"அடி உதவுகிறாற்போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள்" - இந்த பழமொழிக்கான விளக்கத்தை சத்குருவிடம் கேட்டபோது...

சத்குரு:

யார் சொன்னது?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மிகக் குறுகியகால சிந்தனை கொண்டு செயல்படுபவர்கள் சொல்லி வைத்த நாகரிகமற்ற வார்த்தைகள் இவை.

கையாலாகாதவர்களிடம்தான் உங்கள் சாட்டையை ஓங்கி, வேலை வாங்க முடியும். உங்களைவிட வலுவானவர்களிடம் உங்கள் அதிகாரம் செல்லுபடியாகாது.

அன்பு உதவுகிறாற்போல், அடி உதை ஒருபோதும் உதவாது என்பதுதான் சரி.

பலவீனமானவர்கள்கூட உங்கள் கை ஓங்கியிருக்கும் வரைதான், வேறு வழியின்றிப் பொறுத்துப் போவார்கள்.

ஒன்றை மறக்காதீர்கள். உங்கள் முதல் சறுக்கலுக்காக அவர்கள் காத்திருப்பார்கள். அப்போது, நீங்கள் கொடுத்ததைவிட பலமான அடியை உங்களுக்குக் கொடுப்பார்கள். சாட்டை பிடித்த உங்கள் கையையே முறித்துப் போடுவார்கள்.

நீங்கள் குடும்பம் நடத்தினாலும் சரி, தொழில் நடத்தினாலும் சரி, உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள்பால் அன்பு கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான், அவர்களிடமிருந்து மிகச் சிறப்பானப் பங்களிப்பை நீங்கள் பெற முடியும்.

அது எப்படி சாத்தியமாகும்? முதலில் எந்த எதிர்பார்ப்புமின்றி, அவர்கள் மீது நீங்கள் நிபந்தனையற்ற அன்பைப் பொழிந்திருக்க வேண்டும். அவர்கள் நம்பிக்கையையும், இதயத்தையும் பரிசாகப் பெற்றிருக்க வேண்டும்.

உங்கள் அன்பால் அவர்களை ஈர்த்திருந்தீர்களேயானால், நீங்கள் அங்கே இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்கள் வேலை தொடர்ந்து நடக்கும்.

அன்பு உதவுகிறாற்போல், அடி உதை ஒருபோதும் உதவாது என்பதுதான் சரி.