ஆதியோகி பிரதிஷ்டை தற்போது அமெரிக்கா ஈஷா மையத்தில் நடந்து கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின்போது பங்கேற்பாளர்களிடம் சத்குரு பேசியதிலிருந்து சில துளிகள்... இந்த வார சத்குரு ஸ்பாட்டில்...

இந்த இடத்தை நோக்கி நான் ஈர்க்கப்பட்டது அழகினால் அல்ல, இந்த இடத்தில் இருக்கும் வலியினால். சுமார் 15 வருடங்களுக்கு முன், அருகாமையில் இருக்கும் 'சென்ட்ரல் ஹில்' ஏரிக்கு வந்திருந்த பொழுது, ஒரு வலி மிகுந்த சூழ்நிலையை எதிர்கொள்ள நேர்ந்தது. மிகுந்த வேதனையில் இருந்த, உறைந்த, உடலற்ற ஒரு உயிரை எதிர்கொண்டேன். என் வாழ்வின் வலி நிறைந்த தருணங்களில் அதுவும் ஒன்று. அப்போது முதல், இந்த பகுதியில் பல இடங்கள் ஒரு ஆழமான வலியில் இருப்பதைக் கவனிக்க ஆரம்பித்தேன். அதை நாம் உணர முடிகிறதோ இல்லையோ, அதன் விளைவு நமது வாழ்க்கையில் வெளிப்பட்டே தீரும். ஒரு பாறை வேதனையில் ஆழ்ந்துவிட்டாலும், அதன் விளைவிலிருந்து மனிதர்கள் தப்பிக்க முடியாது. வெளிப்படையாக எந்தவிதக் காரணமும் தெரியாமலே, மனிதர்கள் சொல்லவொண்ணா துன்பத்தை அனுபவிப்பார்கள்.

பல நாட்களுக்குப் பிறகே இந்த இடத்தை 'கண்ணீரின் தடம்' என்று அழைப்பார்கள் என அறிந்தேன். அமெரிக்காவின் பூர்வ குடி மக்கள் இங்கே பெரும் துன்பத்துக்கும், வலிக்கும் ஆளானார்கள். மரங்களைப் போல இந்த மக்களும் பூமியின் ஒரு அங்கமாக இருந்தார்கள். அவர்களின் இந்த இயல்பினால், அவர்கள் அனுபவித்த வலியும் துயரமும், காற்றில் கலந்து போகாமல், மண்ணில் கலந்து இருக்கிறது. இதை நாம் பல இடங்களில் பார்த்தோம். ஏதோ ஒரு வகையில் தம்மை சுற்றி இருப்பவற்றோடு ஒரு இசைவில் இருப்பவர்கள், குறிப்பாக நிலத்தோடு இசைவில் இருப்பவர்கள், மகிழ்ச்சியோ, துயரமோ, தங்கள் தடத்தை நிலத்தில் விட்டு செல்வார்கள். இந்த மண்ணில் வாழ்ந்த அந்த மக்கள் வேறு ஒரு கிரகத்துக்கு செல்ல நினைக்கவில்லை. மண்ணில் இருந்து வந்த நாம், மண்ணோடு எப்படி ஒரு ஆழமான தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது என்பதில்தான் முழு கவனமாக இருந்தார்கள். அதுவே அவர்கள் அறிவாக, அதுவே அவர்கள் வாழ்க்கையாக இருந்தது. எனவே அவர்கள் துன்பப்பட்ட பொழுது தாங்கள் இருந்த இடத்தில் வலியை நிறைத்துச் சென்றார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த இடத்துக்கு முதல் இரண்டு வருடங்களில் வந்தவர்கள் இங்கே இருந்த வலியை எல்லா நேரமும் உணர முடிந்தது. பெருமளவு அதை சுத்தப்படுத்தி விட்டோம். இந்த பிரதிஷ்டை அதில் கடைசி நிலை. நமது இடத்தை மட்டும் இல்லாமல் இந்த பிராந்தியத்தையே அது சுத்தப்படுத்தும். வாரென் மாவட்டத்தின் மீது தனிப்பட்ட ஆர்வம் என்று இல்லை. வலி என்பது, சரியான முறையில் உபயோகிக்கத் தெரிந்தால் சிறந்த உரமாக இருக்கும். நல்ல உரம் இருக்கும் இடத்தில் நல்ல பூக்களும், கனிகளும் கிடைக்கும். வரும் வருடங்களில் நமக்கும், நம்மைக் கடந்தும் பல விஷயங்கள் இங்கே நிகழ இருக்கிறது.

உங்களுக்கு நடக்கும் அனைத்தையும் உங்களால் புரிந்து கொள்ள முடிகிறது என்று நீங்கள் நம்பினால், பெரிதாக உங்களுக்கு எதுவும் இன்னும் நடக்கவில்லையென்று அர்த்தம். உங்களால் புரிந்து கொள்ள முடியாத, உங்களால் கிரகித்துக் கொள்ள முடியாத, உங்களுக்குள்ளே வைத்துக் கொள்ள முடியாத ஒன்று உங்களுக்கு நடக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை உங்களுக்கு பெரிய அளவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இல்லையென்றால் அது ஒரு தேங்கிப் போன வாழ்க்கைதான். அதனால் உங்கள் தலைக்கு விஷயங்களை ஏற்றிக்கொள்ள வேண்டாம். மிகச் சிறிய இடம் அது.

அடுத்த மூன்று நாட்களில் இங்கே நடக்கப் போவதைப் போல இது வரை இந்தப் பிராந்தியத்தில் நடந்ததில்லை. வட அமெரிக்கா ஏராளமான மாந்த்ரீகம் பார்த்துள்ளது. ஆனால் மறைஞானம் என்பது அறிந்ததில்லை. மாந்த்ரீகத்தின் துணையால் மக்கள் பல தந்திர செயல்கள் செய்துள்ளனர். ஆனால் அடிப்படையான மறைஞானம் என்பது இல்லாது இருந்தது. இங்கே நடக்கப் போவது வரலாற்றின் பக்கங்களில் எழுதப் படாமல் போகலாம். ஆனால் அனுபவரீதியாக, சக்தி ரீதியாக இது நிச்சயம் ஒரு வரலாற்று நிகழ்வுதான். வரலாற்றில் போரும், அரசியல் நிகழ்வுகளும் தான் எழுதப்பட்டு இருக்கின்றது. சமூகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தாவிட்டால் ஒரு மனிதனின் ஞானோதயம் வரலாற்றில் எழுதப்பட்டதில்லை. எனவே நான் வரலாற்று நிகழ்வு என்று குறிப்பிட்டால், வரலாற்று புத்தகங்களில் எழுதப்படும் என்று நினைக்காதீர்கள். இங்கே நிகழ இருப்பது அதைக் கடந்த அதி அற்புதமானது. வரலாறு சமூகத்தில் இருக்கும் குப்பைகளை மட்டும் எடுத்து சொல்கிறது. அழகான விஷயங்களை சொல்வதில்லை.

எனவே இது உங்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த சாத்தியம். வெறும் பார்வையாளர்களாக இல்லாது, இதில் நீங்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். இங்கே இணைந்து என்ன செய்ய முடியும் என்பதை பார்ப்போம். வானிலை ஏதுவாக, மற்ற விஷயங்களும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன். சக்தி நிலையில் சிறப்பாக இருக்கிறோம், ஆனால் உடல் உதவி என்று பார்த்தால், பிரதிஷ்டைக்கு இந்தியாவில் கிடைப்பது போல இங்கு கிடைக்கவில்லை என்றாலும், அவர்களால் முடிந்ததை சிறப்பாகவே செய்கிறார்கள். நீங்கள் அனைவரும் தீவிரமாக, முழுமையாக இருந்தால் சூழ்நிலை தானாகவே உருவாகி விடும். பிறகு நாம் ஏதோ ஒன்று செய்ய முடியும். அடுத்த மூன்று நாட்கள் என்னுடன் இருந்து ஆதி யோகியின் ருசியை உணருங்கள்

புதிய கோவிலில் கடைசி கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. உலகின் பல பாகங்களில் இருந்து 1500 பேர் வந்திருக்கிறார்கள். அடுத்த மூன்று நாட்கள் என்னுடன் இருந்து ஆதியோகியை ருசி பாருங்கள்.

அன்பும் ஆசிகளும்,
சத்குரு

ஆதியோகி பிரதிஷ்டையின் நேரடி வர்ணனை: http://tamilblog.ishafoundation.org/adiyogi-prathishtai-americavilirunthu-neradi-varnanai/