தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதை! பகுதி 2

தியானலிங்க பரிக்கிரமத்தில் சதாசிவ பிரம்மேந்திரர் எனும் யோகியின் வாழ்க்கை நிகழ்வு சிற்பக்காட்சியாய் நிறுவப்பட்டுள்ளதைப் பார்க்கலாம்! ஒரு வீரன் அவரது வலக்கையை வெட்டி வீழ்த்துவதுபோல் உள்ள அந்த காட்சிக்குப் பின்னால் உள்ள உன்னத வரலாற்றினை அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!

சதாசிவ பிரம்மேந்திரர் - உடல் கடந்த யோகி (Nerur Sadashiva Brahmendra in Tamil)

நாடிகள் இனித்திட சக்கரங்கள் சக்தியில் வெடித்திட
ஆடையும் மறந்திட உடலைக் கிழித்திடும் உலோகம் தோற்றிட
ஆணென்ன? பெண்ணென்ன? எல்லாம் தனக்குள்ளே கொண்டபின்
இனி உடலென்ன? ஆடையென்ன?

கையறுந்து விழுந்தாலும், அவர் நடந்திடும் தோரணை கூட மாறவில்லை. அவர் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்... அங்கே எந்த அதிர்ச்சியும் இல்லை. எந்த சலனமும் இல்லை. அங்கே எதுவும் நிகழாததைப் போல நடந்து சென்றார்.

அந்த யோகி எதையும் கவனிக்காமல் நடந்து சென்று கொண்டிருந்தார். வேகமாக பறந்து வந்த அந்த கத்தி அவரது வலது கையை துண்டாகக் கிழித்தது. வலது கை தனியாகக் கீழே சென்று விழுந்தது. அறுபட்ட இடத்தில் இரத்தம் பீறிட்டு எழுந்தது. ஆனால், அவர் நடப்பதை நிறுத்தவில்லை. நடந்து செல்லும் தொனியும் மாறவில்லை. எதுவும் நடக்காதது போல அவர் தொடர்ந்து நடந்தார்.

தன் கை அறுபட்டு கீழே விழுந்தது கூட தெரியாமல் நடந்து போகும் இவர் சாதாரண மனிதராக இருக்க முடியாது. யார் இவர்? அவர் பின்னாலேயே ஓடினான். இவர்தான் சதாசிவ பிரம்மேந்திரர். நிர்காய யோகி!

உடல் கடந்த நிலையின் அறிவியல்

 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உடலில் உள்ள 114 சக்கரங்களும் முழு வீச்சில் தூண்டப்பட்ட நிலையில் அந்த யோகி பேரானந்த நிலையில் தன் உடல் பற்றியும் தன் உடலில் ஆடை பற்றியும் கவனமில்லாது இருந்தார். சக்கரம் என்பது நம் உடலில் நாடிகள் சந்திக்கும் இணைப்பு மையங்களைக் குறிக்கிறது. இவை முக்கோணவடிவில் இருந்தாலும் அவற்றின் சக்தி ஓட்டம் வட்ட வடிவில் இருப்பதால் இவை சக்கரங்கள் என அழைக்கப்படுகின்றன. இது ஒரு பரிமாணத்திலிருந்து இன்னொரு பரிமாணத்தை நோக்கி செல்வதைக் குறிக்கிறது.

72,000 நாடிகள் பல இடங்களில் சங்கமித்து 114 சக்கரங்களை உருவாக்குகிறது. 112 சக்கரங்கள் நம் உடலுக்குள்ளும் 2 சக்கரங்கள் நம் உடலுக்கு வெளியேயும் உள்ளது. இந்த உலக வாழ்க்கையை நடத்திட 114 சக்கரங்களும் சக்தியூட்டப்படத் தேவையில்லை. இதில் ஏழு சக்கரங்கள் மட்டுமே பெரும்பாலான நாடிகளை இணைக்கிறது. பெரும்பான்மையான மனிதர்களுக்கு மூன்று சக்கரங்கள் மட்டுமே சக்தியுடன் இருக்கும்.

72,000 நாடிகளும் முழுவீச்சில் சக்தியூட்டப்பட்ட நிலையில் ஒருவர் இங்கே அமர்ந்தால் அவரது அனுபவத்தில் அவருக்கு உடல் என்பது இருக்காது. கைகளால் தொடும்போது மட்டுமே உடல் தனது அனுபவத்தில் இருந்திடும். உடல் இல்லாத அந்த நிலை, ஒருவரால் கற்பனையிலும் புரிந்து கொள்ள முடியாத நிலை! உடல் என்ற கட்டுப்பாட்டில் இருந்து முழுமையான சுதந்திரம் அடைந்த நிலை அது.

தொடர்ந்து ஆன்மீக சாதனையில் ஈடுபடும் ஒருவருக்கு உடல் கட்டுப்பாடுகளால் பல முறை இடைவேளை தேவைப்படுகிறது. உடல் இல்லாது இருந்தால் இரவு பகல் தாண்டி; உணவு உறக்கம் தாண்டி இந்த உடல் சாதனையில் ஈடுபட முடியும். அந்த உடலை எப்படி வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம். இல்லையெனில், இந்த உடல் உங்கள் மீது ஆளுமை கொள்ளும். உடலில் ஏதோ ஒரு பகுதியில் அசௌகரியம் இருந்திடும்போது மற்றவை அனைத்தும் காற்றில் பறந்துவிடுகிறது. உடல் அப்போது நம்மை முழுமையாக ஆட்சி செய்கிறது. உடலுக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது.

ஆடையின்றி சென்ற சதாசிவ பிரம்மேந்திரர்

சதாசிவ பிரம்மேந்திரர், Nerur Sadashiva Brahmendra in Tamil

சதாசிவ பிரம்மேந்திரர் உடல் தாண்டிய இந்த நிலையில் உடலில் ஆடை பற்றிய கவனம் இல்லாது காவிரி நதிக்கரையில் உள்ள அரசனின் அந்தப்புறம் வழியே நடந்து சென்றார். மனைவியுடன் இருந்த அரசர் இப்படி நிர்வாணமாக ஒரு மனிதர் அதுவும் அரசகுலத்து பெண்கள் வசிக்கும் இந்த நந்தவனத்தில் நடந்து செல்வதைக் கண்டு பெரும்கோபம் கொண்டார். காவலாளிகளை அழைத்து “அவனைப் பிடித்து வாருங்கள்!” என கட்டளையிட்டார்.

கத்தியை வீசியவன் படபடத்துப் போனான்!

எல்லையில்லா நிலையை அடைந்த இவருக்கு மனிதன் வகுத்த எல்லைகள் புரியவில்லை. பெண்கள் முன்பு இவ்வாறு நடப்பதைக் கண்ட அரசர் கோபம் கொண்டார். எனினும், ஆண் பெண் என்ற எல்லையைத் தாண்டிய இவருக்கு பெண்கள் இருக்கும் இடம் பற்றி எந்த கவனமும் இல்லை. அரசர் வீரர்களை அழைத்து “யார் அந்த முட்டாள் என கண்டறிந்து வாருங்கள்!” என்றார்.

வீரர்கள் அவர் பின்னால் ஓடினர். அவர்கள் அவரை அழைத்தனர். அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. கோபமடைந்த வீரர்கள் கத்தியை வேகமாக வீசினர். வலது கை தனியாக அறுந்து கீழே விழுந்தது. கையறுந்து விழுந்தாலும், அவர் நடந்திடும் தோரணை கூட மாறவில்லை. அவர் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்... அங்கே எந்த அதிர்ச்சியும் இல்லை. எந்த சலனமும் இல்லை. அங்கே எதுவும் நிகழாததைப் போல நடந்து சென்றார்.

கத்தியை வீசியவர்கள் வெலவெலத்துப் போயினர்! இவர் சாதாரண மனிதர் இல்லை என்பதை உணர்ந்தனர். அரசரும் மற்ற வீரர்களும் அவரது கால்களில் வந்து விழுந்தனர். அவரை மீண்டும் அந்த நந்தவனத்திற்கு அழைத்து வந்தனர். ஆடையில்லாத அந்த உடலின் ஒவ்வொரு அணுவும் பேரானந்தத்தில் திளைத்தது. அவர் தன் வாழ்வின் எஞ்சியுள்ள நாட்களை அங்கேயே கழித்து தன் உடலை அங்கேயே நீத்தார்.

நெரூரில் உள்ள சதாசிவ பிரம்மேந்திரர் சமாதி

நெரூரில் உள்ள சதாசிவ பிரம்மேந்திரர் சமாதி, Sadasiva brahmendra samadhi in Nerur

தமிழகத்தில் நெரூர் என்னும் இடத்தில் காணப்படும் இவரது சமாதியில் அவரது உடலில் அதிர்வுகளிலிருந்து வெளிவரும் பிரம்மாண்டமான சக்தியை இன்றும் உணரலாம். அந்த சமாதியின் அதிர்வுகள் இன்றும் அங்கு செல்லும் ஒருவரை ஊடுறுவி மாபெரும் சக்தியில் மூழ்கடிக்கிறது. உடல் நம் மீது ஆளுமை கொள்ளும்போது நாம் வெறும் உடலாக மட்டுமே இந்த மண்ணில் வாழ முடியும். உடல் மீது நாம் முழுமையாக ஆளுமை கொள்ளும்போது அங்கே கட்டுப்பாடுகள் தளர்கிறது. சுதந்திரம் பிறக்கிறது.

நெரூர் சதாசிவ பிரமேந்திரர் from Wikimedia