இந்தப் பிரபஞ்சம் முழுக்க ஐந்தே ஐந்து மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்று சொல்லும்போது அது ஆச்சர்யத்தை அளிக்கலாம். நம் கலாச்சாரத்தில், உண்மை உணர்ந்தவர்கள் பலர் பஞ்சபூதங்களின் தன்மைகள் குறித்து பேசியிருந்தாலும், இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவிதமாக, சத்குரு இங்கே பஞ்பூத விளையாட்டின் கூறுகளை விளக்குகிறார்!

சத்குரு:

“நிலம், நீர், காற்று, நெருப்பு, வெற்றுவெளி ஆகிய ஐம்பூதங்களும், இந்த உடலின் அடிப்படையாக இருக்கிறது, இந்த பூமியின் அடிப்படையாக இருக்கிறது மற்றும் படைப்பு முழுவதற்குமே கூட அடிப்படையாக இருக்கின்றன.”

ஒரு சாம்பார் தயாரிக்கக் கூட பதினேழு மூலப்பொருட்கள் தேவை. ஆனால் ஐந்தே ஐந்து மூலப்பொருட்களுடன், என்ன ஒரு படைப்பு!

மலர்கள் இனிய தேன் மற்றும் நறுமணத்தின் பிறப்பிடமாக இருப்பதுடன், பல வண்ணங்களையும் வாரியிறைக்கின்றன. ஒரு தேனீ அற்புதமாகக் கூடு கட்டி, அதில் இனிமையான தேனை நிரப்பும் அதே நேரத்தில், தன் கூர்மையான விஷக்கொடுக்கின் துணையுடன் தேனைப் பாதுகாக்கவும் செய்கிறது. பறவைகள் இனிமையாக இசைக்கின்றன. வண்ணம், நறுமணம், இசை மற்றும் நாவிற்கு இனிமையான பலவற்றை இந்த படைப்பினங்கள் செய்கின்றன. மனிதர்கள் கூட இவற்றைச் செய்துவிட முடியும். ஆனால் மனிதன் மட்டுமே இவற்றையும் கடந்து செல்வது எப்படி என்று பார்க்கமுடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வாழ்வின் இனிமையான அம்சங்களுக்கோ அல்லது வண்ணங்கள் மற்றும் நறுமணங்களுக்கோ நான் எதிரானவன் இல்லை. ஆனால் இவற்றை நாம் உருவாக்காமற்போனால் எந்த இழப்பும் இல்லை. ஏனெனில் நம்மைக் காட்டிலும் இயற்கை அற்புதமாக அவற்றைச் செய்கிறது. இசைக்கலைஞர்கள் பாடுவதை நிறுத்தினால் இழப்பு ஏதுமில்லை. ஏனென்றால், நீங்கள் விருப்பத்துடனும், கவனமுடனும் கேட்டால் ஒவ்வொரு இலையும், மரமும், காற்றும் கூட தனக்கேயுரிய லயத்தை ரீங்காரம் செய்துகொண்டு இருப்பதைக் கேட்கமுடியும். வர்ணம் தீட்டுபவர்கள், சித்திரம் வரைபவர்கள் அதை நிறுத்தினாலும் எந்த இழப்பும் இல்லை. மக்கள் நகலைக் கண்டு வியப்படைவதற்குப் பதில் அசலான படைப்பை உற்றுநோக்கத் துவங்குவார்கள்.

இயற்கையாக நிகழக்கூடிய அனைத்தையும் மனிதர்கள் செய்யமுடிவது பாராட்டுக்குரியதுதான். ஏனெனில், உயிரின் பரிணாம வளர்ச்சியில், அறிவும், திறனும் அமையப்பெற்ற ஒரு குறிப்பிட்ட நிலையில் மனிதர்கள் உள்ளனர். அனைத்து உயிரினங்களின் தன்மையையும் நாம் வெளிப்படுத்தமுடியும். இருப்பினும் மனிதர்கள் பலரும், ஒரு தேனீ உருவாக்கக்கூடிய இனிமையை தங்களுக்குள் உருவாக்காமல்தான் இருக்கின்றனர். ஆனால் தேனீயின் கொடுக்கைவிட மோசமான ஆயுதங்களை மட்டும் உருவாக்கி வைத்துள்ளனர். இருந்தாலும், இதில் மிக முக்கியமானது என்னவென்றால், இந்த ஒட்டுமொத்த இயற்கையின் லீலைகளையும் கடந்து உயரக்கூடியதிறன் ஒரு மனிதனுக்கு உண்டு.

பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், காற்று, நெருப்பு, வெற்று வெளி ஆகியவை இந்த உடலுக்கு அடிப்படையாக இருக்கிறது, பூமிக்கு அடிப்படையாக இருக்கிறது, படைப்பு முழுவதற்குமே அடிப்படையாக இருக்கிறது. ஒட்டுமொத்த படைப்பும் இந்த ஐந்து மூலப்பொருட்களால்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து மூலக்கூறுகளும் ஒரு குறிப்பிட்ட விதமாக கூட்டுச் சேர்ந்தால், அந்த விளையாட்டிற்கு மண் எனப்படுகிறது. அவைகளின் விளையாட்டு சற்றே மாறுபட்டால், அதுவே உணவாக உருவாகிறது. அவைகளே வேறொருவிதமாக விளையாடினால், அது மனிதனாகிறது. ஐம்பூதங்களும் இன்னொரு விதமாக ஒரு வித்தியாசமான விளையாட்டு நிகழ்த்தினால், அது தெய்வீகம் என்றாகிறது. படைப்பில் நீங்கள் காணுகின்ற ஒவ்வொன்றும் இந்த ஐந்து விஷயங்களின் வித்தைதான்.

இது ஒரு ஐந்து முனை விளையாட்டு. மூலப்பொருட்கள் ஐந்து மட்டும்தான். ஒரு சாம்பார் தயாரிக்கக் கூட பதினேழு மூலப்பொருட்கள் தேவை. ஆனால் ஐந்தே ஐந்து மூலப்பொருட்களுடன், என்ன ஒரு படைப்பு! ஐந்து என்பது அதிகப்படியான எண்ணிக்கை அல்ல. வெறும் ஐந்து பொருட்களில் எப்படிப்பட்ட ஒரு சிக்கலான விளையாட்டு, அல்லது அப்படித் தோன்றுகிறது. ஒருவிஷயம் மிகமிக சிக்கலாக இருக்கும்போது, அதற்குள் மூழ்கி, பிறகு அது ஐந்து பொருட்களின் கூட்டுவித்தைதான் என்று நீங்கள் அறியும்போது, பிறகு அது பிரபஞ்சத்தின் குறும்பாக உங்களுக்குப் படுகிறது. உங்களுக்குச் சிக்கலாகத் தோன்றிய ஏதோ ஒன்று ஒரு வேடிக்கையான விளையாட்டு என்று அறிந்துகொண்ட பிறகு, நீங்கள் அந்த விளையாட்டை விளையாட மறுத்துவிடுகிறீர்கள்.

நியூயார்க் விமானநிலையத்தில், சுமார் 60 வயதுடைய, நீண்ட தாடியோடிருந்த ஒருவரைக் கண்டேன். அவர் அணிந்திருந்த டி-சர்ட்டில், “நான் இப்போதெல்லாம் விளையாடுவதில்லை” என்று எழுதியிருந்தது. எது குறித்து இது எழுதப்பட்டுள்ளது என்பது புரிந்தது. முதியவர் தனது இளமைக்கால விளையாட்டைப் பெருமையாகப் பேசுகிறார். ஆனால் நான் அதையே வேறுவிதமாகப் பார்த்தேன். யோகிகளும் இதே சட்டையைத்தான் அணிந்துள்ளனர். ‘நான் இனி விளையாடப் போவதில்லை”, ஆனால் முற்றிலும் வேறொரு பொருளில். இது ஒரு எளிமையான விளையாட்டு ஆனால் இலட்சம் மடங்கு சிக்கலானது போல பெரிதுபடுத்தப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.

நான் சில வருடங்களுக்கு முன்பு, ஒரு மலை மீது கார் ஓட்டிக்கொண்டிருந்தேன். மேலே செல்லச் செல்ல அந்த மலை முழுவதுமே நெருப்புப் பற்றியிருந்ததைக் காண முடிந்தது! பனிமூட்டத்தினூடே அந்த இடமே நெருப்புக் காடாகக் காட்சியளித்தது. நான் நெருப்பை நெருங்க நெருங்க, அது விலகிச் சென்றுகொண்டே இருந்தது போலத் தெரிந்தது. பிறகுதான் என்னால் ஒன்றை உணரமுடிந்தது. அதாவது, மலையின் அடிவாரத்திலிருந்து நெருப்பு இருந்தது போலத் தோன்றிய எல்லா இடங்களையும் நான் கடந்துதான் வந்திருக்கிறேன்.

உண்மையாக நெருப்பு இருந்த இடத்தை நான் அடைந்தபோது அங்கே பழுதடைந்துவிட்ட ஒரு ட்ரக் நின்று கொண்டிருந்ததைக் கண்டேன். அதன் அருகே வண்டி ஓட்டுநரும், மற்ற இரண்டு நபர்களும் குளிர் காய்வதற்காக நெருப்பு உண்டாக்கியிருந்தனர். அடர்ந்த பனியின் காரணமாக அந்தச் சிறிய நெருப்பு லட்சம் மடங்கு உருப்பெருக்கம் ஆகியிருக்கிறது. அதனால் கீழேயிருந்து பார்ப்பதற்கு மலையே தீப்பிடித்தாற்போலத் தோன்றியுள்ளது. இது எனக்கு மிகவும் விசித்திரமாகத் தோன்றியது. குளிரை விரட்ட உண்டாக்கப்பட்ட ஒரு சிறு நெருப்புதான், ஆனால் ஒவ்வொரு பனித்துளியும் அதை உருப்பெருக்கியதால், அந்த மலையே தீப்பிடித்தது போல ஆகிவிட்டது.

படைப்பு என்பதும் இப்படித்தான். பெரும் அளவில் பெரிதுபடுத்தப்பட்டிருக்கிறது. இதைக்கூர்ந்து கவனித்து அந்த உண்மையை உணர்ந்தவர்கள் சொன்னார்கள், “படைப்பின் அற்புதத்தைப் புரிந்துகொள்வதற்கு, அந்த பெரிதுபடுத்தப்பட்ட படைப்பைப் பார்ப்பதற்குப்பதிலாக, சிறிய படைப்பாகிய ‘நான்’ என்றழைக்கப்படுகின்ற இந்த உயிரையே பாருங்கள் - இது போதும்.” இதில் உள்ள அதே பஞ்சபூதங்களின் நிகழ்வுதான் பிரபஞ்சத்தின் மற்ற படைப்புகளில் பெரிதுபடுத்தப்பட்ட நிகழ்வாகத் தெரிகிறது.