ஆசிரமத்தில் நடந்த மெகா வகுப்பு

கடந்த வாரம் ஆசிரமத்தில் நடந்த மெகா வகுப்பு அனைவரும் அறிந்ததே! அதன் அனுபவங்களை பலர் பலவிதமாக பகிர்ந்திருந்தாலும், அதை நடத்தியவரின் அனுபவம் என்ன என்பதை இன்னும் நாம் கேட்கவில்லை. ஆம்! சத்குருவே, இந்த வகுப்பின் அனுபவத்தை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், தொடர்ந்து படியுங்கள்…

இந்த வார இறுதி, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஏனென்றால், ஆசிரம வளாகத்தில் முதல் மெகா வகுப்பு நடந்தது. பொதுவாக, ஆசிரமத்தில் நடக்கும் வகுப்புகள் அளவில் பெரியதாகத்தான் இருக்கும், ஆனால் அந்த வகுப்புகள் எல்லாம், ஏற்கனவே ஈஷா யோகாவின் முதல்நிலை வகுப்பில் கலந்துகொண்டவர்களுக்காக நடத்தப்படுபவை என்பதால்,அதில் ஒருவித ஈடுபாடும் ஒழுங்குமுறையும் இயல்பாகவே இருக்கும். ஆனால் முதன்முறையாக 3600க்கு மேற்பட்டவர்கள் முதல்நிலை ஈஷா வகுப்பிற்கு இங்கே வந்திருக்கிறார்கள். ஆசிரமவாசிகளும், இந்த வகுப்பிற்காக வந்திருந்த தன்னார்வத் தொண்டர்கள் 900 பேரும், உருவாக்கிய சூழ்நிலையால், பங்கேற்பாளர்கள் ஒருவித ஒழுக்கத்தையும், ஈடுபாட்டையும் கடைப்பிடித்தனர். இவ்வளவு பேர் கூடும் ஒரு நிகழ்வில் இத்தனை ஒழுக்கமும் ஈடுபாடும் சற்று அரிதான விஷயம்தான். இப்படி ஓர் அர்ப்பணிப்பை, ஈஷா யோகா மையம் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதே என் விருப்பம். அதனால், இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி, சிறப்பு நிகழ்ச்சியாக மலர்ந்து கொண்டே இருக்கும்.

இது போன்ற பெரிய நிகழ்ச்சிகள் மிகுந்த முக்கியத்துவம் மிகுந்தவை. ஒரே ஒரு வார இறுதியில், இந்த நிகழ்ச்சி மக்கள் மேல் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது வெறும் வகுப்பல்ல, அவர்கள் வாழ்வில் மறக்க இயலாத ஒரு நிகழ்வு. மக்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த, போதிய எண்ணிக்கையிலான தியான அன்பர்களும், தன்னார்வத் தொண்டர்களும் நமக்குத் தேவை. அந்த எண்ணிக்கையை அடுத்த மூன்று முதல் ஐந்து வருடங்களில் தமிழ்நாட்டில் நாம் எட்டிவிட முடியும். இயல்பான ஒரு ஆன்மீக இயக்கமாக மாறுவதற்குத் தேவையான எண்ணிக்கையை இன்னும் 2 வருடத்தில் எட்டி விடுவோம். இதன் பகுதியாக, பல்வேறு விதமான பயிற்சி வகுப்புகளை அறிமுகப்படுத்துவோம். இதன் மூலம், ஒருவர் இன்னொருவருக்கு, சிறிய அளவிலான ஆன்மீக சாதனாவை பரிமாற முடியும். இன்னொரு மனிதருக்கு வெகு சுலபமான ஒரு செயல்முறையையாவது எடுத்துச் செல்லும் தகுதி உடையவராக உங்களில் பலர் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

இன்னெர் இன்ஜினியரிங் வகுப்பில் உள்ள சில நுணுக்கங்கள் காரணமாக, அந்த வகுப்பை நடத்துவதற்கு குறிப்பிட்ட வகையிலான பயிற்சி தரத் தேவையிருக்கிறது. அந்த பயிற்சியை பிறருக்கு பரிமாறுவதும் சற்று சிரமமாகத்தான் இருக்கிறது. நாம் சிறப்பாய் செயல்பட்டிருக்கிறோம். ஆனால் அதை வழங்கும் செயல்முறையில் பலபேரை உடைந்து போகச் செய்திருக்கிறோம். அவர்கள் உடைந்து போய்விட்டா£கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், அவர்களில் ஆசிரியர் ஆகவேண்டும் என்ற கனவுடன் வந்த 60, 65 சதவிகிதத்தினரை, நாம் ஆசிரியராக அனுமதிக்கவில்லை. அவர்களை ஒரு வருட பயிற்சிக்கு உட்படுத்தியும், பல்வேறு காரணங்களால் நாம் ஆசிரியர்களாக ஆகச் செய்யவில்லை.

பிறர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளவருக்கு, பிறர் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. மக்களை திறந்த நிலைக்கு கொண்டுவராமல், அவர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த முடியாது. மக்கள் அப்படி திறந்த நிலைக்கு மாறும்போது, யாரிடம் அவர்கள் திறந்த நிலையில் இருக்கிறார்களோ, அந்த மனிதரிடம் வெளிசூழ்நிலையால் பாதிப்படையாத நேர்மை குணம் இருக்க வேண்டும். இந்த நேர்மை, உள்நிலையில் உறுதியாகவும், அவருள் வைரம் பாய்ந்ததைப் போன்று ஸ்திரமாகவும் இருக்க வேண்டும். இதனால்தான் ஆசிரியர்களிடம் நினைத்துக்கூட பார்க்க இயலாத அளவுக்கு கடுமையாக இருந்துள்ளோம். எந்த ஒரு இயக்கமும் அதன் ஆசிரியர்களை இப்படி கையாண்டிருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் இது அற்புதமான பலன்களை அளித்துள்ளது. நம் ஆசிரியர்கள் எங்கு சென்றாலும், தன் உறுதியாலும், தன் ஒழுக்கத்தினாலும் தனித்து நிற்கிறார்கள்.

மனித விழிப்புணர்வை உயர்த்தும் நோக்கத்தில், அவர்களை முழுமையாக கரைத்துவிடும் நிகழ்ச்சிகள் நமக்கு தேவை. ஒரு கொள்கையாகவோ, கருத்தாய்வாகவோ, வறட்டு போதனையாகவோ அல்லாமல், அவர்களை அப்படியே வெடித்து போக வைக்கும் நிகழ்ச்சி தான் நமக்குத் தேவை. இது நிச்சயம் தேவை. இது தேவை என்பதால் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளுக்கான திட்டங்களை இனி தீட்டுவோம். ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் சிறிய அளவிலாவது ஏதோ ஒன்றை பிறருக்கு பரிமாற வேண்டுமென்பதும் எனது விருப்பம். இந்த நோக்கத்தில் மூன்று வார ஆசிரியர் பயிற்சியை வருங்காலத்தில் நடத்தவுள்ளோம். கற்றுக் கொடுக்கப்படும் ஆன்மீக செயல்முறைகளை சொந்த நோக்கத்திற்காக பயன்படுத்த மாட்டேன் என்ற உறுதி மட்டும் இருந்தால் போதும், நம்மால் அனைவரையும் ஆசிரியராக உருவாக்கி விட முடியும். ஏனென்றால், இந்த வகுப்பை அந்த அளவு எளிமையானதாக மாற்றி வருகிறோம்.

ஈஷா யோகா என்ற கருவிக்கு, அந்த நிகழ்ச்சியில் வந்து உட்காருபவர் எவ்வளவு புத்திசாலியாக இருக்கிறார் என்பது ஒரு பொருட்டல்ல. அதிக புத்திசாலியாக இருந்தால், அதன் அருமையை இன்னும் அதிகமாக பாராட்டுவார். இதில் ஒரு சிறு ஓட்டையைக் கூட உங்களால் கண்டுபிடிக்க இயலாது. இந்த வகுப்பு, அந்த அளவிற்கு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. என்றாவது ஒரு நாள், ஒரு ஞானமடைந்த மனிதர் ஈஷா யோகா வகுப்பில் கலந்து கொண்டால், அவரால் இந்த ஓட்டையை கண்டுகொள்ள முடியும். ஆனால் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ள விதத்தை பாராட்டி, அதன் ஓட்டையை வெளிப்படுத்த மாட்டார் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இதை வெளிப்படுத்தும் அளவிற்கு அவர் மூர்க்கமாகவும் இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். இந்தவொரு நம்பிக்கையில், ஒவ்வொருவரும் ஆசிரியராக முடியும்.

அன்பும் அருளும்,

Sadhguruஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert