!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.