இந்த வார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு பாரிஸ், கேப் காட், நியூ யார்க், டென்னஸி ஈஷா மையம் என்று தனது சமீபத்திய தொடர் பயணங்கள் குறித்து நம்முடன் பகிர்கிறார்.

பல வருடங்களுக்குப் பிறகு நான் சில நிகழ்ச்சிகளுக்காக பாரிஸ் நகரில் இருந்தேன். பசுமைக்கரங்கள் திட்டத்தில் நம்முடன் கைகோர்த்திருக்கும் ஈவ் ரோஷே அறக்கட்டளை, 5 கோடி மரங்களை வைத்து முடித்திருப்பதை முன்னிட்டு நடத்தும் விழாவிற்கு என்னை அவர்கள் வற்புறுத்தி அழைத்ததால் சென்றிருந்த போதும், அத்துடன் வேறு பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள நேர்ந்துவிட்டது. அவற்றுள் ஆயிரம் பேர் கலந்துகொண்டு அரங்கம் நிரம்பி வழிந்த ஒரு பொதுக்கூட்டமும் உள்ளடங்கும். மிகவும் குறுகிய காலத்தில் பாரிஸ் நகரில் அற்புதமான வரவேற்பு. அங்கு வருகை தந்திருந்தவர்களில் 30 சதவிகித மக்கள் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு முன்னால், ஆங்கிலம் பேசாத நாடுகளில் மொழிபெயர்ப்பதற்கும், ஊடுருவிச் செல்வதற்கும் அதிக நேரமும் முயற்சியும் தேவைப்படும் என்று, ஆங்கில மொழியில் பேசும் நாடுகளுக்கு மட்டும் செல்வதாக நான் முடிவெடுத்திருந்தேன். ஆனால் மிகவும் உற்சாகமான தன்னார்வத் தொண்டர்களால், என் முந்தைய முடிவை நான் மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. ஐரோப்பாவும் சீனாவும், மொழியின் எல்லைகளைக் கடந்து என்னை அவர்கள்பால் மீண்டும் ஈர்த்துக்கொண்டு இருக்கின்றன.

பிறகு கேப் காடில், ராபர்ட்.F.கென்னடி அறக்கட்டளையின் 26வது ஆண்டை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு நேரே பறந்து சென்றோம். 'மனித உரிமைகள்' பிரிவில் அவர்கள் குறிப்பிடத்தக்க பணியாற்றி வருகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு அற்புதமான கோல்ஃப் நிகழ்ச்சியையும் அவர்கள் நடத்தினார்கள். அதுமட்டுமல்ல, சொன்னால் அசந்துவிடாதீர்கள், நம் குழு போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது, நிச்சயம் அது என் முயற்சியால் மட்டுமல்ல.

நியூயார்க் நகரில் நடந்த தனது 35வது ஆண்டு விழாவிற்கு, பாரதிய வித்யா பவன் என்னையும் தீபக் சோப்ரா அவர்களையும், ஒரு "இன் கான்வர்சேஷன்" நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள். அந்நிகழ்ச்சியை சந்திரிகா டன்டன் நடுநின்று நடத்திவைத்தார். அங்கு பரவிக்கிடந்த இந்தியர்கள் தங்கள் சிறந்த உடைகளில் அங்கே கூடியிருந்தனர். அறிவியல் துறையிலும் மனித விழிப்புணர்விலும் தீபக் அவர்கள் தான் செய்யும் பணியின் ஒரு பகுதியை நம்முடன் பகிர்ந்து கொண்டார். மீதமிருந்த 2 நாட்கள் புத்தக வெளியீட்டுக் குழுவுடன் நாளுக்கு 20 மணிநேர விகிதத்தில் அடைபட்டுக் கிடந்தேன்.

இப்போது ஒற்றை எஞ்ஜின் கொண்ட பைப்பர் மலிபு விமானத்தில், 26,000 அடி உயரத்தில், ஆதியோகியின் ஆலயம் வீற்றிருக்கும் டென்னஸி ஈஷா மையம் நோக்கிப் பறந்துகொண்டு இருக்கிறேன். அங்கு ஒரு நாள், ஹூஸ்டனில் ஒரு நாள், சான் ஃபிரான்சிஸ்கோவில் 2 நாட்கள், டென்னஸி மையத்தில் 3 நாட்கள், டெட்ராயிட் நகரில் ஒரு நாள், நியூ யார்க் நகரில் ஒரு நாள், நியூ ஜெர்சியில் ஒரு நாள், பிறகு மும்பை செல்வேன். பிரயாண முகவரைப் போல சொல்லிக்கொண்டு இருக்கிறேன்!

Love & Grace