சத்குருவுடன் சேகர் கபூர் - பகுதி 19

போதனைகள், இன்டர்நெட், கிராமப் புத்துணர்வு, ஆன்மீக ஷாப்பிங் எனப் பல்வேறு தலைப்புகளில் இணையதளம் வழியாக சேகர் கபூர் சத்குருவுடன் நிகழ்த்திய உரையாடலின் தொகுப்பு இந்த வாரம்!

Question: பல நாடுகள் தங்களுக்குள் போரிட்டுக் கொள்கின்றன. உங்கள் போதனைகள் மூலமாக அந்த நாடுகளின் தலைவர்களை நீங்கள் மாற்ற முடியுமா?

சத்குரு:

நாம் பல லட்சக்கணக்கான மக்களுடன் வேலை செய்துள்ளோம். பல பெரிய தலைவர்களுடன், குறிப்பாக வணிக நிறுவனங்களின் தலைவர்களுடன் பணி புரிந்து வருகிறோம். 100 வருடங்களுக்கு முன்னர் இராணுவ தலைமைதான் மிகுந்த பலத்துடன் இருந்தது. ஆனால் கடந்த 100 வருடங்களில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், அரசியல் தலைவர்கள் இவர்கள்தான் மிகுந்த சக்தியுடன் இருக்கின்றனர். ஆனால் இதுவும் மாறப் போகிறது. இந்த மாற்றம் ஏற்கனவே நிகழத் தொடங்கிவிட்டது. அடுத்த 10, 15 வருடங்களில் இது மிக வேகமாக மாறப்போகிறது. வருங்காலத்தில் பொருளாதாரத் தலைவர்கள் தான் மிக முக்கியமானவர்களாக திகழப் போகிறார்கள். எனவே நான் தனிப்பட்ட முறையில் பொருளாதாரத் தலைவர்களுடன் வேலை செய்யத் தொடங்கி விட்டேன். ஈஷா வகுப்புகள், சில நிலைகளில் அவர்களுடைய முடிவெடுக்கும் திறனிலும் தொழில் நடத்தும் முறையிலும் கண்டிப்பாக மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

Question: பொழுதுபோக்கு சாதனங்களான திரைப்படங்கள் மற்றும் இணையதளம் (இன்டர்நெட்) மனிதர்களுடைய எண்ண ஓட்டத்திலும் உணர்வுகளிலும் தாக்கம் ஏற்படுத்த முடியுமா? பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இதை ஒரு சாதனமாக பயன்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா?

சத்குரு:

நிச்சயமாக முடியும். சமீபத்தில் நாம் 7 நாள் ஈஷா வகுப்பை இணையதளத்தில் துவக்கியுள்ளோம். அது 10 மணி நேர வகுப்பு. அது மக்கள் மீது மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை நாம் பெரிய அளவில் பிரபலப்படுத்த உள்ளோம். வரலாற்றிலேயே முதல் முறையாக நீங்கள் இன்று இந்த உலகம் முழுவதுடனும் பேசமுடியும். ஒரு கௌதம புத்தர் போதனைக்காக கால்நடையாக ஊர், ஊராக பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் இன்றோ இங்கு அமர்ந்து கொண்டு நாம் உலகம் முழுவதுடனும் பேசமுடியும். இது சாதாரண விஷயமல்ல; மிகவும் மகத்தான செயல். எனவே மனித விழிப்புணர்வை மேம்படுத்த இதனைப் பயன்படுத்த வேண்டுமா என்றால், கண்டிப்பாக நாம் பயன்படுத்தியே ஆகவேண்டும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

Question: இன்று பெரும்பாலான விவசாயக் குடும்பங்கள் நகரங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. வறுமையை தவிர்ப்பதற்காக அல்லது குழந்தைகளின் கல்விக்காக நகர்கின்றனர். இது பொருளாதார ரீதியாகவும் இயற்கை ரீதியாகவும் நமது சமுதாயத்தில் ஒரு சமநிலையற்ற தன்மையை உருவாக்கி வருகிறது. இதை எப்படி நாம் ஒரு சமநிலைக்கு எடுத்து வருவது?

சத்குரு:

கிராமப்புற வாழ்க்கையை மதிப்புடையதாக ஆக்க வேண்டும். அங்கு வாழ்வோருக்கு தேவையான சுகாதாரம், ஆரோக்கியமான சூழ்நிலை, எதிர்காலக் குழந்தைகளுக்கான கல்வி வசதிகளையும் ஏற்படுத்தி, கிராம வாழ்க்கையை சந்தோஷமானதாகவும், உயிரோட்டமானதாகவும் உருவாக்க வேண்டும். அவர்கள் உயிரோட்டத்தைத் தேடி நகரத்திற்குச் செல்லக்கூடாது. கிராமத்திலேயே ஏதோ ஒன்று உயிரோட்டமாக நிகழ்ந்து கொண்டிருக்க வேண்டும். இதன் ஒரு பகுதியாக கிராமப்புற பாடல்களையும், நடனத்தையும், விளையாட்டுக்களையும் கிராமங்களுக்கு மீண்டும் எடுத்துவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நம் நாட்டில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தற்சமயம் நாம் மூன்று முதல் நான்காயிரம் கிராமங்களைத் தொட்டுள்ளோம். இருந்தும் இது சமுத்திரத்தில் உள்ள ஒரு துளி நீரைப் போன்றது. இதை நிகழச் செய்ய ஏராளமான பொருளாதார வசதி தேவை. இதை நாம் பெரிய அளவில் துரிதப்படுத்த வேண்டும். அதற்காகவே நாம் வேலை செய்து கொண்டிருக்கிறோம்.

Question: சத்குரு, பங்கேற்பாளர்களிடமிருந்து உங்களுக்கு இன்னொரு கேள்வி வந்திருக்கிறது. எல்லோரும் ஆன்மீக ஷாப்பிங் (குரு அல்லது ஆன்மீகக் குழுக்களை மாற்றிக் கொண்டிருப்பது) செல்லாதீர்கள் என்கிறார்கள், அப்படி என்றால் என்ன?

சத்குரு:

நான் கூற விரும்புவது என்னவென்றால், நீங்கள் யாரோ ஒரு ஆன்மீகக் குழுவுடனோ அல்லது குருவுடனோ சென்றீர்கள். ஏதோ ஒரு காலகட்டத்தில் அதனுடைய மதிப்பை உணர்ந்தீர்கள். சுவைத்தீர்கள், எதனாலோ தொடப்பட்டீர்கள். இது மிகவும் சிறந்தது என உணர்ந்து அதை நோக்கி சென்றீர்கள். அதனால்தான் உங்கள் வாழ்க்கையை அங்கு அர்ப்பணித்தீர்கள். எனவே அந்த அமைப்பு செய்வதில் பெரிய பிழை ஏதும் இல்லை என்று என்றால் அங்கேயே தொடர்ந்து நீடிக்கத்தான் நான் சொல்வேன். உங்களை ஏதோ ஒன்றில் முழுமையாக முட்டாளாக்கிவிட்டார்கள் என்றால் ஒழிய, அவர்களை விட்டு விலக வேண்டாம்.


அடுத்த வாரம்...

சேகர் கபூர் சத்குருவிடம் கேட்கும் கேள்விகள் மட்டுமல்லாமல், "சத்குருவைப் பற்றி ஒரு குறும்படம் இயக்குவீர்களா?" என்று சேகர் கபூரிடம் பங்கேற்பாளர்கள் கேட்கும் கேள்விகளும் உரையாடலில் இன்னும் சுவாரஸ்யமாக இடம்பெறுகின்றன.