“மேடையேறி பரிசு வாங்க போனேன்; சத்குரு என் தோளத் தொட்டு ‘நீங்க நல்லா வெளையாடுனீங்க ஆத்தா!’னு சொல்லி பாராட்டுனாரு. நான் பூரிச்சு போயிட்டேன்!” என்று புழகாங்கிதமடையும் 75 வயது மருதாத்தா பாட்டி தேவராயபுரத்தின் டீம் கேப்டன்.

கல்யாணம், குழந்தை, குடும்ப பொறுப்பு என பலவித காரணங்கள் தடைகளாக இருப்பது மட்டுமல்லாமல், கிராமத்து பெண்கள் வெளியில் வருவது, அதுவும் பந்து விளையாடுவது என்பது பாவச் செயலாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையை மாற்றியுள்ளது ஈஷா கிராமோத்சவ திருவிழா!

பொதுவாக கிராமத்து பெண்கள் என்றாலே ஒருவித அச்சம் பயம் தயக்கம்... நாலு பேர் முன்னால் வந்து பேசுவதென்பது பார்க்கமுடியாத காட்சி! ஆனால், ஈஷா கிராமோத்சவ விளையாட்டு தேவராயபுரம், கொளப்பலூர், முருகன்புதூர் போன்ற பலநூறு கிராம பெண்களை உற்சாகம் மிகு உயிர்களாக, அச்சம் இல்லாத சாதனைப் பெண்களாக மாற்றியுள்ளது.

“நாங்கல்லாம் சமையக்கட்டுலயே தான் கிடக்கணும், நாங்க எல்லாம் வேஸ்ட்டுனு நெனச்சவங்க இப்போ சச்சின் கையால பரிசு வாங்கினத சொல்லி பெருமையா பேசுறாங்க!” தேவராயபுர அணியைச் சேர்ந்த அந்த பெண்மணி கொங்கு தமிழில் தனது எல்லையிலா சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார்.

பெண்களிடம் இத்தகையதொரு மாற்றத்திற்கு ஒரு பந்து காரணமாக இருக்கிறதென்றால் நீங்கள் ஆச்சரியமடைவீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஈஷா கிரமோத்சவத்சவம் குறித்து சத்குரு சொல்லும்போது...

“ஈஷா மேற்கொள்ளும் பலவித செயல்பாடுகளில் கிராமோத்சவம் தனது தனித்தன்மையால், அழகால் மிளிர்கிறது. விளையாட்டின் மூலம் கிராமங்களுக்கு புத்துணர்வு ஊட்டும் முயற்சியானது 21 ஆண்டுகளுக்கு முன் உருவெடுத்து, அதன் அதிகாரபூர்வ செயல்பாடு கடந்த 16 வருடங்களாக நடந்து வருகிறது.

ஜாதி, இனம், ஆண், பெண் என அனைத்து வேறுபாடுகளும் உடைவதை பார்க்கிறோம். பலர் மது, புகை பழக்கங்களில் இருந்து விடுபட்டிருக்கிறார்கள். அனைத்துக்கும் மேலாக தங்கள் வாழ்வில் விளையாட்டை அறியாத பெண்கள், பெரும் பார்வையாளர் கூட்டத்தின் முன்னே போட்டிகளில் பங்கேற்கிறார்கள். இது போலபல குழுக்களாக பெண்கள் விளையாடுவதைப் பார்க்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் வருகிறது. எத்தனை தடைகளோடு அவர்கள் அனைவரின் வாழ்க்கை இருந்தது என்பது எனக்குத் தெரியும்.”

பெண்கல்வி பற்றி இன்று பலர் பல தளங்களில் பேசிவருகிறார்கள் என்றாலும், ஒரு பெண் வீதியில் வந்து விளையாடுவது என்பது அவ்வளவு சாதாரணமாக நடப்பதில்லை! கல்யாணம், குழந்தை, குடும்ப பொறுப்பு என பலவித காரணங்கள் தடைகளாக இருப்பது மட்டுமல்லாமல், கிராமத்து பெண்கள் வெளியில் வருவது, அதுவும் பந்து விளையாடுவது என்பது பாவச் செயலாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையை மாற்றியுள்ளது ஈஷா கிராமோத்சவ திருவிழா!

விளையாட்டோடு ஈஷா யோகாவும் இணைந்து இவர்களின் வாழ்வில் புத்துணர்ச்சியையும் உயிர்ப்பையும் தந்துள்ளது. கொளப்பலூர் அணியைச் சேர்ந்தவர்கள் பகிர்ந்துகொண்டபோது, “நாங்க 2003ல் ஈஷா யோகா கிளாஸ் செய்தோம். 7 நாள் கிளாஸ் எங்க ஊருக்கு வந்தது. அதோட விளையாட்டும் சொல்லிக்குடுத்தாங்க. 2004ல் கோபி சாரதா பள்ளியில் கிராமோத்சவம் நடந்தது. நாங்கதான் முதல் பரிசு வாங்கினோம். அப்புறம் கோயம்புத்தூர் வ.ஊ.சி பூங்காவுல 2005ல் 900 கிராமங்கள் கலந்துகிட்ட கிராமோத்சவத்தில சத்குரு கையால கோப்பையை ஜெயிச்சோம். நடிகர் விஜய் வந்திருந்தாரு. அவர் எங்களை ரொம்ப பாராட்டினார்.

எங்க ஊர்மக்கள் எல்லாரும் ஜாதி-மத வேறுபாடுகள் மீறி இந்த விளையாட்டுக்கு வந்திருக்கோம். ஈஷா மூலமாதான் எங்களுக்கு இந்த கிராமப் புத்துணர்வு கிடைச்சது. யார் என்ன சொன்னாலும் எதுவும் கண்டுக்காம நாங்க விளையாண்டுகிட்டு இருப்போம்!” என்று கூறியவர்களின் கண்களின் உற்சாக ஒளி மின்னியது!

ஈஷா கிராமோத்சவத்தின் தனிச்சிறப்புகள்!

உடலளவிலான விளையாட்டுகளான கபடி, சிலம்பம், வழுக்குமரம் ஏறுதல், கிளித்தட்டு போன்ற பல்வேறு விளையாட்டுகள் பண்டைய தமிழர்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்ததாக இருந்து வந்தன. ஆனால், இன்றோ வீடியோ கேம்களில் இரத்தம் தெரிக்க எதிரிகளை சுட்டு வீழ்த்திக்கொண்டிருக்கின்றனர் இளைஞர்கள். ஈஷா கிராமோத்சவம் பாரம்பரிய விளையாட்டுகள் மூலம், இளைஞர்கள் இழந்துள்ள உற்சாகத்தையும் சக்தியையும் மீட்டெடுக்கச் செய்து புத்துணர்வு பெறச்செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 100 கிராமிய கலைகள் இருந்ததாக சொல்கிறார்கள். அதில் 50 கலைகள் அழிந்தே போய்விட்டன.

மீதமுள்ள 50 கலைகளில் கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேலுள்ள கலைகள் கடைசி தலைமுறை கலைஞர்கள் கைவசம் உள்ளது. அழிந்துவரும் இந்தக் கலைகளை மீட்டெடுக்கும் வகையில், ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழகமெங்கும் 10 இடங்களில் நடைபெற்ற ஈஷா கிராமோத்சவத்தின் மாவட்ட அளவிலான போட்டிகளில் வில்லுப்பாட்டு, நையாண்டி மேளம், பறையாட்டம், நெருப்புச் சிலம்பாட்டம், ஒயிலாட்டம், சக்கைக்குச்சி ஆட்டம், தோல்பாவைக்கூத்து, ஜமாப்பு, தெருக்கூத்து, தேவராட்டம், போன்ற பலவித நாட்டுப்புற கலைகள் அரங்கேறின.

கோவை கொடிசியாவில் நிறைவு விழா கொண்டாட்டம்!

சிறப்பு விருந்தினர்களாக கிரண்பேடி, மேதகு துணைநிலை ஆளுநர் புதுச்சேரி மற்றும் கர்னல் ராஜ்யவர்தன் ரதோர், மாண்புமிகு மத்திய தகவல் & ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஆகியோர் சத்குருவுடன் கலந்துகொள்ளும் ஈஷா கிராமோத்சவ திருவிழாவின் மாபெரும் நிறைவு விழா கொண்டாட்டம் பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகளுடனும் விளையாட்டுகளுடனும் கோவை கொடிசியா மைதானத்தில் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி நிகழவுள்ளது. அனைவரும் வருகை தந்து கிராமிய கலைகளையும் விளையாட்டுகளையும் மீட்டெடுப்போம்!

ஈஷா கிராமோத்சவம் பற்றி மேலும் அறிய: AnandaAlai.com/Gramotsavam