சங்கரன்பிள்ளையின் சுவாரஸ்யமான கதைகளைக் கேட்டாலே சிரிக்கும் பலருக்கு, இங்கே மேலும் இரண்டு சங்கரன்பிள்ளை கதைகள்...

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

4 கில்லாடிகள்!

சங்கரன்பிள்ளை ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவந்தார். தொடர்ந்து அந்த நிறுவனம் நஷ்டத்திலேயே இயங்க, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நிறுவனத்தை மூடிவிட்டார். சங்கரன்பிள்ளையும் அவரது மூன்று நண்பர்களும் வேலை இழந்தனர். எனவே, பிள்ளையும் அவரது நண்பர்களும் தனித்தனியாக அவரவர்க்கு தெரிந்த வியாபாரம் தொடங்கினர். ஆனாலும் யாராலும் வியாபாரத்தை லாபத்தில் நடத்த முடியவில்லை. தனித்தனியாக வியாபாரம் செய்ததால்தான் லாபகரமாக நடத்த முடியவில்லை என்று நினைத்தவர்கள் கூட்டாய் வியாபாரம் செய்யத் திட்டமிட்டனர்.

நண்பர்கள் 4 பேரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலை முன் மொழிந்தனர். கடைசியில் ஒரு வழியாக, ஒரு டாக்ஸி வாங்கி சென்னையில் ஓட்ட முடிவு செய்து டாக்ஸி வாங்கினர். பிறகு சிக்கனம் கருதி அவர்களே கருப்பு மற்றும் மஞ்சள் பெயின்ட் வாங்கி அந்த டாக்ஸிக்கு பூசி டாங்க் நிறைய பெட்ரோல் நிரப்பி முதல் முயற்சியாக சென்னை சென்ட்ரலுக்கு சென்று வண்டியை நிறுத்தினர். யாரும் வண்டியில் ஏறவில்லை. மக்கள் டாக்ஸிக்கு தேடக்கூடிய இடங்களாகத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு இடமாக சென்று வண்டியை நிறுத்திப் பார்த்தனர். ம்ஹும், யாரும் வண்டியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பெட்ரோல்தான் தீர்ந்துகொண்டே இருந்தது. ஆனால், யாரும் வண்டியில் ஏறவில்லை. ஏன் தெரியுமா? அவர்கள் நால்வருமே வண்டியில் உட்கார்ந்திருந்தனர். கூட்டு முயற்சி!!!

கம்பியில்லா தந்தி!

கம்பியில்லா தந்தி!, Kambiyilla thanthi

ஒருமுறை இந்தியாவுக்கான எகிப்து தூதர் தென்னிந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்தார். அப்போது சங்கரன்பிள்ளை அரசின் சுற்றுலாத் துறையில் பணிபுரிந்து வந்தார். தூதரை வரவேற்று அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்லும் பணி சங்கரன்பிள்ளையிடம் ஒப்படைக்கப்பட்டது. சங்கரன் பிள்ளையும் அவரை தென்னிந்தியாவில் உள்ள அனைத்து புகழ்பெற்ற இடங்களுக்கும் அழைத்துச் சென்றார்.

இப்போதைய வாழ்க்கை பற்றி பெருமையாக பேச ஒன்றும் இல்லையெனில், மக்கள் எப்போதும் பழங்கதை பேசி பெருமை தேட ஆரம்பித்து விடுவார்கள். எனவே, இவர்கள் இருவரும் பழம் பெருமையைப் பேச ஆரம்பித்தார்கள். சங்கரன் பிள்ளை, தமிழகத்துக் கோவில்களைக் காட்டி “இவ்வளவு பெரிய பழங்காலத்துக் கோவில்கள் எங்கும் கிடையாது” என்றார், உடனே எகிப்து தூதர், “இல்லையில்லை, இதைவிடப் பெரிய, பழைமையான கோவில்கள் எங்கள் நாட்டில் உள்ளன” என்றார். இன்னொரு முறை சங்கரன்பிள்ளை, ‘‘எங்கள் தேசத்து மொழிகள்தான் மிகவும் பழைமையான மொழிகள்’’ என்றார். தூதரோ, ‘‘உங்கள் மொழிகளுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் மொழிகள் தோன்றிவிட்டன’’ என்றார். இப்படி சங்கரன்பிள்ளை எதைச் சொன்னாலும், அதற்கு அந்தத் தூதர் மறுமொழி சொல்லிக்கொண்டே வந்தார். கடைசியாக சங்கரன் பிள்ளை, ‘‘எங்கள் கலாசாரம்தான்...’’ என்று ஆரம்பிக்கும்போதே இடைமறித்த தூதர், ‘‘எங்கள் மெசபடோமியன் கலாசாரம்தான் உலகிலேயே பழைய கலாசாரம்’’ என்று கூறிவிட்டு, ‘‘நாங்கள் பழம்பெருமை வாய்ந்த ஓர் இடத்தைத் தோண்டியபோது அங்கு செப்புக் கம்பிகளைக் கண்டுபிடித்தோம். அந்தக் கம்பிகள் 3000 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானவை. அப்படியென்றால் என்ன அர்த்தம்? 3000 ஆண்டுகளுக்கும் முன்பாகவே எங்கள் நாட்டில் கம்பி மூலம் தந்திப் பரிமாற்றங்கள் நடந்தன என்றுதானே அர்த்தம்’’ என்று சங்கரன் பிள்ளையைப் பெருமையாகப் பார்த்தார்.

பதில் சொல்ல சங்கரன்பிள்ளைக்கு எப்போதும் இவ்வளவு அவகாசத்தை அந்த எகிப்து தூதர் கொடுத்ததே இல்லை. எனவே வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட சங்கரன்பிள்ளை மெதுவாகக் கூறினார், “நாங்கள் 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ஓர் இடத்தைத் தோண்டிப் போர்த்தோம். அங்கு செப்புக் கம்பிகள் போன்றவை எதுவுமே இல்லை, அப்படியானால் என்ன அர்த்தம்? 5000 ஆண்டுகளுக்கும் முன்பே இந்தியாவில் ‘கம்பியில்லாத் தந்தி’ அதாவது ‘வயர்லெஸ்’ அமலில் இருந்தது என்றுதானே அர்த்தம்?”