கேள்வியாளர் : சத்குரு, அகஸ்தியரை போன்ற ஒரு உன்னத உயிரை நம்மால் இன்று உருவாக்க முடியுமா?

சத்குரு:

அகஸ்திய முனி, குட்டையாகவும், அசிங்கமாகவும் இருப்பதாக மற்ற ஆறு முனிவர்களும் எண்ணினர். உங்களில் யார் யார் அகஸ்திய முனியாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவர்கள் அடிப்படையான சில தகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்!

அவர் ஒரு தமிழர்- கரிய நிறத்தவர், குட்டையானவர், தடிமனானவர். இவையெல்லாம் இருந்தாக வேண்டும் என்றில்லை.

அகஸ்தியரும் மற்ற சப்தரிஷிகளும் அவ்வாறு உருவாவதற்குக் காரணம், அவர்கள் தங்கள் முழு வாழ்க்கையையுமே சாதனாவில் கழித்தார்கள். தங்களின் தயார்நிலைப் பயிற்சிகளை இடைவிடாமல் செய்துகொண்டே வந்தார்கள். 84 வருடங்கள் இவ்வாறு சாதனா செய்தனர் என்று சொல்லப்படுகிறது.

இந்த 84 என்ற எண், மனித அமைப்பு மற்றும் பிரபஞ்சத்தின் இயக்கத்தோடு முக்கிய தொடர்புடையது. மனித அமைப்பில் நிகழக்கூடிய அனைத்து சாத்தியங்களையும் அவர்கள் கற்றறிந்தார்கள். 84 அம்சங்களிலும் அவர்கள் தங்களைத் தயார்செய்து கொண்டார்கள். அதில் பல செயல்முறைகளை கண்டறிந்தார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆதியோகி சப்தரிஷிகளுக்கு இந்த யோக விஞ்ஞானத்தை எத்தனை ஆண்டு காலம் கற்பித்தார் என்பது பற்றிய உண்மைகளைவிட புனைவுகளே அதிகம். அது 12 மாதங்களாக இருக்கலாம், 12 வருடங்களாக இருக்கலாம் அல்லது 144 வருடங்களாகவும் இருக்கலாம். ஆனால், மனித அமைப்பைப் பற்றி என்னவெல்லாம் புரிய வேண்டுமோ, கற்றறியப்பட வேண்டுமோ, அது இவர்களிடம் மட்டுமே நிகழ்ந்தது. இதனை பார்வதியிடம்கூட, அவர் வெளிப்படுத்தவில்லை.

அவர் அவளுக்கு தன் ஞானத்தைப் பகிர்ந்தார். ஆனால், அதன் விஞ்ஞானத்தைக் கற்றுத்தரவில்லை. ஏனெனில், சப்த ரிஷிகளிடம் இருந்த தயார்நிலையை அவர் பார்வதியிடம் காணவில்லை. இந்த ஏழு பேர் திறந்த நிலையில் இருப்பதைக் கண்டு, அவர்களுக்கு அவர் அறிந்த அனைத்தையும் பரிமாறினார்.

அந்த அறிவியலை ஏழாகப் பிரித்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் 16 செயல்முறைகளைக் கொடுத்தார். அதன்பின், அந்த பதினாறையும் அவருக்கே அர்ப்பணிக்கும் விதம், அவர்களுக்கு ஒரு பரிசோதனை வைத்து, பெற்றுக்கொண்டார். இந்த அர்ப்பணிப்பிற்கு குறியீடாக, அதன் அடிப்படையில் இன்றும் குருபூஜை செய்கிறோம். அவர்களுடைய நோக்கமும், அவர்களின் தயார்நிலையும் எவ்வளவு தீவிரமாக இருந்ததென்றால், அவர்கள் அத்தனை ஆண்டுகள் செலவழித்துக் கற்றதை திருப்பித் தரவும் தயாராக இருந்தார்கள். இந்த ஒரு விஷயத்தால் மட்டுமே பல ஆயிரம் வருடங்களுக்கு பிறகு, இன்றும் அவர்களை நாம் போற்றிக் கொண்டாடுகிறோம்.

ஒரு விதத்தில், இவர்களின் கதை என்ன சொல்லுகிறதென்றால், சப்தரிஷிகள் அனைவரும் எங்கிருந்தோ வானத்திலிருந்து குதித்தவர்கள் இல்லை. அவர்கள் அதிசயப் பிறப்பு எடுக்கவில்லை. அவர்கள் பிறந்தபோது, நட்சத்திரங்கள் தோன்றியதாகவும், இடி முழக்கங்கள் ஒலித்ததாகவும் யாரும் கூறவில்லை. அவர்களும் சாதாரணமாகத்தான் பிறந்தார்கள்.

இந்தியாவில் அவர்கள் எங்கு பிறந்தார்கள் என்று யாரும் அறிந்திருக்கவில்லை. யாரோ ஒரு பெண் எங்கேயோ ஒரு மூலையில் அவர்களைப் பெற்றெடுத்திருப்பாள். அவர்கள் சொர்க்கத்திலிருந்து குதிக்கவில்லை. அவர்கள் தங்களை தாங்களே அந்நிலைக்கு செதுக்கிக் கொண்டனர். அவ்வாறு உருவாக்கிக் கொண்டனர். அதுதான் அவர்களது வாழ்வின் கதை, அதுவே யோக சாதனாவின் கதையும்கூட. நீங்கள் யாராக இருந்தாலும், எப்படி பிறந்திருந்தாலும், உங்களின் பெற்றோர் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், உங்களின் கர்மவினை எப்படியிருந்தாலும், நீங்கள் விருப்பத்தோடு இருந்தால், உங்களை உச்சநிலைக்கு கொண்டு செல்லமுடியும். உங்களை அவ்வாறு உருவாக்கிக்கொள்ள முடியும்.

காட்டிலிருக்கும் பெரிய பெரிய மரங்கள் கூட, தங்களைத் தாங்களே அவ்வாறு உருவாக்கிக் கொண்டன அல்லவா? இப்போது இந்த மரங்களைக் கண்டு நாம் ஆச்சரியப்படுகிறோம். ஆனால், ஒரு சில வருடங்களுக்கு முன்பு, அது ஒரு சின்னஞ்சிறிய மரக்கன்றாகத்தான் இருந்திருக்கும். யாருக்கு இது புரியவில்லையோ, இவையெல்லாம் எங்கிருந்தோ வந்தது என்று நினைக்கின்றனரோ, அவர்கள் தங்கள் மன விளையாட்டிலேயே அகப்பட்டுக் கொண்டு, இதுபோன்ற விஷயங்களைக் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்.

நீங்கள் சற்றே கற்பனை செய்து பாருங்கள், அறுபது வருடங்களில், அம்மரம், வறண்ட பருவங்கள், யானையின் அட்டகாசங்கள் என அனைத்தையும் தாண்டி அதற்கு வேண்டிய ஊட்டச்சத்தினைப் பெற்று இவ்வளவு உயரமாக வளர்ந்திருக்கிறது. அவர்களுக்கு உணவு தட்டில் பரிமாறப்படவில்லையே? அச்செடியே சூரிய ஒளி, மண்ணிலிருந்து அதற்கு தேவையான சத்துகள் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு, அதன் உணவை அதே தயார்செய்து கொள்கிறது. இது அதற்கு மிகப்பெரிய சாதனாதான், அல்லவா? ஆனால், அதனை அதுவே சிறிது சிறிதாக வளர்த்து, நாம் இன்று வாயைப் பிளந்து ஆச்சரியப்படுகிற அளவிற்கு, இவ்வளவு பெரியதாகி இருக்கிறது.

அதேபோல், அகஸ்தியரையும் மற்ற சப்தரிஷிகளையும் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டும். ஏனெனில், இந்த மனிதர்கள் மனிதர்கள்போல இருக்கவில்லை. அவர்கள் அதிசயமானவர்களாக, தனிச்சிறப்புடையவர்களாக உள்ளனர். ஆனால், அவர்களை அவர்களே அவ்வாறு வடித்துக் கொண்டனர். அவர்களது ஆர்வம், உறுதி, சலனமில்லாத நோக்கம், அவர்களின் செயல், அவர்கள் புறக்கணிக்கப்பட்டாலும் செயல்பட்டது. இப்படி இடைவிடாது தங்களை தயார்செய்து கொண்டதுதான், மிக முக்கியமான அம்சம். மறுபடியும் ஒரு முறையோ, ஏன் 84 முறைப் பிறப்பதற்கும், இதுபோல் தயார்செய்து கொள்ளவும், அவர்கள் விருப்பத்துடன் இருந்தார்கள்.

இப்போது, அகஸ்திய முனி இங்கிருக்கும் ஒரு சிறிய கிராமத்தைச் சார்ந்தவர் என்று வைத்துக்கொள்ளலாம். அவர் திடீரென்று காணாமல் போய்விட்டார். அந்த கிராமத்தில் இருப்பவர்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? அவரது பெற்றோருக்கு, “ஓ, உங்கள் பையன் பெரிய முனிவராக போகிறார்,” என்று புகழாரம் சூட்டியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? இல்லை.

அவர்கள், அந்த பெற்றோர்களை கேலிசெய்து, “உங்களது முட்டாள் பையன் எங்கோ ஓடிப் போய்விட்டானா?” என்று கேட்பார்கள். பல ஆண்டுகளுக்குப் பின் அகஸ்தியர் திரும்பி வந்திருந்தாலும், அவரைக் காண்பதற்கு ஆவலாகவும், இமாலயத்தில் ஆதியோகியை அவர் சந்தித்ததை எண்ணி உற்சாகமாகவும் இருந்திருப்பார்கள் என்று எண்ணுகிறீர்களா? இல்லை. அவர்கள் அவரைக் கண்டு சிரிப்பார்கள். ஏனென்றால், வெறும் ஒற்றைக் கோவணத்துடன்,
காட்டுவாசியைப் போல் அவர் இருந்திருப்பார். இன்று அவர் அடைந்திருக்கும் நிலையைக் கண்டு அவரை நாம் மதித்துப் போற்றுகிறோம். ஆனால், அவர் வாழ்ந்த நாளில் அவருக்கு எந்தவித அங்கீகாரமோ, பாராட்டோ கிடைக்க வில்லை.

யாரும் அவருக்குக் கைத்தட்டவில்லை. எல்லாரும் அவரை, பெற்றோர்களை விட்டுச் சென்ற பைத்தியமாகவும், பொறுப்பில்லாமல் ஓடிப்போன ஒரு பையனாகவும்தான் பார்த்தார்கள். இதையெல்லாம் தாண்டி, எந்தவித சலனமும் இன்றி, எப்போதுமே ஒரே நோக்குடன், அசைவில்லாமல் அவர் இருந்தார். அதுதான் அகஸ்திய முனி.

ஒன்று, அவரது திசை உறுதியாயிற்று, இன்னொன்று என்ன நடந்தாலும் அவர் அருளின் நிழலில் நிலைத்திருந்தார். சலனமில்லாமல் அவர் செய்ய வேண்டியதை செய்தார்.

அதனால் நீங்கள் அகஸ்திய முனியாக வேண்டுமென்றால், இவற்றைப் பின்பற்றினால், ஏன் முடியாது? அவரைப் போல், நீங்களும் தமிழ்தானே! தமிழ் என்றால் தெம்புதானே!

தமிழ் என்றால் தெம்புதானே!