ஐயம் அவசியம்

இன்றைய தரிசனத்தில், நம் வசதிக்கேற்ப உண்மையை நாம் திரித்துக்கொள்ளும் பரிதாபம், வசதியாக இருப்பதன் அபாயம், நாம் செய்வது சரியா தவறா என்று சிந்திக்கும் ஐயத்தின் அவசியம், என்று பல விஷயங்கள் குறித்து சத்குரு பேசியதிலிருந்து சில துணுக்குகள் உங்களுக்காக…

6:25

சூரியன் மறையும் வேளையில் உதித்த சூரியனாய் சத்குரு தரிசனமளித்தார். “ஜெய ஜெய ஜெய மஹாதேவ” எனும் உச்சாடனத்துடன் தரிசனத்தைத் துவங்கினார் சத்குரு.

“மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் உண்மை வெவ்வேறாய்த் தோன்றுவதற்குக் காரணம், அவரவருக்கு எது வசதியோ அதை மட்டுமே உண்மையாக ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த உண்மையை சலித்துப் பொய்யாக்கும் சல்லடையை கீழே வைத்துவிட்டால் எஞ்சியிருப்பதெல்லாம் உண்மை மட்டுமே.” என்ற சத்குருவின் அருளுரையைத் தொடர்ந்து சம்ஸ்க்ருதி குழந்தைகள் அழகான தேவாரப் பாடலொன்றைப் பாட்டினார்கள்.

6:50

“பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பதால் குடும்பத்தினரும் நண்பர்களும் என்னை மதிப்பதில்லை. என்னிடம் நன்மை உருவம் இருக்கிறது. என் நிலைக்கு ஏதாவது செய்யுங்கள்” என்று ஒருவர் கண்கலங்கிட, “உங்கள் பணத்திற்காக உங்களுடன் ஒட்டிக்கொள்பவர்களை வைத்துக்கொள்வதற்கு, அவர்கள் இல்லாமல் இருப்பதே மேல். நன்மை என்பது வேறு, பொருள்வசதி என்பது வேறு. இதை உணர்ந்திட பொருளாதாரத்தில் நீங்கள் முன்னேறும் வரை காத்திருக்காதீர்கள்.” என்று சத்குரு கூறினார்.

7:05

“எனக்கு என்மேல் முழுமையான நம்பிக்கை இல்லாமல் என்னைப் பற்றி ஐயம் வருவது சரியா?” என்று ஒருவர் கேட்க, “புத்தியை பயன்படுத்தி நீங்கள் செய்வதை கவனமாகச் செய்ய இந்த ஐயம் அவசியம். நமக்குத் தேவை புத்தியுள்ள மனிதர்கள். நம்பிக்கையினால் முட்டாள்த்தனமாய் உள்ளாடையை வெளியே போட்டுக்கொள்ளும் சூப்பர்மேன்கள் அல்ல. தான் தவறாக இருக்கக்கூடும் என்ற ஐயம் இருந்தால் மனிதர்கள் பூமியில் அற்புதமாக இருப்பார்கள். ஐயம் நல்லது, ஆனால் சந்தேகம் இருக்கக்கூடாது.” என்றார் சத்குரு.

7:28

“நான் கடவுளிடமிருந்து வந்தேன் என்றால், எல்லாம் கடவுள்தன்மை என்றால், ஏன் இந்த வேற்றுமை?” என்று ஒருவர் கேட்க, “படைப்பின் அழகே, எல்லாம் அதே தெய்வீகத்திலிருந்து வந்தபோதும் அதற்கே உரிய தனித்துவம் ஒவ்வொன்றிற்கும் இருப்பதுதான். யாரோ தன் அனுபவத்தால் சொன்னதைக் கதையாக நீங்கள் புரிந்துகொண்டால் இப்படித்தான் ஆகும். மனிதர்களுக்கென வழங்கப்பட்டிருக்கும் மகத்தான புத்திக்கு பிரபஞ்சத்தின் அற்புதம் புலப்படாததால் வந்திருக்கும் கேள்வியிது. இப்போது ஒரு கொசு உங்களைக் கடித்தால், அதை அன்பாகப் பார்த்து, ‘இது கடவுளிடமிருந்து வந்தது. என் இரத்தம் இதனிடம் சென்றால் கடவுளிடம் செல்கிறது. என்ன அற்புதம்!’ என்று பேரானந்தம் அடைவீர்களா?” என்று கூறி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்.

7:45

“தில்லைவாழ் அந்தணர்கள் அடியார்க்கும் அடியேன்…” என்று மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணம் குழந்தைகள் பாடிட, அனைவரையும் வணங்கி விடைபெற்றார் சத்குரு.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press ConvertLeave a Reply