நம்மவரு நம்மாழ்வார்... பகுதி 14

'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்ற பழமொழி, உணவை அளவாக சாப்பிடுவதற்காக மட்டும் சொல்லப்படவில்லை, நமது வசிப்பிடம், வாகனம், உடைபோன்ற எல்லாவற்றிலும் கவனிக்க வேண்டிய விஷயம் அது. பக்கத்திலிருப்பவரைவிட ஒரு ரொட்டித் துண்டு அதிகமாகக் கிடைத்தால் மட்டுமே திருப்தி அடைகிற மனநிலையில் மனிதன் இருக்கும் சூழ்நிலையில், நம்மாழ்வாரின் இந்தக் கட்டுரை கொஞ்சம் நம்பிக்கை தருகிறது.

நம்மாழ்வார்:

கடல் மட்டம் உயரும்போது, கடலோர மக்களின் உணவு உற்பத்தி பாதிக்கப்படும்போது, குடிநீர்ப்பற்றாக்குறை வரும்போது, அவர்கள் என்னென்ன விபத்துக்களைச் சந்திக்க நேரிடும் என்பதைக் கற்பனை செய்வது இப்போது கடினமாக உள்ளது. ஆனால், நாம் நேரிடையாக சந்திக்கின்ற இன்னும் ஏராளமான பிரச்னைகள் நாமே தோற்றுவித்துக் கொண்டவைதான்.உதாரணமாக, வேளாண்மையில் ரசாயனங்களைப் புகுத்தியதுதான் நாம் செய்தஅடிப்படைத் தவறு. இதனை நாம் தொடர்ந்து பலஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகிறோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு அவர்களின் வாழ்த்துதலுடன், இயற்கை வேளாண்மை பரவலாக கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும், வேளாண்மையில் ரசாயனங்களைப் புகுத்துவதால் ஏற்படும் தீங்குகளை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளவில்லை. நாம் வாழும் நிலம் ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு வாழ்வாதாரம். அது போலவே, நம் நிலத்தைச் சூழ்ந்துள்ள கடலும் பல்லாயிரம் உயிர்களுக்கான வாழ்வாதாரம் ஆகும். வாழ்வாதாரங்களைச் சிதைப்பது, நுனி மரத்தில் இருந்து அடி மரத்தை வெட்டுவது போன்ற அடிமுட்டாள்தனம்.

மண்ணில் வாழும் நுண்ணுயிர்களையும் விண்ணில் பறக்கும் பறவைகளையும் நம்மை அண்டி வாழும் பசுக்களையும் ஒதுக்கி வைத்துவிட்டுத் தன்னை மட்டுமே உயர்த்திக்கொள்ள முனைந்த உழவர்கள், இன்று மரியாதை இழந்து தவிக்கிறார்கள். இழந்த பெருமையை மீட்பதற்கு நமக்கு இருக்கும் ஒரேவழி, இயற்கையைத் தழுவிக்கொள்வதுதான்.பூமி வெப்பமாவதால் ஏற்படும் தீய விளைவுகளைத் தணிப்பதற்கு நமது ஆசைகளைக் குறைத்துக்கொள்வது ஒன்றே சரியான பாதை.

வயிறுபசித்த மனிதன் பசியாறுவதற்கு உணவுகொள்கிறான். இங்கு உணவு ஒரு வலிநிவாரணியாகிறது. வெயில், மழை, பனி, காற்று இவற்றின் பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ள ஒரு வீட்டை முடைகிறான். வீடு அவனுக்கு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. குளிரில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள ஒருவன் உடைகள் அணிகிறான். உடைகள் இங்கு வலிநிவாரணிஆகிறது. நடந்து செல்லும் ஒருவன் தன் வலியை மறக்க காலில் அணிகிற செருப்பும், கையில் பிடிக்கிற குடையும்கூட வலிநிவாரணிதான். பயணத்துக்கு மாட்டு வண்டி, குதிரை வண்டி, சைக்கிள்வண்டியைப் பயன்படுத்துகிறான். அவை வலிநிவாரணியாக இருக்கின்றன.இந்தக் கருவிகளை இன்பத்துக்கான ஊற்றாக நினைக்கும்போதுதான் துன்பம் தொற்றிக்கொள்கிறது.

இதைத்தான் அன்று புத்தர் போதித்தார். இதையே இன்று சத்குரு போதிக்கிறார். பசியை ஆற்றிக்கொள்ள வேண்டியது அடிப்படைத் தேவை.

மாறாக, பிறரைவிட எனக்குக் கூடுதலாக இருக்க வேண்டும் என்று, ஒவ்வொன்றிலும் கூடுதலாக அபகரித்துக்கொள்வது பேராசை. பேராசைகளில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும். கீரையில் இருந்து காய், கனி, பருப்புவரை அனைத்துத் தேவைகளையும் மரம் நிறைவு செய்ய முடியும். தொட்டில் கம்பு முதல், இறுதிப் பயணத்தின் போது பயன்படும் பாடை வரை அனைத்தையும் மரங்கள் நிறைவு செய்யும். பசுமைக் கரங்கள் திட்டத்தைத் தொடங்கிவைத்தபோது சத்குரு இதைத் தான் நமது மனதில் பதியவைத்திருக்கிறார்.

இந்தப் புரிந்துணர்வை ஏராளமான மக்களுக்குக் கொண்டுசெல்வது நம் எல்லோரின் பொறுப்பாகும். எங்கெங்கும் மரங்கள் நட்டு பூமித் தாய்க்குப் பச்சைப் பொன்னாடை போர்த்த நம்மைத் தயார் செய்து கொள்வோம்.

அதுவே நம் தாய்க்கு நாம் செய்யும் அரும்பெரும் அன்பு!

தொடர்ந்து விதைப்போம்...

nature, nammalvar, agriculture

தள்ளாத வயது என வர்ணிக்கப்படும் வயதில், வாலிபராய் நம்மிடையே வலம் வரும் நம்மாழ்வார் அவர்கள், இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவை எடுத்துரைப்பது எனப் பல தளங்களில் தனது சேவையை ஆற்றிவருகிறார்.

VinothChandar@flickr