Question: சத்குரு, உடல், மனம் இரண்டும் சந்தோஷமாக இருப்பதற்கும், மேம்பட்ட நிலையை அடைவதற்கும் ஈஷாவில் பல யோகப்பயிற்சிகள் இருக்கும்போது தன்னார்வ தொண்டு என்பது எதற்காக?

சத்குரு:

செயல் இல்லாமல் உங்களால் இருக்க முடியாது. ஒன்றுமே செய்யாமல் இருக்க முடியுமா? வெறுமனே உட்கார்ந்திருந்தால் கூட மனதில் ஏதோ ஒன்று ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. செயலைத்தான் கர்மா என்கிறோம். செயல் உடலளவில் செய்யும்போது அது ஒருவித கர்மா. மனதளவில் செய்யும்போது அது மற்றொரு விதமான கர்மா. அதே போல் உணர்ச்சிநிலையிலோ, சக்தி நிலையிலோ செயல் செய்யும்போது அவையும் கர்மா தான். ஆக நான்கு நிலைகளில் கர்மா செய்ய முடியும். உங்களில் யாராவது கர்மாவே செய்யாமல் இருக்க முடியுமா? இப்போது நீங்கள் இருக்கும் நிலையில் செயல் செய்யாமல் இருக்க முடியாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எனவே உடல், மனம், மற்றும் உணர்ச்சி ஆகிய நிலைகளில் செய்யும் செயல்க¬ள் நம் விடுதலைக்கு ஒரு வழியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால், 'நான்' என்ற தன்மையை தாண்டி செயல் செய்ய வேண்டும். அப்படி செயல்படும்போது சிக்கல் வராது.

எப்படியும் செயல் செய்கிறீர்கள். செயல் என்பது நன்மையாகவும் இருக்கும், சிக்கல் தருவதாகவும் இருக்கும். ஆனால் மக்கள் எப்போதும் செயல் என்றாலே சிக்கிப் போவதாகத்தான் நினைக்கிறார்கள். அதனால்தான் சிக்கல் வரும்போது இது என் கர்மா என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் கர்மா என்பது நன்மையாகவும் இருக்கமுடியும். எப்போதும் சிக்கலாக இருக்கத் தேவையில்லை. அதனால்தான் நாம் கர்மா, கிரியா என்று இரண்டு பிரிவுகள் உண்டாக்கினோம்.

கர்மா என்றால் வெளிநோக்கிச் செயல்படுவது. அதில் சிக்கிக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. கிரியா என்றால் உள்நோக்கி செயல்படுவது. இதில் சிக்கிக் கொள்வதற்கு வாய்ப்பு இல்லை. இது விடுதலைக்கு ஒரு அடிப்படையாக இருக்கிறது. எப்படி இருந்தாலும் வெளி நோக்கிய செயல் செய்யாமல் இருக்கமுடியாது. எப்படியும் செய்வோம். கிரியாவை நாம் எவ்வளவு நேரத்திற்கு செய்ய முடியும்? எது அதிகம்? கர்மாவா கிரியாவா? கர்மாதானே அதிகம். எனவே அந்த கர்மாவை நம் விடுதலைக்கான ஒரு வழியாக மாற்றிக் கொள்ள வேண்டும். கிரியா காலையில் இருபது நிமிடம், மாலையில் இருபது நிமிடம் செய்தோம். மீதி நேரத்தில் சிக்கல் நடந்தே இருக்கின்றது.

எனவே உடல், மனம், மற்றும் உணர்ச்சி ஆகிய நிலைகளில் செய்யும் செயல்கள் நம் விடுதலைக்கு ஒரு வழியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால், 'நான்' என்ற தன்மையை தாண்டி செயல் செய்ய வேண்டும். அப்படி செயல்படும்போது சிக்கல் வராது.

எனவே தன்னார்வத் தொண்டு என்பது வெறுமனே செயல் செய்வதற்காக அல்ல. நான் என்ற தன்மையைத் தாண்டுவதற்காகத்தான் தன்னார்வத் தொண்டு செய்வது. ஈஷா மையத்திலேயோ அல்லது உள்ளூர் மையத்திலேயோ மட்டும் தன்னார்வத் தொண்டு செய்வதில் பலனில்லை. வீட்டிற்குச் சென்றாலும் நீங்கள் தன்னார்வத் தொண்டர்தான். எங்கு சென்றாலும் அங்கே நீங்கள் தன்னார்வத் தொண்டர்தான். எனவே தன்னார்வத் தொண்டு என்பது நான் என்னும் தன்மையை தாண்டுவதற்காகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தன்னார்வத் தொண்டு என்பது ஆர்வத்தின் காரணமாக ஈடுபடுவது. கட்டுப்பாடு காரணமாக ஈடுபடுவது அல்ல. எதில் நீங்கள் ஆர்வத்துடன் ஈடுபடுகிறீர்களோ அது உங்களுக்கு சொர்க்கமாக இருக்கும். எதில் நீங்கள் ஆர்வம் இல்லாமல் ஈடுபடுகிறீர்களோ அது உங்களுக்கு நரகமாக இருக்கும். வேலைக்குச் செல்வது, திருமணம் செய்வது போன்றவை கூட நீங்கள் ஆர்வத்துடன் ஈடுபடவில்லை என்றால் அது உங்களுக்கு நரகத்தைத்தானே கொடுக்கும்? எனவே நன்மை என்பது செய்யும் செயலில் இல்லை; ஆர்வத்தில்தான் இருக்கிறது. விருப்பத்தோடு செயல் செய்யும்போது அது நன்மை. விருப்பமில்லாமல் செய்யும்போது அது கெடுதல்.

விருப்பத்தோடு செய்வதும் விருப்பமில்லாமல் செய்வதும் நம் கையில்தானே இருக்கிறது? இந்த செயல் செய்யலாம் அந்த செயல் செய்யவேண்டாம் என்பது உங்கள் கையில் இல்லை. சூழ்நிலைக்குத் தேவையான எந்த செயலையும் நீங்கள் செய்யத் தேவையிருக்கிறது. எப்படியும் அந்த செயல்களை நீங்கள் செய்யத்தான் வேண்டும். அப்படியிருக்கும்போது அந்தச் செயல்களை ஆர்வத்தோடு செய்யலாமா அல்லது ஆர்வமில்லாமல் செய்யலாமா? விருப்பத்தோடு செய்யும்போது வாழ்க்கை சொர்க்கம். விருப்பம் இல்லாமல் செய்யும்போது வாழ்க்கை நரகம்.

இப்போது இந்த சிறிய கைக்குட்டை கீழே விழுந்து விட்டது. அந்த பொருள் எனக்குத் தேவைதான். ஆனாலும் குனிந்து எடுப்பதற்கு விருப்பமில்லை. ஐயோ, எடுக்க வேண்டுமே என்று ஆர்வமில்லாமல் செயல்படும்போது அந்த செயல் எவ்வளவு பாதிப்பைத் தரும் தெரியுமா? எப்படியும் நாம் இந்தப் பொருளை எடுக்கத்தான் வேண்டும், எடுக்கத்தான் போகிறோம். எனவே அதையே சிறிது விருப்பத்துடன் செய்து கொள்ளலாமே! விருப்பமாக எடுக்கும்போது அந்த சிறிய செயல் கூட ஆனந்தத்தைத் தருகிறது. இவ்வளவுதான் வாழ்க்கை.

ஒவ்வொரு கணமும் நமது வாழ்க்கையில் எதைச் செய்தாலும் விருப்பத்துடன் செய்யும்போது அது சொர்க்கம். விருப்பம் இல்லாமல் செய்யும்போது நரகம். யோகா மையத்திற்கோ அல்லது உள்ளூர் மையத்திற்கோ வந்தால் உங்களுக்கு எந்தெந்த வேலை பிடிக்காதோ அதெல்லாம் கொடுத்து விடுவோம். அதே போல யார் யாரெல்லாம் உங்களுக்கு பிடிக்காதோ அவர்களுடன் விருப்பமாக நீங்களே செயல் செய்யுங்கள். விடுதலை என்பது மிகவும் சுலபமாக வந்துவிடும்.